23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
2183b6ee 5256 4fd1 9202 d1fe65dfab86 S secvpf
மருத்துவ குறிப்பு

படுக்கைப் புண்கள், நோய்களை போக்கும் கானா வாழை

கானா வாழை இது சாதாரணமாக நீர்வளம் மிக்க நிலப்பகுதியில் புல்லைப் போல முளைத்திருக்கும் ஓர் பூண்டு இனம். வாழையைப் போலத் தோற்றமுடைய சிறிய வடிவிலான இலைகளைப் பெற்றிருக்கும். கானா வாழை நல்ல நீர் வளமும் செழிப்பும் உள்ள நிலத்தில் நன்கு வளரக் கூடியது. இலைகள் குழகுழப்பும் நீர்த்தன்மையும் பெற்று சற்று தடிப்புடையதாக விளங்கும்.

தண்டுகள் வாழையைப் போல மிக்க நீர்ச்சத்து உடையதாக இருக்கும். எனவே ஓரு முறை வேர் ஊன்ற ஆரம்பித்து விட்டால் பல ஆண்டுகளுக்குக் கூட அது தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளும் தன்மை உடையது. கானா வாழையின் தண்டுகள் மாவுச்சத்தும், சளிச்சத்தும் மிகுதியாகக் கொண்ட ஒன்று ஆகும். கானா வாழை காய்ச்சலைப் போக்கக் கூடிய அற்புத மூலிகை ஆகும். இது மிக்கக் துவர்ப்புத் தன்மை உடையது. ஆகவே வற்றச் செய்யும் தன்மை மிகவும் உடையது ஆகும்.

உடல் உறவில் உற்சாகம் தரக்க கூடியது. உணர்வைத் தூண்டக் கூடியது. ரத்தத்தைத் தூய்மைப்படுத்தும் மருத்துவ குணம் மிக்கது. சிறுநீரைப் பெருக்கும் தன்மை வாய்ந்தது. வீக்கத்தைக் கரைக்க கூடியது. பூஞ்சக் காளான் நோய்களைப் போக்குவிக்கக் கூடியது. நோய் செய்யும் நுண்கிருமிகளைப் போக்க வல்லது. உடல் உஷ்ணத்தைத் தணிக்க வல்லது. தோல் நோய்கள் குறிப்பாக தொழு நோய்க்கு சிறந்த மருந்தாக விளங்குவது. ஆறாப்புண்களையும், ஆற்றும் தன்மை மிக்கது. ரத்தப்போக்கு, ரத்தக் கசிவை நிறுத்தும் தன்மை மிக்கது.

சீதளத்தை உண்டாக்கக் கூடியது. நாட்டு மருத்துவத்தில் கானா வாழை ஓர் துயர் நீக்கியாக புத்துணர்வு தருவதாக இருக்கக் கூடிய ஓர் மருந்தாகப் பன்படுத்தப்படுகின்றது. கானா வாழையில் கலந்து இருக்கும் வேதிப்பொருட்கள் நுண்கிருமிகளைப் பூஞ்சக் காளான்களைப் போக்கும் கிருமிகளை ஒழித்துப் புண்களை விரைவில் ஆற்றும் சக்தியைப் படைத்தது என்பதைப் பழங்குடி மக்களும் பழகிய தமிழரும் புரிந்து வைத்திருந்தனர். கானா வாழை ஓர் புரதச்சத்தின் கருவூலமாகவும் திகழ்வதால் கால் நடைகளுக்கு மட்டும் உணவாகத் திகழாமல் மானுடர்க்கும் நல்ல உணவாகத் திகழ்கிறது.

கானா வாழை ஓர் சிறந்த நீர்ப் பெருக்கியாகவும், உடலுள் தேங்கி கிடக்கும் உப்புச் சத்தை வெளியேற்றும் துப்புரவுப் பணியாளனாகவும் பயன் படுகின்றது. கானா வாழை ஓர் வீக்கம் கரைச்சியாகவும் பணி செய்கிறது. கால்களில் நீர் தேங்கி வீக்கமும் வலியும் செய்கின்ற வாத நோயில் கானா வாழை ஓர் கை வந்த மருந்தாக இருந்து நோயைத் தணிக்கிறது. கானா வாழையைக் கீரையாக உள்ளுக்குச் சாப்பிடுவதாலும், கானா வாழைச் சாற்றை மேலுக்கு பூசி வைப்பதாலும் வீக்கமும் வலியும் கரைந்து போகும்.

