காலிஃப்ளவர் போன்று ஆனால் பச்சை நிறத்தில் இருக்கும் ப்ராக்கோலியை பலருக்கு எப்படி சமைத்து சாப்பிட வேண்டுமென்று தெரியாது. அத்தகையவர்களுக்காக ப்ராக்கோலியை எப்படி சுவையான முறையில் சமைத்து சாப்பிடுவதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் இங்கு ப்ராக்கோலி பெப்பர் ப்ரை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.
சரி, இப்போது அந்த ப்ராக்கோலி பெப்பர் ப்ரை ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்ததென்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ப்ராக்கோலி – 1 (சிறியது மற்றும் துண்டுகளாக்கப்பட்டது)
உப்பு – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
ப்ரை செய்வதற்கு…
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 5 பற்கள் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு, பின் அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, அத்துடன் ப்ராக்கோலி சேர்த்து 4-5 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்ப அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, வேக வைத்துள்ள ப்ராக்கோலியை சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை பிரட்டி, பின் மிளகுத் தூளை சேர்த்து கிளறி இறக்கினால், ப்ராக்கோலி பெப்பர் ப்ரை ரெடி!!!