ஏதாவது ஒரு சிக்கல் வந்தால் அதை பெரிய தலைவலி என்பது பொதுவான வழக்கம். உடலில் ஏற்படும் தலைவலி என்பது தலை மற்றும் கழுத்துடன் சேர்ந்த வலியாகும். தலைக்கு உள்ளே இருக்கும் மூளையைப் பற்றியும், வெளியே இருக்கும் முடியைப் பற்றியும் மருத்துவ ஆய்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
`எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்’. இதில் ஏற்படும் தலைவலி என்பது தலை, சதை, ரத்தக் குழாய்கள், கண், காது இப்படி பல பிரிவுகளை உட்கொண்டது. தலைவலி என்பது ஒரு ஆலமரம் போல். இதன் கீழ் சுமார் 200-க்கும் மேற்பட்ட காரணங்களை குறிப்பிட முடியும். ஆனால், பொதுவில் இதனை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
முதல் பிரிவு சாதாரண, எளிதில் தீர்வு காணக்கூடிய பொதுக் காரணங்களைக் கொண்டது. இரண்டாவது பிரிவு கடினமான நோய் காரணங்களைக் கொண்டு ஏற்படுவது. 90 சதவீத மக்களுக்கு முதல் பிரிவான சாதாரணத் தலைவலியே ஏற்படுகின்றன. மைக்ரேன் மற்றும் டென்ஷன் வகையே மிகச் சாதாரணமாக காணப்படக்கூடிய ஒன்று.
மைக்ரேன் எனப்படும் ஒற்றை தலைவலி:
* மைக்ரேன் தலைவலியின் அறிகுறிகள் தலைவலி, வாந்தி, வெளிச்சம் பார்க்க முடியாமை, சத்தம் கேட்க முடியாமை போன்றவை. இவர்கள் தலையைச் சுற்றி ஒரு துணியினை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு இருட்டு அறையில் இருப்பர். இந்த தலைவலி வந்தால், இவர்களை 2-3 நாட்கள் பாடாய் படுத்தி விடும்.
மைக்ரேன் பொதுவில் ஒருபக்க தலைவலியாக ஆரம்பித்து, பிறகு வலியில் ஆளை நகர விடாமல் பிரட்டி விடும். மூளையைச் சுற்றியுள்ள ரத்தக் குழாய்கள் சுருங்குவதோ, விரிவதோ இதன் காரணமாக முடியும் என்று கூறப்பட்டாலும் இன்னமும் இதற்கான காரணங்கள் ஆராயப்பட்டே வருகின்றன.
பொதுவான காரணங்களாக அறியப்படுபவை:
* மன உளைச்சல், டென்ஷன்.
* உடலில் போதுமான அளவு நீரின்மை.
* சரியான நேரத்தில் உணவின்மை.
* பிரயாணம்.
* தட்பவெப்ப நிலை மாறுதல்.
* அதிக ஒளி, சத்தம்.
* ஹார்மோன் நிலை மாறுபாடு.
மைக்ரேனுக்கு, சாதாரண வலி நிவாரண மாத்திரைகளே உபயோகப் படுத்தப்படுகின்றன. சிலருக்கு மருத்துவர் சில மாத்திரைகளை பரிந்துரை செய்வார். ஒரு மாதத்தில் எத்தனை முறை இத்தாக்குதல் ஏற்படுகிறது என்பதனைப் பொறுத்தே மருத்துவர் மருந்தின் முறையினை முடிவு செய்வார்.
டென்ஷன் தலைவலி!
மிக மிக சாதாரணமாக உலகமெங்கும் காணப்படும் தலைவலி, டென்ஷன் தலைவலி. இந்த வலி, பின் தலை, கழுத்து, கண் என ஆரம்பித்து உடல் வலியினையும் கொடுக்கும். டென்ஷன் வகை தலைவலியே 90 சதவீத மக்களைத் தாக்குகின்றது. இவ்வகைத் தலைவலி ஆண்களை விட பெண்களை அதிகம் தாக்குகின்றது.
இதற்கான பொதுவான காரணங்கள்:
* அழுத்தம், மன உளைச்சல் வேலைப்பளு போன்றவை. காலையிலிருந்து மதியம் வருவதற்குள் பரபரவென வேலை செய்வோருக்கு மதியத்தில் இதன் தாக்குதல் தோன்றி, அவர் வேலையைத் தடுக்கும்.
* சரியான அளவு தூக்கமின்மை. இரவு ஷிப்ட் தொடர்ந்து பார்ப்பவர்கள், இரவு அதிக நேரம் கண் முழிப்பவர்கள், பரீட்சைக்காக இரவு, பகல் பாராது விழுந்து, விழுந்து படிப்பவர்கள் போன்ற பிரிவுகள் இதில் அடக்கம்.
* பஸ்சிலோ, காரிலோ, அலுவலகத்திலோ வளைந்து குனிந்து கோணலாக முறையற்று அமருவோருக்கு இந்தத் தலைவலி ஏற்படும்.
* அதிக நேரம் கண் விழித்தல், அதிக நேரம் கம்ப்யூட்டர் முன்பு அமர்தல், அதிகமாக சினிமா பார்த்தல், அதிக வீடியோ கேம்ஸ், அதிக ஒளியில் வெகுநேரம் இருத்தல் போன்றவை கண்ணுக்கு அதிக சோர்வினையும், பாதிப்பினையும் ஏற்படுத்துவதால் தலைவலி ஏற்படும்.
* சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாமை, பசி, மசாலா, கார உணவுகள், துரித உணவு, கொழுப்புச்சத்து அதிகமான உணவு ஆகியவையும் தலைவலியினை ஏற்படுத்தும்.
* பல்லை அடிக்கடி இறுக்கக் கடித்துக் கொண்டே இருப்பவர்களுக்கும் டென்ஷன் தலைவலி ஏற்படும்.
தீர்வு:
* முறையான உணவு.
* முறையான தூக்கம்.
* அதிக காபி, டீ குடிப்பதை தவிர்த்தல்.
* முறையாக உட்காரும் பழக்கம்.
* தியானம்.
* அமைதியான வாழ்க்கை முறை.
* மலச்சிக்கல் இன்மை.
* எளிய மருந்துகள் எடுத்துக் கொள்ளுதல்.
நரம்புக் கோளாறினால் ஏற்படும் ஒருவகை பாதிப்பும் தலைவலி பிரிவில் உண்டு. இது அடிக்கடி தலையின் ஒரு பக்கத்திலேயே ஏற்படும். குறிப்பாக, ஒரு கண்ணை சுற்றிய வலி, கண்ணில் நீர் வடிதல், மூக்கடைப்பு, கண்ணை சுற்றிய வீக்கம் என்ற அறிகுறிகள் இதற்கு இருக்கும். இதற்கான மருந்தினையும், ஆலோசனையையும் மருத்துவரின் நேர்முக கண்காணிப்பின் மூலமே பெறுவது நல்லது. இவ்வகை பாதிப்பு பெண்களை விட ஆண்களையே அதிகம் பாதிக்கின்றது.
பொதுவாக காணப்படும் தலைவலி பிரிவுகள்:
டென்ஷன்:
அதிக டென்ஷனில் சதைகள் சுருங்குவதால் ஏற்படுவது. டென்ஷன் ஓய்ந்த பிறகு: மன உளைச்சல் ஓய்ந்த பின் விரியும் ரத்தக் குழாய்களால் ஏற்படுவது. ரத்தத்தில் சர்க்கரை குறைவு – திடீரென சர்க்கரை ரத்தத்தில் குறைதல், உபவாசம், இளைக்கும் முயற்சி, சத்தில்லாத உணவு, முறையற்ற உணவு ஆகியவற்றால் ஏற்படுவது.
சுற்றுப்புறம்:
தட்பவெப்ப நிலை, புழுக்கமான அறை ஆகியவற்றால் ஏற்படுவது. மருந்து: சில குறிப்பிட்ட மருந்துகள் எடுத்துக் கொள்வதால் ஏற்படுவது.
உட்காரும் நிலை:
கார், பஸ் இவற்றில் கோணமாணலாக அமர்ந்து நீண்ட தூர பிரயாணம். வளைந்து, மடிந்து உட்காருவது போன்வற்றினால் ஏற்படும் தலை, கழுத்து, தோள் வலி.
நச்சுத்தன்மை:
அதிக டீ, காபி, மசாலா உணவு, மது, மலச்சிக்கல் ஆகியவற்றால் ஏற்படும் தலைவலி.
கிருமிகள்:
வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமி பாதிப்பால் ஏற்படும் தலைவலி.
உடல் அமைப்பு:
எலும்புகளின் அமைப்பில் மாறுபாடு ஏற்பட்டால் வரும் தலைவலி.
அலர்ஜி:
எந்த வகை அலர்ஜியினாலும் ஏற்படலாம். அவசர மருத்துவ கவனம் தேவைப்படும்
தலைவலி:
அடிபடுதல் – மண்டையில் அடிபட்டு வலி. அத்துடன் கூடிய வாந்தி, மயக்கம், நினைவிழத்தல் போன்றவை. ரத்தக் கொதிப்பு – மருத்துவ உதவி உடனடி தேவை. திடீரென ஜூரம், கடுமையான தலைவலி – கழுத்து விறைத்தல், வாந்தி. குழந்தைகளுக்கு ஏற்படும் காது வலி, தொண்டை வலி, தலைவலி, ஜூரம் – மருத்துவ சிகிச்சை நிவாரணம் தரும். பார்வை மங்குதலுடன் கூடிய தலைவலி – மருத்துவ பரிசோதனை மூலம் காரணம் கண்டறிய வேண்டும்.
உங்கள் முயற்சி!
* தலைவலியினை தூண்டும் எந்த உணவினையும் தவிர்த்து விடுங்கள்.
* காபி, டீ அதிகம் எடுப்பதினை அடியோடு தவிருங்கள்.
* முறையான தூக்கம் அவசியம்.
* யோகா, தியானம் அவசியமே.
* சரியான நேரத்தில் முறையான உணவினை உட்கொள்ளுங்கள்.
* உணவில் சிவப்பு, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிறம் கலர் கொண்ட உணவுகள் தேவை.
(உ-ம்) தக்காளி, பீட்ரூட், கீரை, காரட், பப்பாளி, ஆரஞ்சு, பருப்பு வகைகள். வண்ண உணவுகள் வலியினை குறைக்கும் ஆற்றல் படைத்தவை என ஆய்வுகள் கூறுகின்றன. அநேக தலைவலிகள் `வேலை அழுத்தம்’, `மன அழுத்தம்’ காரணமாகவே ஏற்படுகின்றன. சில வகை தானாக போய்விடும்.