வாழ்க்கை எவ்வளவு பரபரப்பாக மாறிக்கொண்டு இருக்கிறதோ, அந்த அளவு உடலும் பாதிப்புக்கு ஆளாகிறது. இந்தப் பாதிப்புகளில் முதன்மையானது… வயிற்றுப் புண் (அல்சர்).
”இன்றைய அவசர வாழ்க்கைச் சூழலில் நேரம் தவறிச் சாப்பிடுவதாலும், பட்டினி கிடப்பதாலும், காரம் நிறைந்த உணவுகளை அதிகம் ருசிப்பதாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது. அலட்சியம் காட்டினால், இது நாளடைவில் புற்றுநோயாக மாறுவதற்குக்கூட வாய்ப்புகள் உண்டு” என்கிறார் ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் பொது அறுவைச் சிகிச்சை நிபுணரும் எண்டோஸ்கோப்பிக் மருத்துவருமான தீபக் சுப்ரமணியன். வயிற்றுப் புண் சம்பந்தமான நமது சந்தேகங்களுக்கு, அவர் அளித்த பதில்கள் இங்கே…
”வயிற்றுப் புண் என்றால் என்ன?”
”நாம் சாப்பிடும் உணவை செரிக்கச் செய்வதற்காக நம்முடைய வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் (Hydrochloric acid) சுரக்கிறது. அதிகக் காரம் அல்லது எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை அதிகமாகச் சாப்பிடும்போது, இந்த அமிலம் அதிகமாகச் சுரக்கும். இந்த அமிலம், வயிறு மற்றும் முன் சிறுகுடலின் சுவர்களில் உள்ள ‘மியூகோஸா'(Mucosa) படலத்தைச் சிதைப்பதால், புண் ஏற்படுகிறது. இதைத்தான் வயிற்றுப் புண் என்கிறோம். பொதுவாக, நமக்குப் பசி உணர்வு தோன்றியதுமே, இந்த அமிலம் சுரக்க ஆரம்பித்துவிடும். பசி ஏற்படும்போது சாப்பிடாமல் இருந்தாலும் அல்லது நேரம் கழித்துச் சாப்பிட்டாலும் இவ்வாறு நிகழ்வதற்கு வாய்ப்பு உண்டு.
குறிப்பாக, காலை உணவைத் தொடர்ந்து தவிர்ப்பவர்களுக்கு வயிற்றுப் புண் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தவிர, கலப்பட உணவு, சுகாதாரமற்ற குடிநீர், மோசமான சுற்றுச்சூழல் ஆகியவற்றின் விளைவாக ஹெலிகோபாக்டர் பைலோரை (Helicobacter pylori) எனப்படும் பாக்டீரியாவினாலும் வயிற்றுப் புண் உண்டாகிறது. செரிமான மண்டலத்தைப் பொறுத்தவரை, வயிறு மற்றும் முன் சிறுகுடலில் புண் ஏற்படுகிறது. வயிற்றில் புண் ஏற்பட்டால், அதை ‘கேஸ்ட்ரிக் அல்சர்’ (Gastric ulcer) என்றும் முன் சிறுகுடலில் புண் ஏற்பட்டால் அதை ‘டியோடினல் அல்சர்’ (Duodenal ulcer) என்றும் சொல்வோம். பொதுவாக இரண்டையும் ஒட்டுமொத்தமாகச் சேர்த்து ‘பெப்டிக் அல்சர்’ (Peptic ulcer) என்பர். பெரும்பாலும், 20 முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கே வயிற்றுப் புண் பிரச்னை அதிகமாக உண்டாகிறது.”
”வயிற்றுப் புண் ஏற்பட்டிருப்பதை எந்தெந்த அறிகுறிகள் மூலமாகத் தெரிந்துகொள்ள முடியும்?”