கானா வாழை சிறுநீரகப் பைகள், கல்லீரல் மற்றும் மண்ணீரல், நுரையீரல், இரையறை ஆகியவற்றுக்கு பலம் தருவதோடு அவற்றின் கோளாறுகளைச் சீர் செய்வதாக விளங்குகிறது.மேலை நாட்டு மருத்துவர்கள் கானா வாழைக்கு வற்றச் செய்யும் தன்மையும், உள்ளழல் ஆற்றும் தன்மையும் உள்ளது என்று தெரிவிக்கின்றனர்.

இந்திய மருத்துவர்கள் கானா வாழை ஓர் வாந்தியுண்டாக்கி ஆகவும், மாதவிலக்குத் தூண்டியாகவும், நெஞ்சகச் சளியைத் கரைக்ககக் கூடியதாகவும், காய்ச்சல் தனிப்பானாகவும், ரத்தத்தை உறைய வைக்கும் தன்மைமிக்கதாகவும், மலமிளக்கியாகவும் பயன்தருகின்றது என்பர். எகிப்து தேசத்தவரும் சீனரும் உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடியது என்றும் உடலுக்கு உரம் தரவல்லது என்றும் தெரிவிக்கின்றனர். சீன மருத்துவர்கள் கானா வாழையை உடலின் ரத்தத்தில் மிகுந்துள்ள உஷ்ணத்தை தணிக்கவும், ரத்தக் கசிவைத் தடுக்கவும் மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.

மேலும் குளிர்காற்றின் விளைவுகளைப் போக்கவும், வீக்கத்தை கரைக்கவும், வலியைப் போக்கவும், நெஞ்சகக் கோளாறுகளை நீக்கிச் சுவாசப் பாதையைச் சீர் செய்யவும் மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். கானா வாழையைப் பொது வாக உலகம் முழுவதிலும் சிறுநீர்ப் பாதையில் ஏற்பட்ட தொற்றுகளைப் போக்கவும், நார் போன்ற சளி கெட்டுப்பட்டு கையில் பசை போல ஒட்டும் தன்மையும், நுரையீரலினுள்ளும் சுவாசப் பாதையினுள்ளும் ஒட்டிக் கொண்டு துன்பம் செய்யும் நிலையில் அதை நீக்கி ஆரோக்கியத்தை நிலை நிறுத்தும் வகையிலும், கண்கள் சிவந்து எரிச்சல் ஏற்படும்போது இயல்பு நிலைக்குக் கண்களைக் கொண்டு வந்து ஆரோக்கியத்தை நிலை நாட்டும் பொருட்டு மேற்பற்று மருந்தாகவும், எரிச்சலைத் தணிக்க ஓர் குளிரூட்டி மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருவது தெளிவாகிறது.

கானா வாழையை மருந்தாக பயன்படுத்துவது எப்படி?

கானா வாழைச்சாறு எடுத்து அல்லது நீரில் இட்டு தீநீர் ஆக்கி வாயைக் கொப்பளிப்பதால் வாயில் பற்றித் துன்பம் தருகின்ற நோய்க் கிருமிகள் விலகிப்போகும். இதனால் தொண்டைக்கட்டு, தொண்டைக் கம்மல், டான்சில் எனப்படும் தொண்டை அழற்சி, குரல்வளைத் தொடர்பான தொல்லைகள் அத்தனையும் அகன்று போகும். கானா வாழை இலையை அரைத்து மேல் பற்றாகப் போடுவதனால் பால்தரும் தாய்மார்களுக்குப் பால் கட்டிக் கொண்டு பல துளைகள் கொண்ட கட்டியாக வீக்கமும், எரிச்சலும், வேதனையும் தரக்கூடிய மார்புக் கட்டி விரைவில் கரைந்து குணமாகும்.

