உலகெங்கிலும் மார்ச் மாதம் பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த மாதத்தில் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், பெருங்குடல் புற்றுநோயில் இருந்து குணப்படுத்தப்பட்டவர்கள், மருத்துவர்கள் இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடுவது வழக்கமாக உள்ளது.
அமெரிக்காவில் பெருங்குடல் புற்றுநோய் தான் மரணத்திற்கு இரண்டாவது பெரும் காரணியாக இருந்து வருகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு மட்டும் 93,090 புதிய நோயாளிகள் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்களை தாக்கும் கேன்சர்களின் எண்ணிக்கையில் மூன்றாம் இடத்திலும், பெண்களை தாக்கும் கேன்சர்களில் இரண்டாவது இடத்திலும் இருக்குமளவுக்கு பெருங்குடல் புற்றுநோய் மிக வேகமாகப் பரவி வருகிறது.
சரி, பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன ? பெருங்குடலின் உட்புறத்தில் தோன்றும் கேன்சர், பெருங்குடல் முழுவதுமாக பரவி, மலக்குடல் வரை தன் தாக்குதலைத் தொடுக்கும் பெருநோய் தான் பெருங்குடல் புற்றுநோய். ஆங்கிலத்தில் கோலன் கேன்சர்.
அதனை பற்றி சில விவரங்களை தற்போது பார்ப்போம்.
மக்களுக்கு பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகள் தென்படுவதில்லை.
அனைத்து நோய்களையும் போலவே பெருங்குடல் புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், குணப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகமாக உள்ளது. ஆனால் விசித்திரம் என்னவென்றால், கோலன் கேன்சர் சிறிது சிறிதாக வளர்ந்து கேன்சர் என்னும் அளவை எட்ட 10 முதல் 15 ஆண்டுகள் எடுத்துக்கொள்கின்றன. 50 வயதுக்கு மேற்பட்டோர் ஆண்டுக்கொரு முறை பெருங்குடல் புற்றுநோய் சோதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், தங்கள் குடும்பத்தில் முன்னோர்களுக்கு இந்த நோய் இருப்பின் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோலன் கேன்சர் சில இனத்தவரிடம் அதிகம் பரவி உள்ளது.
பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் ஒரு சில இனத்தவராகவே இருக்கின்றனர். இன அடிப்படையில் இந்த நோய் இருப்பது போலவே இடம் சார்ந்து தாக்கக்கூடிய நோயாகவும், கல்வி அறிவின் அடிப்படையிலும் பெருங்குடல் புற்றுநோயின் தாக்கம் மாறுபட்டு இருக்கிறது.
அறிகுறிகள்
மருத்துவரும் சில அறிகுறிகளை தவற விட வாய்ப்புள்ளது. பெருங்குடல் புற்றுநோய்கான அறிகுறிகள் தென்பட்டாலும், மருத்துவர்கள் அதனை வேறு நோயின் அறிகுறியாக எடுத்துக்கொள்ளக்கூடிய அபாயம் உள்ளது. அமெரிக்காவில் பெருங்குடல் புற்றுநோயால் இறப்பவர்களில் 5 சதவிகிதம் பேர், தவறாக நோய் அடையாளப்படுத்தியதன் மூலம் இறந்துள்ளனர். வெவ்வேறு முறையாக நோய் கண்டறியும் முறை பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் சிக்கலாக இது இருந்து வருகிறது. எனவே இரண்டாம் கட்ட மருத்துவ ஆலோசனையாக வேறு ஒருவருடனும் பரிசோதித்து பார்த்து உறுதிப்படுத்திக்கொள்வது அறிவுறுத்தப்படுகிறது.
நிரீழிவு நோய் உள்ளவர்களுக்கு ஆபத்து
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. குடல் இயக்கத்தில் கோளாறுகள் மற்றும் கிரோன்ஸ் நோய் போன்றவை சர்க்கரை நோய் உள்ளவர்களை அதிகமாகத் தாக்குவதால் அது கேன்சராக மாற அதிக வாய்ப்புள்ளது.
வயது
பெருங்குடல் புற்றுநோய்க்கு வயதும் மிக முக்கியக் காரணியாக செயல்படுகிறது. பெருங்குடல் புற்றுநோயால பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவிகிதம் பேருக்கு மேல் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். வயதின் அடிப்படையிலேயே கோலன் கேன்சர் அதிகம் வளர்கிறது. சில அரிதான இடங்களில் இளையோருக்கும் பெருங்குடல் புற்றுநோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
தவறான வாழ்க்கை முறை
தினசரி வாழ்வில் நம் பழக்க வழக்கங்களும் இந்த நோய் தாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. புகைப்பழக்கம் உள்ளவர்களுக்குப் பெருங்குடல் புற்றுநோய் வர 14 சதவிகிதம் அதிகம் வாய்ப்புள்ளது. இதே போல் உடல்பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 30 சதவிகிதம் அதிக நோய் தாக்கும் ஆபத்து உள்ளது. அவ்வாறே அதிகம் குடிப்பவர்கள், உடற்பயிற்சி மேற்கொள்ளாதவர்களுக்கும், பதப்படுத்தப்பட்ட இறைச்சி உண்பவர்களுக்கும் பெருங்குடல் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
குடும்ப பின்னணி
நெருங்கிய உறவினர்களில் யாருக்காவது பெருங்குடல் புற்றுநோய் இருந்தால் நமக்கும் அந்த நோய் தாக்க அதிக வாய்ப்புள்ளது. இதற்கு காரணம் இரண்டு பேருக்கும் பவளமொட்டுக்கள் என அழைக்கப்படும் உயிரணுக்கள் ஒரே மாதிரியாக இருப்பது தான்.
அறிகுறிகளில் சிக்கல்
கருப்பை மற்றும் நுரையீரல் புற்றுநோய்களைப் போலவே, பெருங்குடல் புற்றுநோயை அதன் தொடக்க காலத்தில் கண்டுபிடிப்பது பெரும் சவாலானது. குடல் இயக்க மாற்றம், தொடர் வயிற்றுப்போக்கு, மலத்தில் இரத்தம் படிதல், மலச்சிக்கல், எடை குறைவது போன்ற பல அறிகுறிகள் இந்த நோய்க்கு உள்ளதால் கவனமாக இருப்பது நல்லது.
கண்டுபிடிக்கும் முறைகள்
கோலனோஸ்கோப்பி, சிக்மாய்டோஸ்கோப்பி, சி.டி கோலனோகிராஃபி போன்று பல்வேறு முறைகளில் இந்த நோய் தாக்கம் இருப்பதை உறுதி செய்யலாம். இதற்கு சர்க்கரை நோயைக் கண்காணிப்பது போல் வீட்டில் இருந்தே கண்டுபிடிக்கும் வழிமுறைகளும் உள்ளன. மருத்துவர்களை அணுகி நமக்கு ஏற்ற வழிமுறை எது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தொடர் கண்காணிப்பு
சீரான இடைவெளிகளில் பெருங்குடல் புற்றுநோய் பரிசோதனைகள் செய்துகொள்வதன் மூலம், புற்றுநோய் செல்களை, அவை கேன்சராக மாறும் முன்னரே கண்டுபிடித்து அகற்றி விடலாம். புற்றுநோயின் தொடக்கத்தில் அதனை குணப்படுத்தும் வாய்ப்புக்களும் அதிகமாக உள்ளன.