அனைவருக்குமே ஃபாஸ்ட் புட் உணவுகளை உட்கொண்டால் நிறைய ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் என்று தெரியும். இருப்பினும் அதன் சுவையால் பலர் அதற்கு அடிமையாக இருப்பதால், அதனை சாப்பிடும் பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. மேலும் அதனை உட்கொள்வதற்காக பல்வேறு காரணங்களையும் பட்டியலிட ஆரம்பிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி வாரம் ஒருமுறை மட்டும் தான் சாப்பிடுகின்றேன் என்றும் சொல்கின்றனர். ஆனால் அப்படி ஒவ்வொரு வாரமும் ஒருமுறை உட்கொண்டாலே பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பது நிச்சயம் என்பது தெரியுமா? அதிலும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சனைகளை சந்திப்பது நிச்சயம். சரி, இப்போது ஏன் ஃபாஸ்ட் புட் உணவுகளை உட்கொள்ள வேண்டாம் என்று சொல்கின்றனர் என்றும், அப்படி உட்கொண்டால் என்ன பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் என்பதையும் பார்ப்போமா!!!
உடல் பருமன்
பொதுவாக ஃபாஸ்ட் புட் உணவுகளை குழந்தைகளும், இளம் தலைமுறையினரும் தான் அதிக அளவில் உட்கொள்கின்றனர். அதனால் வயதானவர் போன்று இளம் வயதிலேயே உடல் பருமனால் அவஸ்தைப்படுகின்றனர். ஏனெனில் ஃபாஸ்ட் புட் உணவுகளில் கலோரிகளும், கொழுப்புக்களும் வளமாக நிறைந்துள்ளது. குறிப்பாக பர்கர், ப்ரைடு சிக்கன் போன்றவற்றில் தான் அதிக அளவில் கொழுப்புக்களும், கலோரிகளும் நிறைந்துள்ளன.
நீரிழிவிற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்
ஃபாஸ்ட் புட் உணவுகளில் சர்க்கரை மற்றும் கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், அவை உடலின் இயக்கத்திற்கு வேண்டிய ஊட்டச்சத்துக்களை பெறவிடாமல் தடுப்பதோடு, இளம் வயதிலேயே நீரிழிவு ஏற்படுவதற்கு வழிவகுக்கும். அதுமட்டுமல்லாமல் இரத்த அழுத்தம், காது கேளாமை போன்றவற்றையும் ஏற்படுத்தும்.
இதய நோய்
ஆம், ஜங்க் உணவுகளால் இதய நோயால் விரைவில் பாதிக்கப்படக்கூடும். குறிப்பாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவற்றால் தான் அவஸ்தைப்படுவோம். மேலும் ஆய்வு ஒன்றிலும் ஃபாஸ்ட் புட் உணவுகளை அதிகம் உட்கொண்டு வந்தால், இதயத்தில் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடு
ஃபாஸ்ட் புட் உணவுகளை உட்கொண்டு வந்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு உள்ளாகக்கூடும். எனவே ஜங்க் உணவுகள் உட்கொள்வதை அறவே தவிர்த்து, பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ள ஆரம்பியுங்கள்.
பணத்தை வீணாக்குவது
முக்கியமாக ஃபாஸ்ட் புட் உணவுகளை உட்கொள்வதால் பணம் தான் வீணாகிறது. ஃபாஸ்ட் புட் உணவுகளால் பணம் அதிகம் செலவாவதோடு, எவ்வளவு தான் சாப்பிட்டாலும் வயிறு நிறையாது. அதுமட்டுமின்றி, மருத்துவருக்கு அதிக செலவு செய்ய வேண்டியும் இருக்கும்.