வால்நட்டில் இயற்கையான முறையில் மெலட்டோனின் ஹார்மோன் இருப்பதால், தூக்கத்தை ஒழுங்குபடுத்துவதில் வால்நட் முக்கியப் பங்காற்றுகிறது.
வாழ்நாளை கூட்டும் ஆற்றல் கொண்ட வால்நட்
சுவை சற்று குறைவாக இருந்தாலும், இதை சில கேக் வகைகள் மற்றும் சாக்லெட்டில் சேர்த்து சாப்பிட்டிருப்போம். தொடர்ந்து சாப்பிட்டால் ஆளை மயக்கும் அளவுக்கு சுவை கொண்டதாகத் தோன்றும். ஆரோக்கியமான தூக்கத்துக்கு மூளையில் மெலட்டோனின் என்ற ஹார்மோன் சுரப்பு மிகவும் அவசியம். வால்நட்டில் இயற்கையான முறையில் மெலட்டோனின் ஹார்மோன் இருப்பதால், தூக்கத்தை ஒழுங்குபடுத்துவதில் வால்நட் முக்கியப் பங்காற்றுகிறது. மேலும் டிமென்ஷியா என்ற ஞாபக மறதி நோய்க்கான வாய்ப்பையும் இது குறைக்கிறது.
சத்துக்கள் பலன்கள்: இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், இதயத்துக்கு மிகவும் ஆரோக்கியமானது என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்யும். மேலும் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதன் மூலம் இதயம் மேலும் காக்கப்படுகிறது.
இதயத்துக்கு மட்டுமல்ல இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது மூளைக்கும் மிகவும் நல்லது. இது மூளை நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை எளிமையாக்கி, நினைவாற்றலையும் மேம்படுத்துகிறது.
திசுக்கள் வீக்க நோய்களான ஆஸ்துமா, ஆர்த்ரைட்டிஸ் உள்ளிட்டவற்றில் இருந்து காக்கிறது. ரத்த அழுத்தத்தைக் குறைப்பதால், மன அழுத்தம் குறையவும் தூக்கத்துக்கும் இது உதவுகிறது. இதில் உள்ள ஒரு வகையான அமிலம் எலும்புடன் இணைந்து செயல்பட்டு, எலும்பு உறுதியாக இருக்க உதவுகிறது. ஃபோலிக் அமிலம், ரிபோஃபிளேவின், தயாமின் உள்ளிட்ட பி காம்ப்ளெக்ஸ் சத்துக்களும் இதில் இருப்பதால், கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ளலாம்.
இதில் பி7 வைட்டமின் என்ற பயோடின் உள்ளதால், முடி உதிர்வு பிரச்னையில் இருந்து தடுத்து முடி வளர்ச்சிக்கும் உறுதித்தன்மைக்கும் வழிவகுக்கிறது. மேலும், பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் நிறைவாக உள்ளதால், சருமத்தை ஃப்ரீராடிக்கல்ஸ் தாக்குதலில் இருந்து காத்து, சுருக்கம், கருவளையம் ஏற்படுவதைத் தடுத்து, முதுமையைத் தாமதப்படுத்துகிறது.
தேவை: தினசரி 2 வால்நட் சாப்பிட்டு வந்தால், ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி பெருகுவதுடன் அதன் ஆரோக்கியம், நீ்ந்திக் கடக்கும் திறன் மேம்படும். மொத்தத்தில் ஒருவரின் வாழ்நாளைக் கூட்டச் செய்யும் ஆற்றல் வால்நட்டுக்கு உண்டு.