பண்டைக்காலங்களில், மரங்கள் செழித்து வளரும் இடங்களில் உள்ள கோவில்களின் கடவுள்களை, அம்மரங்களின் பெயரிட்டே அழைப்பார்கள். நாவல் மரங்கள் மிகுந்து விளைந்த பகுதிகளான, திருச்சி திருவானைக்காவலில் உள்ள சிவபெருமானை, ஜம்புகேஸ்வரர் என்றும், கும்பகோணம் நாட்சியார்கோவில் அருகில் உள்ள கூந்தலூர் எனும் சிற்றூரில் உள்ள சிவபெருமானை, ஜம்புகாரனேச்வரர் என்றும் அழைப்பார்கள். வட மொழியில் ஜம்பு என்றால் நாவல் மரம் என்று பொருள்.
மேலும், தொண்டு தமிழ் கவி அவ்வையிடம், முருகப்பெருமான், சிறுவன் வடிவில் தோன்றி, பாட்டி, உனக்கு “சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?” என்று கேட்டு, பழத்தில் ஏது சுட்ட பழம் என்று அவ்வைவையே திகைக்க வைத்த அந்த நிகழ்வில், சுட்ட பழம் என்பது, கரிய நிறத்தில் உள்ள நாவல் பழமே, என்பதை நாம் புராணக்கதைகளிலிருந்து அறியலாம்.
இப்படி மரங்களின் பெயரில் இறைவனை அழைக்கக்காரணம், மிகுதியான அளவில் அந்த மரங்கள் இருப்பதால் அவற்றை அழிக்காமல், காத்து வர வேண்டும் என்பதற்காகவே, இறைவன் பெயரை அம்மரங்களின் பெயரில் அழைத்தனர்.
இப்படி சிறப்புபெற்ற நாவல் மரம், அக்காலத்தில் நம் தேசம் முழுவதும் விரவி இருந்தது, இம்மரங்களின் செழுமையான பழங்கள் மனிதர்க்கு மட்டும் விருப்பமானவை அல்ல, கிளி போன்ற பறவை இனங்களுக்கும் பிடித்தமானவை. நாவல் மரங்கள் உயர்ந்து வளர்ந்து நிழல் தருபவை.
மேலும், மனிதர்க்கு, ஆயுள் வழங்கும் ஆக்சிஜனை அதிக அளவில் வெளியிடுபவை, இதனாலேயே, அக்காலங்களில், சாலையோரங்களில், நாவல் மரங்களையும் அதிக அளவில் வளர்த்து, மனிதர்கள் பகலில் இளைப்பாறி செல்ல, வழி வகைகள் செய்தனர்.
சாதாரணமாக எங்கும் வளரும் இயல்புடைய நாவல் மரங்கள், மற்ற பலன் தரும் மரங்கள் போலவே, தற்போது காண்பதற்கு அரிதாகிவிட்டது என்பது, வருத்தமான ஒன்று.
நாவல் மரத்தின் மருத்துவ குணங்கள் : இத்தகைய சமூக நன்மைகள் செய்யும் நாவல் மரங்கள், அளிக்கும் கனிகள், பட்டைகள் மற்றும் வேர்கள் ஆகியவையும், மனிதர்களின் தனிப்பட்ட வியாதிகளை போக்கும் தன்மைகள் கொண்டவை.
முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை, வீடுகளில் கிணறுகள் கட்டாயம் இருக்கும், தண்ணீர் பஞ்சம் எனும் ஒன்றே, அவ்விடங்களில் இல்லாதிருக்கும். அந்தக் கிணறுகளில், கோடைக் காலங்களில், கிணற்று நீரை தூய்மை செய்யவும், நீருக்கு சுவை கூட்டவும், நாவல் மரக் கிளைகள் மற்றும் நெல்லி மரக் கிளைகளை, கிணற்று நீரில் இடுவர். அதன்பின், அந்த நீர் பருக மிகவும் சுவையாக இருக்கும்.
நாவல் மரங்கள் செழித்து வளரும் இடங்களில், நிலத்தடி நீர் நிறைந்திருக்கும், மேலும், அந்தப் பகுதிகளில் தங்கத் தாதுக்கள் மிகுந்து காணப்படும் என்று தொன்மையான இதிகாச நூல்கள் குறிப்பிடுகின்றன.
இப்படி, அற்புதங்கள் பல, தன்னகத்தே கொண்டு விளங்கும் நாவல் மரங்கள், பொதுவாக, மனிதரின் சர்க்கரை பாதிப்புகளுக்கு தீர்வாக விளங்கி, இரத்தத்தை, சுத்திகரிக்கும் தன்மை மிக்கதாகத் திகழ்கின்றன. நாவல் மரத்தின் விதைகள் மற்றும் பழங்கள் மனிதர்க்கு ஏற்படும் கபம் மற்றும் பித்தம் எனும் பாதிப்புகளை சரியாக்கும்.
