உடல் எடையைக் குறைக்க நாம் நிறைய முயற்சிப்போம். ஆனால் அப்படி முயற்சிக்கும் போது நமக்கு தெரியாமலேயே நாம் சில தவறுகள் செய்வதுண்டு. அந்த தவறுகளால் உடல் எடை குறைவதில் இடையூறு ஏற்பட்டு, எடையைக் குறைக்க முடியாமல் போகிறது. பொதுவாக எடையை வேகமாக குறைக்க நாம் செய்யும் செயல்கள் கடுமையான உடற்பயிற்சி, கொழுப்பு நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது, நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உண்பது போன்றவை.
இருப்பினும் இப்படி எந்த ஒரு செயலையும் கடுமையாக செய்தால், எந்த ஒரு பலனும் கிடைக்காது. மாறாக, அது உடல் ஆரோக்கியத்தை தான் பாதிக்கும். இங்கு ஒருவர் உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கும் போது செய்யும் தவறுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து கொஞ்சம் தெரிந்து கொண்டு, இனிமேல் அந்த தவறுகளை செய்யாதீர்கள்.
அளவுக்கு அதிகமாக பச்சை காய்கறிகளை உண்பது
பச்சை காய்கறிகளை சாலட் செய்து உண்பது நல்லது தான். ஆனால் அதுவே அளவுக்கு அதிகமானால் எடை குறைவதற்கு பதிலாக அதிகரிக்கத் தான் செய்யும். ஏனெனில் பச்சை காய்கறிகளில் உள்ள செல்லுலோஸ் எளிதில் செரிமானமாகாமல் வயிற்றில் தங்கி, செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழித்து, மெட்டபாலிச செயல்பாட்டை மெதுவாக்கி, அதன் காரணம் உடல் எடை அதிகரிக்கச் செய்யும்.
புரோட்டீன்களை அதிகம் உண்பது
உடலுக்கு புரோட்டீன்கள் இன்றியமையாதது தான். ஆனால் அந்த புரோட்டீன்களே அதிகமானால், அவை உடலில் கொழுப்புக்களாக தங்கிவிடும். அதிலும் கார்போஹைட்ரேட் உணவுகளை முற்றிலும் தவிர்த்து, புரோட்டீன் உணவுகளை மட்டும் அதிகம் உட்கொண்டால், அதனால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாகி, நாளடைவில் அதிகப்படியான சர்க்கரை கொழுப்புக்களாக மாறிவிடும். எனவே என்ன தான் டயட்டில் இருந்தாலும், அளவுடன் இருப்பதே நல்லது.
நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உண்பது
எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவில் நார்ச்சத்துள்ள உணவுகள் சேர்க்க வேண்டியது தான். அதற்காக அது அளவுக்கு அதிகமானால், அதனால் நல்ல பாக்டீரியாக்களின் செயல்பாட்டில் இடையூறு ஏற்பட்டு, முக்கிய ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்ச முடியாமல் போய்விடும். மேலும் இதனால் மெட்டபாலிச அளவு குறைந்து, உடல் எடை அதிகரிப்பது அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, அதிகப்படியான நார்ச்சத்துள்ள உணவுகள் வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம் மற்றும் வயிற்றுப் போக்கு போன்றவற்றையும் உண்டாக்கும்.
கடுமையான உடற்பயிற்சி
எடையை வேகமாக குறைக்க கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வந்தால், அதனால் உடலில் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அளவு அதிகரித்து, அதனால் உண்ணும் உணவுகளின் அளவை அதிகரித்துவிடும். இதன் காரணமாக உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.
உணவில் குறைவாக உப்பு சேர்ப்பது
உணவில் உப்பை குறைவாக சேர்ப்பது நல்லது தான். ஆனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சனைகள் இல்லாதவர்கள், ஒரு நாளைக்கு 1500 மிகி உப்பை ஒவ்வொருவரும் எடுக்க வேண்டியது அவசியம். ஏனெனில் உப்பு கலோரிகளை எரிக்கவும், செரிமானத்திற்கும், மன அழுத்த ஹார்மோன்களைத் தடுக்கவும் செய்யும்.
வெறும் தண்ணீரைக் குடிப்பது
எடையைக் குறைக்க நினைக்கும் போது குடிக்கும் நீரின் அளவை அதிகரிப்போம். ஆனால் அப்படி நீரை மட்டும் அளவுக்கு அதிகமாக குடித்தால், வயிறு நிறைந்து, உணவுகளை உண்ண முடியாமல் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்காமல் போகும். எனவே எடையைக் குறைக்கும் காலத்தில் ORS நீரைக் குடியுங்கள். இதனாடல் உடலுக்கு வேண்டிய கனிமச்சத்துக்கள், எலக்ட்ரோலைட்டுகள் போன்றவை கிடைத்து, உடலின் மெட்டபாலிச அளவும் அதிகரிக்கும்.
நல்ல கொழுப்புக்களைத் தவிர்ப்பது
எடையைக் குறைக்க டயட்டில் இருக்கும் போது, அனைத்து வகையான கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளையும் தவிர்ப்போம். ஆனால் நல்ல கொழுப்புக்கள் உடலுக்கு மிகவும் அவசியமானது மற்றும் அதுவும் உடலில் மெட்டபாலிச அளவை அதிகரித்து, உடல் எடையைக் குறைக்க உதவும். எனவே நல்ல கொழுப்புக்களான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் இதர அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள் நிறைந்த உணவுப் பொருட்களான ஆலிவ் ஆயில், மீன், நட்ஸ் போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.