உங்கள் குழந்தை ரொம்ப சுட்டியா? அதனால் அவர்களிடம் சற்று முரட்டுத்தனமாக நடந்து கொள்வீர்களா? அப்படியெனில் உங்கள் குழந்தைக்கு உங்கள் மீது வெறுப்பு தான் அதிகரிக்கும். ஏனெனில் குழந்தைகளுக்கு எப்போது எப்படி நடக்க வேண்டும் என்று தெரியாது. பெற்றோர்களாகிய நீங்கள் தான் அவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும்.
முக்கியமாக குழந்தைகளிடம் ஒருசிலவற்றை அடிக்கடி சொல்லக் கூடாது. அப்படி சொன்னால் அது அவர்களின் மனதில் கடுமையான காயத்தை ஏற்படுத்துவதோடு, அவர்கள் உங்கள் வெறுக்க ஆரம்பிப்பார்கள். எனவே ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையிடம் எதை சொல்லக்கூடாது என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். சரி, இப்போது அவை என்னவென்று பார்ப்போமா!!!
கொஞ்சம் தனியா விடு!
குழந்தைகள் எவ்வளவு தான் கோபமாக இருந்தாலும், தாயிடம் தான் அரவணைப்பைத் தேடும். எனவே நீங்கள் உங்கள் குழந்தையை கோபமாக திட்டினாலோ அல்லது அடித்தாலோ, குழந்தை உங்களருகில் வரும் போது, அவர்களை அணைத்து அவர்கள் புரியும் படி சொல்ல வேண்டும். அதைவிட்டு ‘என்னிடம் பேசாததே, கொஞ்சம் தனியாக விடு’ என்று சொல்வது குழந்தையின் மனதை பாதிக்கும்.
எதிர்மறையாக பேசுவது
உங்கள் குழந்தை சோம்பேறியாகவோ அல்லது அனைத்திலும் மெதுவாகவோ இருந்தால், அப்போது அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசாமல் எதிர்மறையாகவே பேசினால், அது கூட குழந்தைகளின் மனதில் கோபத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தும்.
உன் சகோதரன்/சகோதரி போல் இரு…
எப்போதுமே ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையுடன் ஒப்பிட்டு பேசுவது மிகவும் அபத்தமான செயல். அப்படி எந்நேரமும் பெற்றோர்கள் ஒப்பிட்டு பேசினால், அது குழந்தையின் மனதில் பெரும் கோபத்தை உண்டாக்கும். ஆகவே எக்காரணம் கொண்டும் ஒப்பிட்டு பேசுவதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.
நான் சொல்வதை மட்டும் செய்
உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஆசை என்பது இருக்கும். அத்தகைய ஆசையை ஒவ்வொரு பெற்றோரும் குழந்தையிடம் தவறாமல் கேட்டு, அதை நிறைவேற்ற முயல வேண்டுமே தவிர, உங்கள் ஆசைகளை அவர்களின் மனதில் பதித்து, அதை செய்யச் சொல்லாதீர்கள். இதனால் அவர்களின் வாழ்க்கையே பாழாகிவிடும்.