பெரும்பாலான வாய்ப்புண்கள், சரியான உணவு மூலமே குணமாகி விடும். வெகு நாட்களுக்கு ஆறாமல் இருந்தால், புற்றுநோயாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு. வாய்ப்புண்தானே என்று அலட்சியமாக இருக்காமல், சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
மருத்துவரின் ஆலோசனைப்படி, ஆன்ட்டிசெப்டிக் திரவத்தைப் பயன்படுத்தி, வாய் கொப்பளித்தால், வாய்ப்புண் சீக்கிரத்தில் குணமாகும். ஸ்டீராய்டு மற்றும் வலி மரத்துப் போகச் செய்யும் களிம்புகளை, வாய்ப்புண்ணில் தடவலாம். இவற்றோடு, வலி நிவாரணி மாத்திரைகளையும், ஒரு வாரம் சாப்பிட வேண்டும்.
லாக்டோபேசில்லஸ் மருந்து கலந்த, மல்ட்டி வைட்டமின் மாத்திரை மற்றும் இரும்புச்சத்து, போலிக் அமிலம் மாத்திரைகளை ஒரு மாதம் சாப்பிட வேண்டும். அப்போதுதான், வாய்ப்புண் மீண்டும் வராது. பூஞ்சையால் வரும் வாய்ப்புண்ணுக்குக் காளான்கொல்லி மருந்தைத் தடவினால் நல்ல பலன் கிட்டும்.
வாய்ச்சுத்தம் காப்பது, வாய்ப்புண்ணைத் தடுப்பதற்கான முதல் படி. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, பல் மருத்துவரிடம் காண்பித்து, ஸ்கேலிங் முறையில் பற்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். கூரான பற்களைச் சரி செய்ய வேண்டும். செயற்கைப் பல்செட்டால் பிரச்னை வருகிறது என்றால், அதை மாற்றிவிடுவது நல்லது.
புகை, வெற்றிலை, புகையிலை, பான்மசாலா போடக் கூடாது. மது அருந்த கூடாது. பால், தயிர், முட்டை, இறைச்சி, ஈரல், மீன், நண்டு, கீரை, பச்சையிலைக் காய்கள், வெல்லம், தேன், பேரீச்சை, முளை கட்டிய பயறுகள், கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி, கோதுமை, கேழ்வரகு, சோயாபீன்ஸ், தக்காளி, முருங்கைக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை, அடிக்கடி சாப்பிட்டால், வாய்ப்புண் ஏற்படுவதை தடுக்கலாம்.