டயட்டில் இருப்போர் பலர் மதிய வேளையில் சப்பாத்தி, நாண் போன்றவற்றை சாப்பிடுவார்கள். அப்படி செய்பவர்கள் அதற்கு சைடு டிஷ்ஷாக தயிர் கொண்டைக்கடலை சப்ஜியை செய்து சாப்பிடலாம். பொதுவாக இது சன்னா மசாலா போன்று தான் இருக்கும். ஆனால் இதில் தயிர் சேர்த்து செய்ய வேண்டும்.
சரி, இப்போது அந்த தயிர் கொண்டைக்கடலை சப்ஜியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை – 200 கிராம் (4-5 மணிநேரம் நீரில் ஊற வைத்தது)
வெங்காயம் – 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2-3
தக்காளி – 1 (நறுக்கியது)
இஞ்சி – 1 இன்ச்
பூண்டு – 5-6 பற்கள்
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
சன்னா மசாலா – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பட்டை – 1 இன்ச்
கிராம்பு – 2
பிரியாணி இலை – 1
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஊற வைத்துள்ள கொண்டைக்கடலையை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 6-7 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு தக்காளியை அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பிரியாணி இலை, பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பின் அரைத்து வைத்துள்ள வெங்காய கலவையை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் 2 நிமிடம் வதக்கி விட்டு, பின் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து கிளறி, அடுத்து அடித்து வைத்துள்ள தயிரை ஊற்றி 2 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
பின் அதில் கரம் மசாலா, சன்னா மசாலா, மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து 1 நிமிடம் கிளறி, குக்கரை திறந்து தேவையான அளவு நீருடன் கொண்டைக்கடலையை வாணலியில் சேர்த்து, நன்கு கெட்டியாகும் வரை கொதிக்கவிட்டு இறக்கினால், தயிர் கொண்டைக்கடலை சப்ஜி ரெடி!!!