வருடக் கணக்கில் கண்ட கண்ட ஜங்க் உணவுகளை சாப்பிட்டு தங்கள் உடம்பை ஏற்றி வைத்திருக்கும் சிலர், ஒரே வாரத்தில் எடையைக் குறைக்க வேண்டுமென்று விரும்புவார்கள். ஆனால் இதனால் ஏற்படும் ரிஸ்க்குகளையும் பக்க விளைவுகளையும் அவர்கள் அறியாமல் போய்விடுவார்கள்.
உடல் எடையைக் குறைப்பதற்காகக் கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதால் பல்வேறு பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் திடீரென்று எடை குறைவதால் அவர்களுக்கு மோசமான மன அழுத்தங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
பொறுமையாகக் கையாள வேண்டிய எடை குறைப்பு விஷயத்தில், நீங்கள் அவசரப்படுவதால் சந்திக்க நேரிடும் 10 ரிஸ்க்குகள் குறித்த விவரங்கள் இதோ…
வேகம் விவேகமல்ல
விரைவான எடை குறைப்பு நிரந்தரத் தீர்வைத் தராது. எடை குறைப்பு என்ற அந்தத் திடீர் மாற்றத்தை உங்கள் உடம்பால் தாங்க முடியாது. எனவே, அதே வேகத்தில் உடம்பில் மீண்டும் எடை அதிகமாவதற்குத் தான் வாய்ப்புள்ளது.
நீர்ச்சத்து குறையும்
நீங்கள் வேகமாக உடல் எடையைக் குறைக்கும்போது, உங்கள் உடம்பில் உள்ள நீர்ச்சத்தும் படுவேகமாகக் குறைய ஆரம்பிக்கும். இப்படிச் செய்வதால் மயக்கம், கிறுகிறுப்பு, இதய வியாதிகள் ஏற்பட நிறைய வாய்ப்புள்ளது. தசைகளும் பாதிப்படையலாம். மேலும் நீர்ச்சத்து குறைந்தாலே எடையும் நன்றாகக் குறைந்து விடுமே என்ற டெக்னிக்கையும் சிலர் உபயோகிக்க நினைப்பார்கள். ஆனால் அது கெடுதல்தான்! குறைந்த நீரை உங்கள் உடம்பு இயற்கையாகவே மீண்டும் விரைவாக சுரந்து மீட்டுக் கொண்டு விடும். இதனால் உடல் எடை மீண்டும் அதிகரிக்கத் தான் செய்யும்.
தூக்கம் குறையும்
வேகமாக எடை குறைப்பதற்கான கடும் உடற்பயிற்சி காரணமாக உங்களுக்கு வேகமாகக் களைப்பு ஏற்பட்டு விடும். உடம்பில் கலோரிகளும் மளமளவென்று குறைந்துவிடும். இதனால் சரியான நேரத்தில் உங்களால் தூங்க முடியாது. களைப்பு இருப்பதால் சரியாகத் தூங்கவும் முடியாது.
பித்தக் கற்கள் உருவாகும்
உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்புக்கள் பித்தப் பையில்தான் சென்று சேரும். இந்நிலையில் வேகமாகவும் கடுமையாகவும் உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்யும்போது, பித்தக் கற்கள் நிறைய உருவாகி விடும். இது வயிற்றின் உள் பகுதியைப் படிப்படியாக சேதமாக்கும் ஆபத்து உள்ளது.
உடலில் சத்து குறையும்
வேகமாக எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக, கடுமையாக டயட்டில் இருக்க முயற்சிப்பீர்கள். இதனால், உங்கள் உடம்புக்குத் தேவையான எல்லாப் பொதுச் சத்துக்களும் மளமளவென்று குறைந்துவிடும்.
மன அழுத்தம் அதிகரிக்கும்
கண்ட உணவுகளையும் விதவிதமாகச் சாப்பிட்டு வந்த நீங்கள், உடல் எடையைக் குறைப்பதற்காக அவற்றையெல்லாம் திடீரென்று நிறுத்தி விடுவீர்கள். இந்தத் திடீர் உணவுக் குறைப்பால் கார்ட்டிசோல் எனப்படும் ஸ்ட்ரெஸ் ஹார்மோனின் அளவு அதிகரிக்கும். இது உங்களைக் கடுமையான மன அழுத்தத்தில் கொண்டு போய் விடும்.
முடி உதிரும்
விரைவான உடல் எடைக் குறைப்பின்போது சத்துக்கள் குறைவதால், அவற்றில் ஒன்றான புரதச் சத்தும் குறைந்து விடும். இதனால் முடி வளர்ச்சியும் நின்று போவதோடு மட்டுமல்லாமல், அவை கடுமையாக உலரவும் உதிரவும் தொடங்கும்.
கொழுப்பு அதிகரிக்கும்
எடை குறைவதற்காக நீங்கள் உணவுகளையும் குறைக்க ஆரம்பிப்பீர்கள். இதனால் உணவுப் பொருள்களை உங்கள் உடம்பு தானாகவே சேகரிக்க ஆரம்பித்து விடும். அவ்வாறு தேங்கும் உணவுப் பொருள்கள், கொஞ்சம் கொஞ்சமாகக் கொழுப்பாக மாறி அதிகரிக்கும். கொழுப்பு அதிகரிக்க, உடல் எடையும் தானே அதிகரிக்கும்!
மெட்டபாலிசம் பாதிப்படையும்
உணவுகளைக் குறைப்பதால், உங்கள் உடம்பு மெட்டபாலிக் ரேட்டுகளையும் குறைத்து விடும். ஒரு வழியாக டயட் முடிந்து இயல்பாகச் சாப்பிட நீங்கள் முயலும் போது, குறைவான் மெட்டபாலிக் ரேட் காரணமாக மீண்டும் எடை கூடத்தான் செய்யும். இதனால் மீண்டும் டயட்டுக்கு முயற்சிப்பீர்கள். இது மெட்டபாலிக் ரேட்டை இன்னும் அதிகம் பாதிக்கும்!
பலவித உபாதைகள் ஏற்படும்
வேகமான எடைக் குறைப்பிற்காக தேவையான சத்துக்களைக் குறைப்பதால், பலவிதமான உடல் உபாதைகள் ஏற்படக் கூடும். தசைகள் வீக்காகும்; அனீமியா ஏற்படும்; மலச்சிக்கல் உருவாகும். இவற்றைச் சரி செய்யவில்லை என்றால், உங்கள் உடல் நலத்திற்கு மேலும் பல பாதிப்புகள் ஏற்படும்.