உடல் வளர்ச்சி, உடலை காத்தல் இவை இரண்டையும செய்வது உடல் உட்கொள்ளும் உணவால்தான்.
நீங்கள் உண்ணும் உணவே உடலுக்கு மருந்து
உண்ணும் உணவே உடலுக்கு மருந்தாகிறது. உடல் வளர்ச்சி, உடலை காத்தல் இவை இரண்டையும செய்வது உடல் உட்கொள்ளும் உணவால்தான். அதிகமாக உணவு உட்கொண்டால் அதிக அளவு சக்தி உடலுக்கு கிடைப்பதாக நினைத்தால் மிக தவறு. அன்று அதிகப்படியான உணவு அதிகப்படியான சக்தியை அவ்வுணவு செரிப்பதற்கு உபயோகிக்கின்றது. எனவே கூடுதல் உணவு கூடுதல் சக்தி தருவதில்லை என்பதை அறிய வேண்டும்.
எண்ணெயை மாற்றுங்கள் :
சமையல் எண்ணெய்க்கும் நம் உடல் நலத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நம்மில் பெரும்பாலோர் சமையலுக்கு ஒரே எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். இது நிச்சயம் ஆரோக்கியக் கேட்டை விளைவிக்கும். ஏனெனில் ஒவ்வொரு எண்ணெயிலும் பலவிதமான சத்துக்கள் பலவிதமான அளவுகளில் காணப்படுகின்றன.
ஒரே எண்ணெயை பயன்படுத்துவதால் சில சத்துக்கள் உடலில் அதிகமாக சேர்ந்து ஆரோக்கியக் கேட்டை விளைவிக்கும். இதன் காரணமாகவே நாம் ஒவ்வொரு மாதமும் சமையல் எண்ணெயினை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு மாதம் சூரியகாந்தி எண்ணெயை பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து கடலை எண்ணெய், ரைஸ்பிரான் ஆயில் (தவிட்டு எண்ணெய்) என ஒவ்வொரு மாதமும் சமையல் எண்ணெயினை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இதனால் ஆரோக்கியம் நிச்சயம் பெருகும்.
உணவு உட்கொள்ளும் முறைகள் :
நன்றாக குளிக்க வேண்டும். பின்பு, உடலை நன்றாக துடைத்துப் புத்தாடை அல்லது தூய்மையான ஆடைகளை அணிய வேண்டும். பிறகு சாப்பிட வேண்டும். உணவருந்துவதற்கு முன்பாக கை-கால்களை நன்றாக தூய்மை செய்து கொள்ள வேண்டும். உணவு உண்ணும்போது அவசர அவசரமாக அள்ளிப் போட்டு விழுங்கவும் கூடாது. நீட்டி முழக்கிக் கொண்டு நெடுநேரம் சாப்பிடவும் கூடாது. நொறுங்கத் தின்றால் நூறு வயது. ஆகையால் உணவை நன்றாக மென்று சுவைத்து உட்கொள்ள வேண்டும்.
உணவருந்தும் போது கோபம், துக்கம், அவசரம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மனநிலையைப் பொருத்துதான் நாம் உண்ணும் உணவுகள் உடலில் செரிமானமாகின்றன. பசித்தால்தான் உணவு உண்ண வேண்டும். வாய்க்கு ருசியில்லாத அருவருப்பான சுவைக் கொண்டவற்றை விலக்கி விடுவதே சிறந்த முறையாகும்.
சாப்பிடும் போது, கொழுப்புப் பொருளைக் கொண்ட நெய் போன்ற திரவமான உணவை முதலில் உட்கொள்ள வேண்டும். இடையில் புளிப்பும், உப்புமுள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். “வாயைக் காப்பவன் தன் வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்கிறான்” என்பது ஸ்வீடன் பழமொழி. எனவே பசித்த பின்னர் சாப்பிடுவது என்ற கொள்கையை முதலில் இன்று முதல் கடை பிடிக்கத் தொடங்குங்கள். உங்கள் ஆயுள் நிச்சயம் கூடும்.
அடிக்கடி சாப்பிடுவதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் கவலை வேண்டாம். எண்ணெயால் செய்யப்பட்ட உணவுகளை தவிர்த்து ஆவியில் வேக வைக்கப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். சுண்டல் போன்ற உணவுகளை சாப்பிடுங்கள். ஒரே சமயத்தில் நிறைய உணவை சாப்பிடாமல் சிறிய அளவாக சாப்பிடப் பழகிக் கொள்ளுங்கள். எந்த வேலையினையும் செய்யாமல் வெறுமனே உட்காரும் வழக்கத்தை கை விடுங்கள். ஏதேனும் ஒரு விஷயத்தில் அதிக கவனத்தைச் செலுத்துங்கள். அப்போது சாப்பாட்டின் ஞாபகம் உங்களுக்கு தோன்றாது.