பெற்றோர்களுக்கு மிகப் பெரிய கடமையும், மிகப் பெரிய வேலையுமாக இருப்பது குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவது தான்… குழந்தைகள் சாப்பிட ரொம்ப அடம் பிடிப்பார்கள்.. அவர்களுக்கு இதை பார்.. அதை பார் என்று வேடிக்கை காட்டி சாப்பாடு ஊட்டுவதற்குள்ளேயே பெற்றோர்களுக்கு சில மணி நேரங்கள் ஆகிவிடும்..
தாய்மார்கள் எப்போது நமது குழந்தை ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுகின்றனர். இது நியாயமான ஆசை தான்.. அதே சமயத்தில் குழந்தைகள் சரியாக சாப்பிடாமல் இருக்க ஒரு விதத்தில் பெற்றோர்களும் தான் காரணமாகிறார்கள்..
குழந்தைகள் சாப்பிட அடம் பிடிப்பதற்கு பெற்றோர்கள் செய்யும் ஒரு சில தவறுகளும் காரணமாகின்றன. இந்த பகுதியில் குழந்தைகளின் சாப்பாட்டு ஆர்வத்தை அதிகரிக்க பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும். குழந்தைகளின் சாப்பாட்டு விஷயத்தில் பெற்றோர்கள் செய்யும் தவறுகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.
ஆரோக்கியமற்ற உணவுகள்
குழந்தைகளிடம் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடு என்று கூறினால் மட்டும் போதாது.. குழந்தைகள் பொதுவாக நாம் சொல்வதை கற்றுக் கொள்வதை விட, நாம் செய்யும் ஒவ்வொரு விஷயத்தில் இருந்தும் தான் பாடம் கற்றுக் கொள்கின்றன. பெற்றோர்கள் குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் அதே நேரத்தில் தாங்களும் ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிட வேண்டும்.
பெற்றோர்கள் மட்டும் எக்காரணத்தை கொண்டும், துரித உணவுகளை சாப்பிடுவது என்பது கூடாது. குழந்தைகளுக்கு பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடும் பழக்கத்தை கற்றுக் கொடுங்கள்.
அளவான உணவு
குழந்தையால் சாப்பிட முடிந்த அளவிற்கு அளவான உணவை மட்டும் குழந்தைக்கு கொடுங்கள்.. குழந்தையின் மீது உள்ள பாசத்தில் தட்டு நிறைய சாப்பாட்டை போட்டுக் கொண்டு வந்து நீட்டாதீர்கள். இவ்வாறு செய்தால் குழந்தைக்கு சாப்பிட வேண்டும் என்ற எண்ணமே சுத்தமாக போய்விடும். குழந்தைகளின் சாப்பாட்டு விஷயத்தில் பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்கு உதாரணமாக திகழ வேண்டும்.
கட்டாயப்படுத்துதல்
குழந்தைகளுக்கு பிடிக்காத உணவை வைத்துக் கொண்டு சாப்பிடு, சாப்பிடு என்று மிக அதிகமாக கட்டாயப்படுத்த கூடாது.. விளையாட்டு காட்டி சாப்பிட வைக்க வேண்டும். ஏதேனும் கதை சொல்லிக் கொண்டே குழந்தையை சாப்பிட வைக்க வேண்டியது அவசியமாகும்.
ரூல்ஸ் வேண்டாம்
குழந்தைகளிடம் ரூல்ஸ் போட்டு அவர்களை திணிக்காதீர்கள்.. சோடா குடிக்க கூடாது, ஸ்நேக்ஸ் சாப்பிட கூடாது என்று ரூல்ஸ் போடாதீர்கள்.. இது அவர்களுக்கு ஒரு சுமையாக அமைந்து விடும். எனவே நீங்கள் குழந்தைகள் எதை எதை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்று ஒரு பட்டியல் போட்டு வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
மாலை 5 மணி அளவில் அவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் சுவையான ஸ்நேக்ஸ் வகைகளை கொடுக்கலாம். வாழைப்பழம், முளைக்கட்டிய தானியங்கள் போன்றவற்றை கொடுங்கள்..
இப்படி செய்ய வேண்டாம்!
குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் அதிகமாக சாக்லேட் , ஐஸ்க்ரீம் என கொடுத்துவிட்டால் , அது அவர்களுக்கு இரவு உணவுக்கு முன்னர் எப்படி ஜீரணமாகும். அதற்காக மாலை நேர ஸ்நேக்ஸ் வேண்டாம் என்பதில்லை … உணவுகளுக்கு இடையில் இடைவெளி அவசியம். 10 வயது குழந்தைக்கு ஒரு நாளைக்கு 1000 கலோரிகள் மட்டும் போதுமானது. 300 முதல் 400 கலோரிகள் வரை அவர்களது ஜங்க் உணவுகள் மற்றும் நொறுக்கு தீனிகளின் மூலமாகவே பூர்த்தியடைந்துவிடும்.
அதிக உணவு அபாயம்!
பெரும்பாலான பெற்றோர்களுக்கு ஒருவேளைக்கு தனது குழந்தைக்கு எவ்வளவு மட்டும் போதுமானது என்பதே தெரிவதில்லை. அவர்களுக்கு தேவைக்கு அதிகமாக உணவை கொடுப்பதால், உடல் எடை அதிகரிப்பு மற்றும் மெட்டபாலிசத்தில் பிரச்சனை உண்டாகிறது.
சரியான இடைவெளிகள்
குழந்தைகளுக்கு தரவேண்டிய உணவை சரியான இடைவெளியில் கொடுக்க வேண்டியது அவசியம். அதன்படி அவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு மற்றும் 2 முறை ஸ்நேக்ஸ் தருவதே சிறந்ததாகும்.
வெளி உணவுகள் வாங்கும் போது..!
வீட்டில் சமைக்கப்படாத எந்த ஒரு உணவும் ஆரோக்கியமானது அல்ல. நீங்கள் உங்களது குழந்தைகளுக்கு வெளியில் இருந்து உணவுகள் அல்லது குளிர்பானங்களை வாங்கி கொடுத்தால் அவற்றில் உள்ள லேபிளை கவனமாக படிக்க வேண்டியது அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிமாக சர்க்கரை இருக்கும் எனவே கவனம் தேவை.
சரியான நேரம்
நீங்கள் உங்களது குழந்தைகளுக்கு தரும் உணவினை தினமும் சரியான நேரத்திற்கு தர வேண்டியது அவசியம். அந்த நேரத்திற்கு இடையில் நீங்கள் அதிக கலோரி உணவுகள் அல்லது செரிமானமாக தாமதமாகும் உணவுகளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்திற்கு உணவு கொடுத்தால், அது குழ்ந்தையின் மெட்டபாலிசத்தை பாதிக்கும்.
ஒன்றாக அமர்ந்து சாப்பிடுதல்
குழந்தைகளுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போது நாமும், சரியான உணவு பழக்க முறையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். சரியான முறையில் அமர்ந்து சாப்பிட வேண்டியதும், மொபைல், டிவி போன்றவற்றை பார்த்துக் கொண்டும் சாப்பிடாமல் இருக்க வேண்டியது அவசியமாகும்.