29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
amla 15
ஆரோக்கியம் குறிப்புகள்

நெல்லிக்காயை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரியுமா?

நம் அனைவருக்குமே நெல்லிக்காய் மருத்துவ குணம் நிறைந்த ஓர் அற்புதமான உணவுப் பொருள் என்பது தெரியும். இத்தகைய நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்படுகிறது. நெல்லிக்காயில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் அதிகளவில் நிறைந்துள்ளது. குறிப்பாக நெல்லிக்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் அதிகம் உள்ளது.

இவ்வளவு மருத்து பண்புகளை தன்னுள் கொண்ட மலை நெல்லிக்காயை ஒருவர் தங்களது அன்றாட டயட்டில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளலாம். அதிலும் இந்த நெல்லிக்காயை பல வடிவங்களிலும் அன்றாடம் எடுக்கலாம். அதில் அதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஊறுகாய், ஜூஸ் போன்ற வடிவங்களிலும் உட்கொள்ளலாம்.

உங்களுக்கு தினமும் ஒரு மலை நெல்லிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரியாதெனில், இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே மலை நெல்லிக்காயை ஒருவர் தினமும் தவறாமல் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதய ஆரோக்கியம்

மலை நெல்லிக்காயில் உள்ள இயற்கை உட்பொருட்கள் இதய தசைகளை வலிமைப்படுத்தி, இரத்த ஓட்டத்தை இதயத்தில் மென்மையாக ஓடச் செய்து, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் இதில் உள்ள இரும்புச்சத்து, இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை தூண்டிவிட்டு, உடலில் தங்கு தடையின்றி இரத்த ஓட்டம் சீராக இருக்கச் செய்யும்.

கொலஸ்ட்ரால்

மலை நெல்லிக்காயில் உள்ள பெக்டின் என்னும் உட்பொருள், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை ஊக்குவிக்கும். இயற்கையாகவே இதில் உள்ள வளமான அளவிலான வைட்டமின் சி மற்றும் அமினோ அமிலங்கள், உடலில் கொலஸ்ட்ரால் அளவில் உள்ள பிரச்சனைகளைத் தடுத்து சரியான அளவில் பராமரிக்கும்.

ஆன்டி-ஏஜிங்

மலை நெல்லிக்காய் முதுமைத் தோற்றத்தைத் தரும் சரும சுருக்கங்கள், முதுமைக் கோடுகள் மற்றும் முதுமைப் புள்ளிகளைக் குறைக்கும். இதில் உள்ள அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே எளிய வழியில் இளமையைத் தக்க வைக்க நினைத்தால், தினமும் ஒரு மலை நெல்லிக்காயை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

அறிவாற்றல் ஆரோக்கியம்

மலை நெல்லிக்காய் சாறு நரம்பு மற்றும் மூளைக்கு மிகச்சிறந்த டானிக். இதனை ஒருவர் அடிக்கடி உட்கொண்டால், அறிவாற்றல் செயல்பாடு மற்றும் நினைவாற்றல் சக்தி அதிகரிக்கும். இதில் உள்ள வளமான அளவிலான வைட்டமின் சி மற்றும் இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், மூளைக்கு ஊட்டமளித்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். எனவே உங்களது மூளையின் சக்தியை அதிகரிக்க நினைத்தால், தினமும் ஒரு மலை நெல்லிக்காயை சாப்பிடுங்கள்.

நோயெதிர்ப்பு மண்டல ஆரோக்கியம்

மலை நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நோயெதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும். இது ப்ரீ-ராடிக்கல்களால் உடலினுள் ஏற்படும் பாதிப்பை எதிர்த்துப் போராடும். முக்கியமாக மலை நெல்லிக்காய் இரத்த வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, உதலைத் தாக்கும் பல்வேறு நோய்களில் இருந்து நல்ல பாதுகாப்பை வழங்கும். எனவே அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்கள், தினமும் ஒரு மலை நெல்லிக்காயை சாப்பிட்டு வர, நோய் தாக்குதல்களில் இருந்து விலகி இருக்கலாம்.

கண் பார்வை

மலை நெல்லிக்காய் கண்களில் உள்ள செல்களின் இயக்கத்தை மேம்படுத்தும். இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், கண் பிரச்சனைகளான கண்களில் இருந்து நீர் வடிதல், கண் அரிப்பு போன்றவற்றைத் தடுத்து, பார்வையை கூர்மையாக்கும். ஆகவே பார்வை பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க நினைத்தால், மலை நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிடுங்கள்.

சர்க்கரை நோய்

மலை நெல்லிக்காயில் உள்ள குரோமியம், உடலில் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை சீராக்கி, இன்சுலினை செயல்படச் செய்யும். இதன் விளைவாக சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணியான இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். அதோடு இதில் உள்ள வைட்டமின் சி, கணையத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

சிறுநீரக கோளாறுகள்

மலை நெல்லிக்காய் மிகச்சிறப்பான சிறுநீர் பெருக்கி மூலிகையாக கருதப்படுகிறது. ஒருவர் இந்த மலை நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால், அது உடலில் உள்ள டாக்ஸிக் பொருட்களை உடலில் இருந்து சிறுநீரின் வழியே வெளியேற்றும். மேலும் இது பாக்டீரியாக்களை அழித்து, சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுக்களையும் சரிசெய்யும்.

