கிழங்கு வகைகளில் மாவுச்சத்துதான் அதிகமாக உள்ளது. அதனால்தான் இவை உடலுக்கு அதிக ஆற்றலை அளிக்கின்றன.
அதுவும், உருளைக்கிழங்கில் மிக அதிக மாவுச்சத்து இருக்கிறது.
சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு போன்ற கிழங்குகளில் நார்ச்சத்தும் குறைந்த அளவிலேயே உள்ளது. இதுபோன்ற கிழங்குகளை சரியான முறையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆனால், அவற்றை எண்ணெயில் பொரித்தெடுத்து பயன்படுத்தினால் கலோரி சேர்ந்து, உடல் பருமன் மற்றும் வேறு பல பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திவிடும்.
பெரும்பாலும் உடலுக்குத் தேவையான மாவுச்சத்துக்கள் அனைத்தும் நாம் தினமும் சாப்பிடும் சாதம், கோதுமை, தானியங்களில் இருந்து கிடைத்துவிடுகிறது. அதனால், கிழங்கு வகைகளைத் தவிர்த்தாலும் நலமாக வாழ முடியும்.
உருளைக்கிழங்கை யாரெல்லாம் சாப்பிடலாம்?
உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளரும் குழந்தைகள், கடின உடல் உழைப்பாளிகள், விளையாட்டு வீரர்கள் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.
யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?
சர்க்கரை நோயாளிகள், அதிக எடை உள்ளவர்கள் கண்டிப்பாக உருளைக்கிழங்கைத் தவிர்க்க வேண்டும். வாயுப் பிரச்னை, வாத நோய் மற்றும் மூலநோய் பிரச்னை உள்ளவர்கள் கிழங்கு வகைகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் உருளைக்கிழங்கை அறவே சாப்பிடக் கூடாது.
கிழங்கு வகைகளை எப்படிச் சாப்பிடலாம்?
வேகவைத்துச் சாப்பிடுவதுதான் நல்லது. இன்றோ ருசிக்காக, எண்ணெயில் வறுத்து, பொரித்துச் சாப்பிடுகின்றனர். எண்ணெயில் உள்ள கொழுப்பும் உடலுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்திவிடும்.
மேலும், கிழங்கில் உள்ள சத்துக்கள் உடலில் சேராமல் போகும். கருணைக் கிழங்கு நீங்கலாக ஏனைய கிழங்குகள் அனைத்துமே வாயுப் பிரச்னையையும் வாத நோயையும் ஏற்படுத்தக்கூடியவை என்பதால் கிழங்குகளை அளவோடு சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்துக்கு நல்லது.