ஒவ்வொரு பெண்ணுக்கும் குழந்தையை வெற்றிகரமாக பெற்றெடுப்பது என்பது மிகப்பெரிய கனவாகும். மேலும் பிரசவம் வெற்றிகரமாக நடப்பது என்பது அந்த பெண்ணின் மறுஜென்மமாகும். முன்பெல்லாம் சுகப்பிரசவம் வேண்டுமென்று நினைத்த பெண்கள் தற்போது சிசேரியன் பிரசவத்தையே நாடுகிறார்கள். இதற்கு சுகப்பிரசவத்தின் போது ஏற்படும் வலி மிகவும் கடுமையாக இருக்கும் என்பது ஒரு முக்கிய காரணம். ஆனால் சிசேரியன் செய்தால், வலி தெரியாது.
அதுமட்டுமின்றி தற்போதைய பெண்களுக்கு குழந்தையைப் பெற்றெடுப்பதற்குள் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இப்பிரச்சனைகளை இயற்கையாக சரிசெய்து, சுகப்பிரசவத்தை மேற்கொள்வது என்பது சற்று கடினமாக இருப்பதால், தற்போது பல மருத்துவர்களும் சிசேரியன் செய்ய ஒப்புக் கொள்கின்றனர்.
இங்கு தற்போதைய பெண்கள் ஏன் சிசேரியன் பிரசவத்தை மேற்கொள்கிறார்கள் என்பதற்கான வேறுசில காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்துப் பாருங்களேன்…
ஆபத்து குறைவு
தற்போது தொழில்நுட்பத்தில் நல்ல முன்னேற்றம் இருப்பதால், சிசேரியன் செய்வதாக இருந்தால், கர்ப்பமான முதல் மாதத்தில் இருந்து எப்படி இருக்க வேண்டுமென்று மருத்துவர்கள் தெளிவாக சொல்கின்றனர். மேலும் சிசேரியன் சிகிச்சையானது பாதுகாப்பானது மட்டுமின்றி, நல்ல தரமான மெஷின்களைப் பயன்படுத்துவதால், கர்ப்பிணிகள் கடுமையான பிரசவ வலியை உணராமல், எளிதில் குழந்தையைப் பெற்றெடுக்க சிசேரியன் வழி செய்கிறது.
அதிக வயதும் ஒரு காரணம்
இன்றைய காலத்தில் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்த பின்னர் குழந்தையைப் பெற்றெடுக்க பல தம்பதியர்கள் விரும்புகின்றனர். இப்படி தாமதமாக குழந்தையைப் பெற்றெடுப்பதால், நிறைய பிரச்சனைகள் உடலில் எழக்கூடும். இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க பல பெண்கள் சிசேரியனை தேர்ந்தெடுக்கிறார்கள். மேலும் இதனால் தற்போது எந்த வயதிலும் குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்ற நிலை வந்துவிட்டது.
ஆரோக்கிய பிரச்சனைகள்
தற்போது 60 சதவீத பெண்கள் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளான உடல் பருமன், இரத்த அழுத்தம், தைராய்டு போன்ற பிரச்சனைகளால் கஷ்டப்படுகிறார்கள். இந்த பிரச்சனைகளுடன் ஒரு பெண் சுகப்பிரசவத்தை மேற்கொள்வது என்பது சற்று கடினமான ஒன்று. எனவே இதனைத் தவிர்த்து, நல்ல ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கவே பல பெண்கள் சிசேரியனை தேர்ந்தெடுக்கிறார்கள்.
மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர்
மருத்துவர்கள் பரிந்துரைப்பதும் பெண்கள் சிசேரியனை தேர்ந்தெடுக்க முக்கிய காரணமாகும். ஏனெனில் மருத்துவர்கள் அன்றாடம் ஒரு பிரசவத்தைக் கையாள்வார்கள். அப்போது ஒவ்வொரு பெண்ணும் படும் கஷ்டத்தைப் பார்த்து, அவர்களுக்கு எந்த பெண்ணால் சுகப்பிரசவத்தை மேற்கொள்ள முடியும் என்று தெரியும். உங்களால் முடியாவிட்டால் தான், மருத்துவர்கள் சிசேரியனை தேர்ந்தெடுப்பார்கள்.
ஒருமுறை மீண்டும் செய்ய தூண்டும்
ஒருமுறை சிசேரியன் மேற்கொண்டால், அடுத்த முறை கருத்தரிக்கும் போதும் சிசேரியன் செய்வதே சிறந்தது என்று எண்ணத் தோன்றும். மேலும் ஏற்கனவே சிசேரியன் செய்த அனுபவம், மீண்டும் கருத்தரிக்கும் போது, அதையே தூண்டும்.