ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பழங்கள் அவசியமான ஒன்று, அனைத்து வகை பழங்களிலும் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன.
ஆனால் எந்த நேரத்தில், எப்படி சாப்பிட்டால் அதிலுள்ள நன்மைகளை பெறலாம் என்பதை அறிந்து கொண்டு சாப்பிடுவது மிக அவசியம்.
இந்த பதிவில், அதுபற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்.
பழச்சாறுகளை விட பழங்களை அப்படியே மென்று சாப்பிடுவது நல்லது, இதிலிருந்து முழுமையான சத்துக்களை நாம் பெறலாம்.
குறிப்பாக பழச்சாறுகளை அருந்தும் சூழ்நிலை இருந்தால், புதிதாக தயாரிக்கப்பட்ட பழச்சாறுகளை அருந்த வேண்டும்.
டின், பாக்கட்,மற்றும் பாட்டில் இவற்றில் அடைக்கப்பட்ட ரெடிமேட் பழச்சாறுகளை தவிர்க்கவேண்டும்.
இதேபோன்று சூடாக்கப்பட்ட பழச்சாறுகளையும் குடிக்கக்கூடாது. பதப்படுத்தப்பட்ட, சமைத்த பழங்களையும் உண்ணாதீர்கள்.
ஏனெனில் சமைத்த பழங்களில் விட்டமின்கள் அனைத்தும் அழிக்கப்படுவதால், அவற்றிலிருந்து உங்களுக்கு எந்த விதமான சத்துக்களும் கிடைக்காது.
மேலும் பழச்சாறுகளை அருந்தும் போது உமிழ்நீரோடு சேர்த்து அருந்த வேண்டும், மெதுவாக குடிப்பது நல்ல பலனைத்தரும்.
குறிப்பாக மாலை 4 மணிக்கு மேல் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
மாலையில் பழங்கள் சாப்பிடுவது தூக்கம் மற்றும் செரிமான செயல்முறையை சீர்குலைக்கும். பெரும்பாலான பழங்கள் எளிய கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. அதே நேரத்தில் அவை இரத்த சர்க்கரை அளவையும் அதிகரிக்கின்றன. எனவே,கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது நல்லது.
இதேபோல் காலையில் வெறும் வயிற்றில் பழங்களைச் சாப்பிடுவது சிறந்தது. பழங்கள் எப்போதும் தனியாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
பால் அல்லது காய்கறிகளுடன் சேர்த்து எடுக்க கூடாது. அவ்வாறு எடுத்துக்கொள்வது உடலில் நச்சுக்கள் உருவாக வழிவகுக்கும். பழங்களின் முறையற்ற செரிமானம் உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும்.