வாய் ஆரோக்கியம்

மலை நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி, வாயில் உள்ள பாக்டீரியல் தொற்றுக்களை எதிர்த்துப் போராடி, பல் வலி மற்றும் பல் சொத்தையாவதைத் தடுக்கும். மேலும் மலை நெல்லிக்காய் ஈறு நோய்களுடன், வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும். எனவே உங்களுக்கு வாயில் பிரச்சனைகள் இருந்தால், மலை நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிட்டு வாருங்கள்.

தலைமுடி வளர்ச்சி

மலை நெல்லிக்காய் பல்வேறு தலைமுடி பிரச்சனைகளுக்கான மிகச்சிறந்த மருந்து. எப்போது ஒருவரது உடலில் வைட்டமின் சி குறைவாக உள்ளதோ, அப்போது தான் தலைமுடியில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இத்தகைய வைட்டமின் சி மலை நெல்லிக்காயில் ஏராளமான அளவில் உள்ளது. உங்களுக்கு தலைமுடி பிரச்சனை இருந்தால், மலை நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிடுங்கள் அல்லது நெல்லிக்காயை அரைத்து பேஸ்ட் செய்து, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி மசாஜ் செய்து, 1-2 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள்.

ஆர்த்ரிடிஸ்

மலை நெல்லிக்காயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆர்த்ரிடிஸ் பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கும். இது எலும்புகளில் உள்ள வீக்கம் மற்றும் மூட்டு இணைப்புக்களில் உள்ள வலியைத் தடுக்கும். எனவே உங்களுக்கு எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால், மலை நெல்லிக்காயை அல்லது அதன் சாற்றினை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வாருங்கள்.

மெட்டபாலிசம்

ஆரோக்கியமான மெட்டபாலிசம் உடல் எடையைக் குறைக்கும் செயல்பாட்டை எப்போதும் சிறப்பாக வைத்துக் கொள்ளும். மலை நெல்லிக்காயில் உள்ள இயற்கை பண்புகள், புரோட்டீன் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, விரைவில் உடல் எடை குறைய உதவியாக இருக்கும். ஆகவே உடல் எடையைக் குறைக்க முயற்சிப்போர் தினமும் மலை நெல்லிக்காயை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, நல்ல பலன் கிடைக்கும்.

பித்தக்கற்கள்

பித்தப்பையில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் சேர்வதன் மூலம், அவை கற்கள் உருவாகின்றன. மலை நெல்லிக்காய் உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, அந்த கொலஸ்ட்ராலை பித்த அமிலமாக மாற்றி, பித்தக்கற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்கும். ஆகவே பித்தக்கல் அபாயத்தைத் தடுக்க வேண்டுமானால், தினமும் ஒரு மலைநெல்லிக்காய் சாப்பிடுங்கள்.

அசிடிட்டி பிரச்சனைகள்

மலை நெல்லிக்காயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வயிற்ற பிரச்சனைகளான வயிற்று உப்புசம் மற்றும் வாய்வுத் தொல்லை போன்றவற்றில் இருந்து விடுவிக்கும். குறிப்பாக அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்கள், மலை நெல்லிக்காய் அல்லது அதன் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, அசிடிட்டி குணமாகும்.

சரும ஆரோகியம்

மலை நெல்லிக்காய் சருமத்திற்கு ஊட்டமளித்து, பல்வேறு வகையான சரும பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் இதர சத்துக்ள், சருமத்திற்கு நல்ல நிறத்தையும் வழங்கும். எனவே சரும பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமானால், தினமும் ஒரு மலை நெல்லிக்காயை சாப்பிடுங்கள். இதனால் சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.

Related posts

மாரடைப்பு, பக்கவாதம்..தொப்பை கொழுப்பு எவ்வளவு ஆபத்தானது?

nathan

9 மணிநேர அலுவலக வேலை உங்கள் உயிரை குடிக்கிறதா? அப்ப நீங்க படிக்க வேண்டியது இது!

nathan

சூப்பர் டிப்ஸ்..நெஞ்சில் பிடித்துள்ள சளியை வெளியேற்ற உதவும் ஓமம்…!!

nathan

தினமும் எந்தெந்த நேரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும்?

nathan

காய்ச்சல் பற்றி கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்..அச்சம் வேண்டாம்…அலட்சியமும் வேண்டாம்…

nathan

தெரிஞ்சிக்கங்க…ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல்: உடல் எடை குறைப்பிற்கு எது சிறந்தது?

nathan

உங்க ஆரோக்கியத்தைப் பத்தி உங்க நாக்கு என்ன வாக்கு சொல்லுதுன்னு தெரியுமா!!! தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா நிலவேம்பு கஷாயத்தின் மகத்துவங்கள் என்ன தெரியுமா?

nathan

கர்ப்பிணிகளே! குழந்தை அறிவாளியா பிறக்கணுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan