இரவில் சப்பாத்திக்கு சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியெனில் இன்று பச்சை பயறு கொண்டு குழம்பு செய்து சுவையுங்கள். பச்சை பயறு குழம்பு பேச்சுலர்கள் செய்யும் அளவில் மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்டது. மேலும் இது சாதத்திற்கும் ருசியாக இருக்கும்.
சரி, இப்போது அந்த பச்சை பயறு குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பச்சை பயறு – 1 கப்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
முதலில் பச்சை பயறை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, சூடேற்றிக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் சீரகத்தைப் போட்டு தாளித்து, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பையும் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால் பச்சை பயறு குழம்பு ரெடி!!!