கானா வாழையை அடிக்கடி உணவாகச் சமைத்து உண்ணுவதால் ஆண்மையை அதிகரித்துப் பெண்ணின் பால் இச்சையை உண்டாக்கும். பிள்ளைப் பேற்றுக்கான விந்துக் குறைபாடுகளையும் விலக்கி வைக்கும். ஒரு அவுன்ஸ் அளவு சுமார் 20 மி.லி. அளவு கானா வாழைச் சாற்றை உள்ளுக்குக் குடிப்பதாலோ அல்லது தீநீர் இட்டுக் குடிப்பதாலோ ரத்தக் கழிச்சல், வயிற்றுப் புண்ணால் வயிற்றில் ஏற்படும் ரத்தக் கசிவு, ஆசன வாயினின்று கசியும் ரத்தம் ஆகியன கட்டுப் படுவதோடு அதற்கான நோயும் குணப்படும்.

கானா வாழை இலை கைப்பிடி அளவு எடுத்து அதனோடு பத்து மிளகு தூள் செய்து சேர்த்து சுவைக்காக பனை வெல்லமோ உப்போ சேர்த்துத் தீநீராக்கிக் குடிப்பதாலோ கடுமையான காய்ச்சல் காணாமல் போவதோடு வலியும் விலகிப் போகும். கானா வாழையைச் சமூலமாக எடுத்து அதற்குச் சமமான அளவு அறுகம்புல் சேர்த்து அரைத்து அந்தி சந்தி என தினம் இரு வேளை நெல்லிக்காய் அளவு உண்டு வர விரைவில் ரத்த, சீதபேதி நின்றுவிடும்.

கானா வாழை இலையைச் சுத்தம் செய்து அதனுடன் சம அளவுக்கு கீழக்காய் நெல்லி சமூலத்தைச் சேர்த்து நன்கு மைபோல அரைத்துப் புளிப்பில்லாத புதிய தயிரில் கலந்து தினம் 3 வேளை என உள்ளுக்குக் கொடுப்பதால் பெண்களின் வெள்ளைப் போக்கு விரைவில் குணமாகும். பால்வினை நோயால் பாதிக்கப்பட்ட ஆண்களின் இந்திரிய ஒழுக்கு கூட அடங்கிப் போகும். கானா வாழை இலையை அரைத்து அதனோடு சிறிது மஞ்சள் தூள் கலந்து நன்கு உறவாகும்படிக் குழைத்துப் படுக்கைப் புண்கள் மேல் பூச்சாகப் பூசுவதாலும் அல்லது கானா வாழை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு புண்களின் மேல் தூவி வருவதாலும் படுக்கைப் புண் மட்டுமல்லாது நீண்ட நாட்பட்ட புண்கள் கூட ஆறிப் போகும்.

கானா வாழை இலையைக் கசக்கி சாறு பிழிந்து தேனோடு சிறிது மஞ்சள் சேர்த்துக் குழைத்து முகப் பருக்களின் மேல் பூசி வர விரைவில் பருக்கள் உடைந்து காயம் விரைவில் ஆறிப் போகும். கானா வாழையை உணவாக அடிக்கடிப் பயன்படுத்துவதால் புற்று நோய், நெறிக்கட்டி நோய் ஆகியன தடுக்கப்பெறும்.
க.சக்தி சுப்பிரமணியன்
(சித்த மருத்துவர்)
2183b6ee 5256 4fd1 9202 d1fe65dfab86 S secvpf

Related posts

குழந்தையின் அழுகைக்கு அர்த்தங்கள் ஆயிரம்!

nathan

நீங்கள் தவறான டயட்டை பின்பற்றுகிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் 15 அறிகுறிகள்!!!

nathan

டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் தயாரிக்கும் முறை: 3 மணி நேரத்தில் குடித்துவிட வேண்டும் – அரசு …

nathan

தெரிஞ்சிக்கங்க…தூக்கமின்மையால் அவதிபடுறீங்களா?

nathan

அலட்சியப்படுத்தாதீங்க… உங்க கல்லீரலில் பாதிப்பு இருக்கு- காட்டிக்கொடுக்கும் அறிகுறிகள் இதோ…!

nathan

உங்க வயிற்றில் வளர்வது ஆணா? பெண்ணா? அப்ப உடனே இத படிங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா குப்பைமேனி இலையை இந்த முறையில் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள்..!!

nathan

வீட்டில் கர்ப்பத்தை உறுதி செய்வது எப்படி

nathan

இதோ இதய நலனை அதிகரிக்க செய்யும் எளிய ஆயுர்வேத வழிமுறைகள்!

nathan