பொதுவாக குளிர்காலத்தில் காய்ச்சல், சளி போன்றவற்றால் அதிகம் அவஸ்தைப்படக்கூடும். அதிலும் தற்போது மழையும் சேர்ந்து கொட்டுவதால், பலருக்கு நோய்களானது விரைவில் தொற்றிக் கொள்ளும். எப்படியெனில் வானிலையானது மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் போது, பலருக்கு நன்கு சூடாகவும், வெதுவெதுப்பாகவும் ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். இதனால் தெருக்கடைகளில் விற்கப்படும் பஜ்ஜி, போண்டா போன்றவற்றை வாங்கி சாப்பிடுவோம்.
இரவில் மட்டும் காய்ச்சல் வருவதற்கான காரணங்கள்!!!
இப்படி வாங்கி சாப்பிடுவதால், பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களானது எளிதில் உடலை தாக்குகின்றன. அதுமட்டுமின்றி இக்காலத்தில் உடலின் நோயெதிர்ப்பு மண்டலமானது சற்று பலவீனமடைந்து மந்த நிலையில் இருக்கும். எனவே நோய்களானது விரைவில் தொற்றிக் கொள்ளும் வாய்ப்புகளும் அதிகம்.
ஆனால் குளிர்காலத்தில் காய்ச்சல், சளி போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து விடுபட ஒருசில விஷயங்களை மனதில் கொண்டு அதன்படி நடக்க வேண்டும். இங்கு அந்த விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அதன்படி நடந்தால், நிச்சயம் காய்ச்சல் மற்றும் சளியின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
அதிகளவு ஆல்கஹால் வேண்டாம்
குளிர்காலத்தில் ஆல்கஹால் குடிக்க வேண்டுமென்று தோன்றும். ஆனால் அப்படி குடித்தால், அது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு இடையூறை ஏற்படுத்தி, எளிதில் நோய்களின் தாக்கத்திற்கு உள்ளாக்கும். எனவே குளிர்காலத்தில் அளவுக்கு அதிகமாக குடிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டாம்.
டீயுடன் எலுமிச்சை மற்றும் தேன்
குளிர்காலத்தில் காய்ச்சல், சளி போன்றவற்றில் இருந்து விலகி இருக்க ஒரு கப் சூடான ப்ளாக் அல்லது க்ரீன் டீயுடன், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்தால், அவை உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவித்து நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.
புரோட்டீன் உணவுகள் அவசியம்
குளிர்காலத்தில் நோயெதிர்ப்பு மண்டலமானது மிகவும் பலவீனமாக இருக்கும். இதற்கு முக்கிய காரணம் உடலில் புரோட்டீன் குறைவாக இருப்பது தான். இவையே நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலைக் குறைக்கிறது. எனவே குளிர்காலத்தில் புரோட்டீன் உணவுகளை அதிகம் உட்கொண்டு வர வேண்டும்.
கை சுத்திகரிப்பானைப் பயன்படுத்தவும்
அலுவலகத்தில் கம்ப்யூட்டர் கீபோர்டிலேயே பல ஆயிரக்கணக்கான பாக்டீரியாக்களானது இருக்கும். எனவே எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொள்ளும் முன்னரும் கை சுத்திகரிப்பானைப் (Hand Sanitizer) பயன்படுத்தி பின் உட்கொண்டால், பாக்டீரியாக்களின் தாக்கத்தைத் தடுத்து, காய்ச்சல், சளி போன்றவை வராமல் தடுக்கலாம்.
ஜிங்க் உணவுகள்
ஜிங்க் சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொண்டு வந்தால் நோயெதிர்ப்பு மண்டலமானது வலிமையடையும். அதிலும் கடல் சிப்பி, பசலைக் கீரை, பூண்டு, முட்டை, நண்டு போன்றவற்றை குளிர்காலத்தில் சாப்பிட்டு வருவது உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
தயிரை தவிர்க்கவும்
குளிர்காலத்தில் தயிர் உட்கொள்வதைத் தவிர்த்தால், நிச்சயம் சளி, காய்ச்சல் போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
ஜூஸ்கள்
ஜூஸ்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். எப்படியெனில் ஜூஸ்களானது உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதால், அவை உடலில் நோய்களின் தாக்கத்தைக் குறைத்து, உடலைப் பாதுகாக்கும்.
வியர்வை அவசியம்
எப்போதும் நுரையீரலானது சுத்தமாக இருக்க வேண்டும். அதற்கு தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இப்படி உடற்பயிற்சி செய்தால், வியர்வையானது வெளியேறி, குளிர்காலத்தில் உடலில் உள்ள டாக்ஸின்களை வியர்வையின் மூலம் வெளியேற்றும். இதனால் காய்ச்சல் மற்றும் சளியின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
போதிய தூக்கம் அவசியம்
தூக்கமின்மையால் கூட உடலில் நோய்களின் தாக்கமானது அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே குளிர்காலத்தில் நல்ல நிம்மதியான தூக்கத்தை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.
வைட்டமின் சி
உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கும் செயல்பாட்டிற்கும் வைட்டமின் சி மிகவும் இன்றியமையாதது. எனவே குளிர்காலத்தில் வைட்டமின் சி அதிகம் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அன்றாடம் உட்கொள்ள வேண்டும். அதிலும் குளிர்காலத்தில் ஆரஞ்சு பழத்தின் சீசன் என்பதால், அதனை தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள்.