தற்போதைய உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையால் ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளை பலரும் அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அக்காலத்தில் எல்லாம் நம் முன்னோர்கள் உடல் வலிமையுடன் நீண்ட காலம் ஃபிட்டாக இருந்தார்கள். இதற்கு காரணம் அவர்களது உணவுப் பழக்கமும், வாழ்க்கை முறையும் தான். ஆனால் இன்று எந்நேரமும் கம்ப்யூட்டர், மொபைல் போன்றவற்றின் முன் தான் பலரும் இருக்கிறோம். இதன் விளைவாக நோய்களை பரிசாக பெறுகிறோம்.
ஆனால் தினமும் குறைந்தது 30 நிமிடம் உடலுக்கு உழைப்பைக் கொடுத்து, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தால், உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். தற்போது உடலுக்கு உழைப்பு என்பது உடற்பயிற்சியின் மூலம் தான் கிடைக்கிறது. எனவே பலர் பணத்தை செலவழித்து ஜிம்களில் சேர்ந்து உடற்பயிற்சியை செய்து வருகிறார்கள். ஆனால் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் பயிற்சி கொடுக்கும்படியான ஓர் சிறப்பான உடற்பயிற்சி தான் நடைப்பயிற்சி.
இந்த நடைப்பயிற்சியை ஒருவர் தினமும் காலை அல்லது மாலையில் 30 நிமிடம் மேற்கொண்டு வந்தாலே, நாம் நினைத்திராத அளவில் பல நன்மைகளைப் பெறலாம். உங்களுக்கு தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சியை மேற்கொண்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.
இதயத்திற்கு நல்லது
நடைப்பயிற்சியை ஒருவர் தினமும் மேற்கொள்ளும் போது, இதயத் துடிப்பின் வேகம் அதிகரிக்கும். இதன் விளைவாக இரத்த ஓட்டம் அதிகரிக்கும், இரத்த அழுத்தம் கட்டுப்படும், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும் மற்றும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும்.
மெட்டபாலிசம் மேம்படும்
நடைப்பயிற்சி செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் மற்றும் இரைப்பையில் சுரக்கும் செரிமான அமிலத்தின் அளவை அதிகரிக்க உதவும். இதனால் உண்ணும் உணவுகள் முழுமையாக செரிமானமடைவதோடு, உடலின் மெட்டபாலிச விகிதமும் அதிகரிக்கும். நடைப்பயிற்சி அஜீரண கோளாறைத் தடுப்பதோடு, இதர பிரச்சனைகளையும் தடுக்கும்.
ஆர்த்ரிடிஸைத் தடுக்கும
தினமும் நடைப்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம், எலும்புகள் பலம் பெற்று வலிமையாகவும் இருக்கும். அதிலும் ஒருவர் அதிகாலையில் சூரிய வெளிச்சம் உடலில் படும்படி நடைப்பயிற்சியை மேற்கொண்டால், அது உடலில் வைட்டமின் டி உற்பத்தியை ஊக்குவித்து, உடலில கால்சியம் உறிஞ்சும் அளவை அதிகரிக்கும். மேலும் நடைப்பயிற்சி மூட்டுகள் வறட்சியடைவதைத் தடுத்து, ஆர்த்ரிடிஸ் வரும் அபாயத்தில் இருந்து விலகி இருக்கச் செய்யும்.
தசைகள் வளரும்
ஒருவர் தினமும் நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் போது, அதன் விளைவாக தசை கொழுப்புக்களின் அளவு அதிகரிக்கும் மற்றும் தசைகள் நல்ல வடிவத்தையும் பெறும். மேலும் வியர்க்க வியர்க்க உடற்பயிற்சி செய்யாமலேயே கைகள், தொடைகள் மற்றும் பிட்டப் பகுதிகளை நல்ல வடிவத்துடன் வைத்துக் கொள்ள முடியும
நோயெதிர்ப்பு மண்டலம் மேம்படும்
நடைப்பயிற்சியின் மூலம் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமைப்படுத்தப்படும். அதுவும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் இரத்த வெள்ளையணுக்களின் உற்பத்தி அதிகரித்து, நோயெதிர்ப்பு சக்தி வலுபெறும். ஆய்வுகளும் தினமும் நடைப்பயிற்சியை மேற்கொள்வோருக்கு சளி, காய்ச்சல் போன்றவை வரும் அபாயம் குறைவாக இருப்பதாக கூறுகிறது.
மூளை செயல்பாடு
நடைப்பயிற்சி மூளைச் செல்களின் செயல்பாட்டை அதிகரிக்கும். மேலும் இது மூளைத் திசுக்களின் அளவு குறைவதைத் தடுத்து, நினைவாற்றல் இழப்பு மற்றும் முதுமையில் வரும் டிமென்ஷியா போன்றவற்றின் அபாயத்தைத் தடுக்கும். தினமும் நடைப்பயிற்சியை மேற்கொண்டால், நினைவாற்றல் சிறப்பாக இருப்பதோடு, அல்சைமர் நோயின் தாக்கமும் தடுக்கப்படும்.
