பெங்காலி ஸ்டைல் உணவுகள் எதுவாயினும், அதில் மசாலா பொருட்கள் அதிகம் சேர்த்து செய்வதால், மிகவும் நறுமணத்துடனும், சுவையுடனும் இருக்கும். இப்போது பெங்காலி ஸ்டைல் உணவுகளில் காலிஃப்ளவர் குழம்பை எப்படி செய்வதென்று தான் பார்க்கப் போகிறோம்.
இந்த ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் தேங்காய் பால் சேர்த்து செய்வது தான். சரி, இப்போது அந்த பெங்காலி ஸ்டைல் காலிஃப்ளவர் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் – 1 (சிறியது மற்றும் நறுக்கியது)
வெங்காய பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
அரைத்த தக்காளி – 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் பேஸ்ட் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
தேங்காய் பால் – 1 கப்
சீரகம் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)
செய்முறை:
முதலில் காலிஃப்ளவரை உப்பு நீரில் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின் அந்த நீரை வடிகட்டிவிட்டு, தனியாக காலிஃப்ளவரை வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், காலிஃப்ளவரைப் போட்டு மிதமான தீயில் 5-6 நிமிடம் வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதே வாணலியில் மீதமுள்ள 1 டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு வெங்காய பேஸ்ட் சேர்த்து 4-5 நிமிடம் வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், பச்சை மிளகாய் பேஸ்ட், சீரகப் பொடி, மல்லி தூள் சேர்த்து 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பின் அரைத்த தக்காளியை ஊற்றி, 2-3 நிமிடம் கிளறி விட்டு, காலிஃப்ளவர், உப்பு மற்றும் தேங்காய் பால் ஊற்றி கிளறி, 5-6 நிமிடம் குறைவான தீயில் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
இறுதியில் மூடியைத் திறந்து, அதில் கரம் மசாலா சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், பெங்காலி ஸ்டைல் காலிஃப்ளவர் குழம்பு ரெடி!!!