பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணத்தையும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் கீழே பார்க்கலாம்.
பக்கவாதத்தை தடுக்கும் உணவுப் பழக்கங்கள்
மனித உடலில் 72,000 நரம்புகள் உள்ளன. அனைத்து நரம்புகளிலும் ரத்த ஓட்டம் சீரான முறையில் இருந்தால் தான் உடல் உறுப்புகளும் சீராக இருக்கும். உடல் நிலையும் ஆரோக்கியமாகவே இருக்கும். எந்த நரம்புகளில் ரத்த ஓட்டம் சீராக இல்லையோ அந்த நரம்பு எந்த உடல் உள் உறுப்புகளுக்கு தொடர்பு உடையதோ அந்த உறுப்புகள் பாதிப்பு அடையும். அந்த உறுப்பு எந்த நோய்க்கு தொடர்பு உடையதோ அதை சார்ந்த நோய்களும் உருவாகும்.
ரத்த அழுத்தம் அதிகம் ஆனால் ரத்த குழாய்கள் சுருங்கி விடுவதோடு ரத்த ஓட்டம் தடைபடவும் செய்யும். இதன் காரணமாக இதயம், சிறுநீரகம் போன்றவைகள் பாதிக்கப்படக் கூடும். பக்கவாதமும் ஏற்படும்.
பக்கவாதம் என்பது மூளைக்குச் செல்லும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ அல்லது ரத்த கசிவு ஏற்பட்டாலோ மூளையில் உள்ள செல்களுக்கு ஆக்சிஜன் செல்வதில் தடை ஏற்படுகிறது.
மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டால் மூளையில் உள்ள செல்கள் பாதிப்பு அடைகிறது. இந்த நிலையில் தான் மயக்கம், தலைவலி போன்ற அறிகுறிகளும் ஏற்படும். எந்த பக்கம் பாதிப்பு அடைகிறதோ அந்த பக்கம் கண் அசைவும் இருக்காது. முக வாதமும் தென்படும். ரத்த கசிவு ஏற்படுவதால் மூளையின் முக்கியமான பாகங்களும் பாதிப்பு அடைகிறது. உடல் உறுப்புகளும் பாதிக்கப்படுகிறது. மூளையின் இடது பக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடலின் வலது பக்கம் உள்ள வலது கை, கால்களை ஆட்டவும், அசைக்கவும் முடியாது.
அதே போல் மூளையின் வலது பக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடலில் இடது பக்கம் உள்ள இடது கை, கால்களை ஆட்டவும், அசைக்கவும் முடியாமல் போய் விடுகிறது.
உடலில் ஒரு பக்கம் பாதிப்பு அடைவதால் தான் பக்கவாதம் என சொல்கிறோம். மூளையின் இடது பக்கம் பாதிப்பு ஏற்பட்டால் வலது கை, கால் பாதிப்பு அடைவதோடு பேச முடியாத நிலையும் ஏற்படுகிறது.
பக்கவாதத்துக்கு முக்கியக் காரணம் அதிக உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், முறையற்ற வாழ்க்கை முறை, கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் உண்ணுதல், சர்க்கரை நோய் உடலில் அதிக அளவு காணப்படுதல், அடிக்கடி கோபம் ஏற்படுதல் அதிகமாக டென்ஷன் ஆகுதல், இரவில் அதிக நேரம் தூக்கமின்மை, அதிக நாள் கொண்ட மலச்சிக்கல் மற்றும் மூளைக்குச் செல்ல கூடிய ரத்தக் குழாய்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் பக்கவாதம் வந்து விடுகிறது.
ஒருவருக்கு பக்கவாதம் வந்து விட்டால் அவருக்கு 3 மணி நேரத்துக்குள் சிகிச்சை தந்தால் அவரை விரைவில் குணப்படுத்தலாம். பக்கவாதம் வந்தவரின் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதா அல்லது ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதா என அறிந்து சிகிச்சைக்கு பின் குணம் அடைந்தவுடன் எந்த உணவு பொருளை தவிர்க்க வேண்டுமோ, அவற்றை தவிர்த்தல் நலம் தரும்.
பக்க வாதம் நோய் வராமல் இருப்பதற்கு முதலில் உணவுப் பழக்கத்தை சரியான முறையில் முறைப்படுத்த வேண்டும். உடலுக்கு அதிக கொழுப்பு சத்தை தரும் உணவை தவிர்க்க வேண்டும். மலச்சிக்கல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். அதிக உயர் ரத்த அழுத்தம் இல்லாமல் ரத்தத்தின் அளவு சரியான முறையில் வைத்து கொள்ளவும். உடலில் ரத்தத்தை தூய்மையான நிலையில் வைத்து கொள்ள வருடம் இரு முறை மூலிகை சாறுடன் கடை சரக்கு மூன்றையும் சேர்த்து கசாயம் வைத்து குடிக்கவும்.
ஒருவருக்கு அதிக உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டால் அவருக்கு சித்த வர்ம சிகிச்சை மூலமாக சரியான முறையில் ரத்த அழுத்தத்தை சரியான நிலைக்கு கொண்டு வர முடியும். அதாவது அவரது வயதுக்கு என்ன அளவு ரத்த அழுத்தம் இருக்க வேண்டுமோ அந்த அளவு முறைக்கு கொண்டு வரலாம்.
உடலில் ரத்த அளவு முறை கூடுதலாக இருந்தால் உயர் ரத்த அழுத்தம், குறைவாக இருந்தால் குறைந்த ரத்த அழுத்தம் ஆகும். இந்த இரு வகை பிரச்சினைகளுமே உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடியவையாகும்.
உடலில் ரத்த அழுத்த அளவு மாறுபடுவதற்கு மனமும் ஒரு காரணமாக உள்ளது. அதாவது நம் மனதில் மன அழுத்தம் அதிக அளவில் இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். மனம் பலமாக இருந்தால் தான் உடலும் பலமாக இருக்கும். மன அமைதியைத்தான் எல்லோரும் விரும்புகின்றனர். ஆனால் எல்லோராலும் மன அமைதியுடன் வாழ முடிகிறதா? என்றால் இல்லையே.
ஏன் என்றால் சிலருக்கு வீட்டில் பிரச்சினை, சிலருக்கு அலுவலகத்தில் அதிகபடியான டென்ஷன், சிலருக்கு மனதில் எப்போதும் தேவையில்லாத விஷயங்களை யோசித்து மனதில் குப்பை போன்று பல்வேறு விஷயங்களை தேக்கி வைத்து இருப்பார்கள். மனதில் நல்ல விஷயங்களையும் நல்ல செய்திகளையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நம் வாழ்க்கைக்கு தேவையான நல்ல விஷயங்களையும் கருத்துகளையும் மட்டுமே மனதில் வைத்துக் கொண்டால் போதும். மன அமைதியுடன் வாழலாம்.
அதே போல் பிறருக்கு வாழ்க்கையில் எந்த இடையூறும் செய்யாமல் வாழ்ந்தாலே மனம் எப்போதும் அமைதியாகவே இருக்கும்.