சுறுசுறுப்பாக வைக்கும்
தினமும் நடைப்பயிற்சியை மேற்கொண்டால் பல்வேறு நோய்களின் தாக்கத்தில் இருந்து விலகி இருக்கலாம். இதனால் மனதளவில் மட்டுமின்றி, உடலளவிலும் ஆரோக்கியமானவராகவும், சுறுசுறுப்பானவராகவும் இருக்கலாம். நடைப்பயிற்சி உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மற்றும் இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்கும். ஒருவரது இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகம் இருந்தால், அவர்களது உடலில் ஆற்றல் அதிகம் இருக்கும்.
உடல் சுத்தமாக இருக்கும்
எப்போது உடலின் அனைத்து தசைகளும் இயங்க ஆரம்பிக்கிறதோ, அப்போது உடல் உறுப்புக்களில் இருந்து டாக்ஸின்கள் வெளியேற ஆரம்பித்துவிடும். முக்கியமாக குடல் சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்து, முறையான குடலியக்கம் நடைபெறும். உடலில் இருந்து டாக்ஸின்கள் சரியாக வெளியேற ஆரம்பித்துவிட்டால், உடல் தானாக நன்கு செயல்பட ஆரம்பித்துவிடும்.
சந்தோஷம்
பூங்காவில் பிடித்தமான இசையைக் கேட்டுக் கொண்டு நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் போது, மனதில் உள்ள பாரம் குறைந்து, மனம் ரிலாக்ஸாக இருப்பதை நன்கு உணர முடியும். மேலும் உடலில் ஆக்ஸிடோசின் உற்பத்தி ஆரம்பமாகி, மனநிலை சிறப்பாக இருக்கும். இதனால் மன இறுக்கத்தில் மூழ்கும் அபாயம் குறையும். நடைப்பயிற்சி மிகச்சிறந்த ஒரு மன அழுத்த நிவாரணி மற்றும் நல்ல நிம்மதியான தூக்கத்தையும் தூண்டும்.
வாழ்நாள் நீடிக்கும்
ஆய்வுகளில் தினமும் நடைப்பயிற்சியை மேற்கொள்வோர் ஆரோக்கியமான டயட்டையும் மேற்கொண்டால், அவர்களது வாழ்நாளில் இருந்து குறைந்தது 5-7 வருடங்கள் அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளது. நாம் சந்திக்கும் பெரும்பாலான பிரச்சனையை நடைப்பயிற்சியில் இருந்தே சரிசெய்யலாம். எனவே இத்தகைய நடைப்பயிற்சியை தினமும் மேற்கொள்ளத் தவறாதீர்கள்.
எடை குறையும்
நடைப்பயிற்சி மிகச்சிறந்த உடற்பயிற்சி மற்றும் இது உடல் எடையையும் குறைக்க உதவும். அமெரிக்க ஆய்வாளர்கள், உடல் பருமன் கொண்டவர்கள் அனைவரையும் ஒருசேர தினமும் ஒரு குறிப்பிட்ட தூரம் நடந்து வர செய்தனர். 8 வாரங்கள் கழித்து, அவர்களது எடையைப் பரிசோதித்ததில், அதில் கலந்து கொண்டோரில் 50%-க்கும் அதிகமானோரின் உடல் எடை குறைந்திருப்பது தெரிய வந்தது. எனவே நீங்கள் உங்களது எடையைக் குறைக்க நினைத்தால் தினமும் குறைந்தது 30 நிமிடம் நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
புற்றுநோய்
புற்றுநோய் பல மில்லியன் மக்களின் வாழ்வில் விளையாடிக் கொண்டிருக்கிறது. இதற்கு உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையே முதன்மையான காரணம். ஆய்வு ஒன்றில் நடைப்பயிற்சி உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, புற்றுநோயின் அபாயத்தையும் குறைப்பதாக தெரிய வந்தது. அதிலும் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் ஹீமோதெரபியின் பக்கவிளைவுகளை நடைப்பயிற்சி குறைப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அதோடு, நடைப்பயிற்சி பெண்களைத் தாக்கும் மார்பக புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கும்.
சர்க்கரை நோய்
உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை சர்க்கரை நோயின் வளர்ச்சியையும் அதிகரிக்கும் என்பது தெரியுமா? சர்க்கரை நோயானது சர்க்கரை நிறைந்த பொருளை உட்கொள்வதால் வருவதல்ல. உடலுழைப்பு இல்லாத வாழ்க்கையை வாழ்வதால் தான் இந்த கோளாறு வருகிறது.
டைப்-2 சர்க்கரை நோயை சரிசெய்ய தினமும் 3000 முதல் 7500 அடிகள் நடக்க வேண்டுமென ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர். அதாவது எப்போதும் உட்கார்ந்தவாறே இல்லாமல், சுறுசுறுப்பாக இருக்க கூறுகிறார்கள். எனவே சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தினமும் நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இதனால் டைப்-2 சர்க்கரை நோயின் அபாயமும் தடுக்கப்படும்.
குறிப்பு
ஒருவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அன்றாடம் குறைந்தது 30 நிமிட நடைப்பயிற்சியுடன், சரிவிகித டயட்டையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். இந்த இரண்டையும் சரியாக ஒருவர் மேற்கொண்டு வந்தால், வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் என்ஜாய் செய்து நீண்ட நாள் வாழ முடியும்.
உங்களுக்கு இந்த கட்டுரை மிகவும் பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுடனும் தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.