உணவுப் பயன்பாட்டில் மிளகாய் வருவதற்குமுன், நம் நாட்டில் காரச்சுவைக்கு மிளகைப் பயன்படுத்தி வந்தார்கள் நம் முன்னோர்கள். நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு.
அஞ்சறைப் பெட்டிகளில் தவறாமல் இடம்பிடிக்கும் மிளகு… ரசம், சாம்பார், புளிக்குழம்பு உள்ளிட்ட சைவ உணவுகளிலும், பல அசைவ உணவுகளி்லும் சேர்க்கப்படுகிறது. இது வெறுமனே உணவில் சுவை சேர்ப்பதோடு நின்றுவிடாமல் பல்வேறு நோய்களையும் குணப்படுத்துகிறது.
பசும்பாலுடன் சம அளவு தண்ணீர் சேர்த்துத் தோலுரித்த 10 பூண்டுப் பற்களைச் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் மிளகுத்தூள், மஞ்சள்தூள், பனங்கற்கண்டு சேர்த்து மீண்டும் ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து கீழே இறக்கி நன்றாகக் கடைந்து இரவு உறங்கப்போவதற்குமுன் குடித்துவந்தால் நெஞ்சுச்சளி விலகுவதோடு ஜலதோஷமும் மூக்கடைப்பும் விலகும்.
மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும். பத்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகு, 200 மி.லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடித்து வந்தால் நெஞ்சுச் சளிக் கட்டுதல் நீங்கும். ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது.
மிளகுத்தூளுடன் வெங்காயம், உப்பு சேர்த்துத் தலையில் புழுவெட்டு உள்ள இடங்களில் பூசிவந்தால் முடி வளரும். முகப்பருக்களால் அவதிப்படுபவர்கள் சந்தனம், ஜாதிக்காயுடன் மிளகு சேர்த்து அரைத்துப் பருக்களின்மீது பற்றுப்போட்டு வந்தால் நாளடைவில் உதிர்ந்துவிடும். பல்வலி, சொத்தைப்பல், ஈறுவலி, ஈறுகளில் ரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் போன்ற பிரச்னைகளுக்கு மிளகுத்தூளும் உப்புத்தூளும் சேர்த்துப் பல் துலக்கினால் பலன் கிடைக்கும்.