பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழம் கோடைகாலப் பழமாகும். இந்த பழம் சுவை மட்டுமல்ல, உங்கள் உடலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. மற்ற பழங்களை விட இந்த பழத்தில் அதிக சர்க்கரை உள்ளது என்பதை அனைவரும் நினைவில் கொள்கிறார்கள், எனவே, இந்த பழத்தை அதிகமாக சாப்பிடக்கூடாது, ஆனால் மிதமாக சாப்பிட வேண்டும்.
மாம்பழ சீசனில் தினமும் ஏராளமானோர் மாம்பழங்களை வாங்கி சாப்பிடுவார்கள். அதுவும் மக்கள் மாம்பழத்தை விதவிதமாக சாப்பிடுகிறார்கள். சிலர் இதை மாம்பழ ஷேக்ஸ், மாம்பழ ஸ்மூத்திகள், சாலட்கள் என சாப்பிடுகிறார்கள், சிலர் அதை வெட்டி சாப்பிடுகிறார்கள். பலர் சில சமயங்களில் மாம்பழத்தை பார்க்காமல் சாப்பிடுவார்கள். இருப்பினும் இரவில் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் இது உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இனி இரவில் மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகளைப் பார்ப்போம்.
வயிற்று உப்புசம்
இரவு நேரத்தில் நமது செரிமான மண்டலம் பலவீனமாக இருக்கும். அதனால் தான் இரவு நேரத்தில் லேசான உணவை சாப்பிட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். மாம்பழம் செரிமானமாவதற்கு நிறைய நேரம் எடுக்கும். மாம்பழத்தை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது வயிற்று உப்புசத்தை உண்டாக்கும். சில சமயங்களில் வயிற்றுப் போக்கு அல்லது வாந்தி போன்றவற்றையும் ஏற்படுத்தும்.
சர்க்கரை நோய்
பொதுவாக சர்க்கரை நோயாளிகள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தவறான உணவுகளை உட்கொண்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து நிலைமை மோசமாகிவிடும். மாம்பழத்தில் சர்க்கரை அதிக அளவில் உள்ளது. சாதாரணமாக சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை ஒரு துண்டிற்கு மேல் சாப்பிட கூடாது. அதுவும் இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரை அளவை மோசமான அளவில் அதிகரித்துவிடும்.
எடை அதிகரிக்கும்
மாம்பழம் அல்லது மாம்பழ ஷேக்கை இரவு நேரத்தில் நேரத்தில் தினமும் உட்கொண்டு வந்தால், அது உடல் பருமனை அதிகரிக்கும். நீங்கள் ஏற்கனவே உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால், மாம்பழத்தை இரவு நேரத்தில் சாப்பிடாதீர்கள். இல்லாவிட்டால் உடல் பருமன் அதிகரித்து, வேறு பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.
சரும பிரச்சனைகள்
இயற்கையாகவே மாம்பழம் சூடான பண்பைக் கொண்டது. இதை நாம் அனைவருமே நன்கு அறிவோம். அதுவும் மாம்பழத்தை இரவு வேளையில் சாப்பிட்டால் உடல் சூடு அதிகரித்து, அதன் விளைவாக முகப்பரு அல்லது பிம்பிள் போன்ற சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மாம்பழத்தை சாப்பிடுவதற்கான சிறந்த நேரம் மதிய வேளை தான்.
ஒரு நாளைக்கு ஒருவர் எத்தனை மாம்பழம் சாப்பிடலாம்?
மாம்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள் மட்டுமின்றி, சர்க்கரையும் அதிகம். எனவே மற்ற பழங்களைப் போல், மாம்பழத்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் அது இரத்த சர்க்கரை அளவை அதிகரித்துவிடும். ஆரோக்கியமான ஒருவர் ஒரு நாளைக்கு 330 கிராம் மாம்பழத்தை சாப்பிடலாம். அதுவே சர்க்கரை நோயாளிகளாக இருந்தால், ஒரு நாளைக்கு ஒரு துண்டு மாம்பழத்திற்கு மேல் சாப்பிடக்கூடாது. சுவையானது என்று அளவுக்கு அதிகமாக சாப்பிடாமல் மிதமான அளவில் மாம்பழத்தை சாப்பிட்டால், அதன் முழு நன்மைகளையும் பெறலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.