பசியை அதிகரிக்கும் : நாவல் பழங்களில் உள்ள தாதுக்கள், இரும்புச்சத்தின் காரணமாக, உடலுக்கு வலிமை தரும் ஆற்றல் மிக்கது. செரிமானத்தை தூண்டி, பசியை அதிகரிக்கும்.
வயிற்றுப் போக்கு : நாவல் பழத்தை உப்பில் போட்டு சாப்பிடுவதால் தொண்டைக் கட்டு உண்டாவது குறையலாம். நாவல் பழத்தினால் அதிக தாகம் நீங்கும். பழுக்காத காய்களை நன்கு உலர்த்திப் பொடி செய்து, சிறிது அதில் எடுத்து, மோரில் கலந்து பருகிவர, வயிற்றுப் போக்கு குணமாகும்.
களைப்பு நீங்கும் : நாவல் மரப்பட்டைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரைப் பருக, களைப்பு, இருமல், நீர் தாகம் நீங்கி, சுவாச வியாதிகளும் விலகும். மேலும், இந்த நீர், குரலில் இனிமையைக் கூட்டும். பொடியாக்கிய நாவல் மரப்பட்டையை, காயங்களின் மேல் இட, காயங்கள் விரைவில் குணமாகும். மேலும் வீக்கம், கட்டி இவற்றின் மீதும் இட்டு கட்டிவர, அவை யாவும் குணமாகும்.. நாவல் வேறை நீரில் ஊற வைத்து, அந்த நீரைப் பருகிவர, வயிற்றுப் போக்கு, சர்க்கரை பாதிப்புகளை போக்கும், மேலும் ஜுரத்தை போக்கி, உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கி, உடலை வலுவாக்கும். நாவல் விதைகளை தூளாக்கி, மாவிலைகளோடு அரைத்து தயிரில் கலந்து சாப்பிட, சீதபேதி உள்ளிட்ட வயிற்றுப் போக்குகள் நின்று விடும்.
ரத்தத்தை அதிகரிக்கும் : நாவல் பழம் சாப்பிட்டுவர, மூக்கில் இருந்து இரத்தம் வடிவது குறையும், செரிமான சக்தியை அதிகரிக்கும், உடல் இரத்தத்தை சுத்திகரித்து, இரத்தத்தை அதிகரிக்கும். ஊற வைத்த நாவல் பழ சாறு, உடலுக்கு சிறந்த வியாதி எதிர்ப்பு மருந்தாக விளங்கும். நாவல் பழத்தை உப்பிட்டு உண்டுவர, தொண்டைக்கட்டு, நா வறட்சி சரியாகும். நாவல் பழக் கொட்டைகளை காய வைத்து பொடியாக்கி, தினமும் இருவேளை நீரில் கலந்து பருகிவர, சர்க்கரை பாதிப்புகள் விலகும்.
நாவல் மரங்களின் வளமான வணிக வாய்ப்பு: மனிதர்க்கு உடல் ஆரோக்யத்தை சரிசெய்யும் நாவல் மரங்கள், மனிதரின் பொருளாதார வளர்ச்சிக்கும் உறுதுணையாக விளங்குகின்றன. நாவல் மரம் சார்ந்த பொருட்களின் தேவைகள் உள்நாட்டில் மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் தேவை அதிகரிப்பால், நாவல் மரங்களை தோட்டங்களில் வளர்த்து, பொருளாதார மேன்மையை அடையலாம். ஒரு ஏக்கருக்கு கிட்டத்தட்ட எழுபது முதல் எண்பது மரங்கள் வரை நடலாம், தற்போதுள்ள ஒட்டு வகை நாவல் கன்றுகள் எல்லாம், குறைந்த பட்சம் நான்கு ஆண்டுகளில் காய்ப்புக்கு வந்துவிடுகின்றன.
அதிகம் பராமரிப்பு தேவைப்படாத நாவல் மரத்திற்கு, அவ்வப்போது நீர் மட்டும் பாய்ச்சி வர, விளைச்சல் அதிகமாகும். நாவல் பழங்களுக்கு உலகளவில் தேவைகள் உள்ளன, பழமாகவும், மதிப்பு கூட்டப்பட்ட பழக்கூழ் மற்றும் இதர வகைகளில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பொருளீட்டலாம், அல்லது உள்ளூர் முகவர்களிடம் விற்கலாம்.
உள்நாட்டு தேவைகளும் நிறைய உள்ளன, எளிதில் விற்றுவிட முடியும். நாவல் மரக் கன்றுகள், அவற்றின் காற்றை சுத்திகரிக்கும் தன்மைக்காக, வெளிநாடுகளில் அதிகம் தேவையுள்ள மரங்களாகியுள்ளன.
எனவே, நாவல் மரங்கள், நம் உடல் ஆரோக்யத்தை காத்து, நாம் வாழுமிடங்களை தூய்மை படுத்துவதோடு, மேலும் நாம் முயற்சித்தால், அவை நம் பொருளாதார வாழ்வையும், வளமாக்கித் தரும் என்பதில் ஐயமில்லை.