”வயிற்றின் மேல் பகுதியில் எப்போதும் வலி இருந்துகொண்டே இருக்கும். சாப்பிட்ட பின் இந்த வலி குறைந்தால், அது டியோடினல் அல்சர். சாப்பிட்டதும் வலி அதிகமானால், அது கேஸ்ட்ரிக் அல்சர். இவற்றைத் தவிர, வாந்தி, குமட்டல், வாயுக் கோளாறு, உடல் எடைக் குறைதல், சாப்பிடும் உணவின் அளவு குறைதல் போன்றவையும் குடல் புண்ணுக்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
குடல் புண் இருப்பதாகத் தோன்றினால், எண்டோஸ்கோப்பி பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது. வாய் வழியாகக் குழாயைச் செலுத்தி செய்யப்படும் இந்தப் பரிசோதனை மூலம் ‘திசு மாதிரி’யும் (பயாப்சி) எடுத்து பரிசோதனை செய்யலாம். இதை வைத்து எந்த மாதிரியான வயிற்றுப் புண் ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து, அதற்கேற்ற சிகிச்சை அளிக்க முடியும்.”
”வயிற்றுப் புண் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்?”
”கேஸ்ட்ரிக் அல்சர் தொடர்ந்து இருந்தால், அது புற்றுநோயாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. அதிலும், 40- வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வாய்ப்புகள் சற்று அதிகம். எனவே, அவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏற்கெனவே வயிற்றுப் புண் இருப்பவர்களுக்கு மேலும் அதிகமாக ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கும்போது புண்ணில் ரத்தக் கசிவு ஏற்பட்டு அது வாந்தியாகவும் வெளிவரலாம். மேலும், அதிக அமிலச் சுரப்பினால் குடலில் ஓட்டை விழுவதற்கான வாய்ப்பும் உண்டு. அப்படி ஓட்டை விழுந்தால் அறுவைச் சிகிச்சை மூலம் மட்டுமே அதைக் குணப்படுத்த முடியும்.”
”வயிற்றுப் புண் வருவதற்கு மன அழுத்தமும் ஒரு காரணம் என்கிறார்களே உண்மையா?”
”ஓரளவு உண்மைதான். ஏதேனும் கவலையால் மனம் பாதிப்பு அடையும்போது, அமிலத்தின் சுரப்பும் அதிகமாகிறது. எனவே, இதன் தொடர்ச்சியாகக் குடல் புண் உருவாகலாம். அதனால், முடிந்த வரை மனதை அமைதியாக வைத்துக்கொள்வது நல்லது.
சில வலி நிவாரணிகளைத் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளும்போதும் வயிற்றுப் புண் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மட்டுமே இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.”
”வயிற்றுப் புண் வராமல் தவிர்க்க முடியுமா?”
”நிச்சயமாகத் தவிர்க்க முடியும். முதலில் நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். புகை பிடிப்பவர்களுக்கும் மது அருந்துபவர்களுக்கும் வயிற்றுப் புண் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, இந்தப் பழக்கங்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். காரம் நிறைந்த மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை எவ்வளவு குறைக்க முடியுமோ, அவ்வளவு நல்லது. எடையைக் குறைக்கிறேன் என்று பட்டினி கிடக்கக் கூடாது. உடல் இயக்க நிலையில் இருக்கும்போதுதான் உணவு எளிதில் செரிமானம் ஆகும். சாப்பிட்டதும் படுத்தால், உணவு செரிமானத்துக்கு நீண்ட நேரம் ஆகும். இதனால், வயிற்றுக்குள் அதிக நேரம் உணவு தங்கி இருப்பதால், செரிமானத்துக்காக அமிலமானது அதிகமாகச் சுரக்க வேண்டி வரும். எனவே, சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்தே படுக்க வேண்டும். இந்தப் பழக்கங்களை எல்லாம் சரிவரக் கடைப்பிடித்தால், நிச்சயம் வயிற்றுப் புண் வராமல் தடுக்கலாம்!”