குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியை வெட்டிவிடுவது உலகெங்கிலும் இருக்கும் வழக்கம்தான். ‘தொப்புள் கொடி வெட்டப்படும் இந்த நேரத்தை 3 நிமிடங்களுக்காவது நீட்டிப்பது நல்லது’ என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது.
ஸ்வீடனில் 263 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில்தான் இந்த வியப்பூட்டும் உண்மை வெளிவந்துள்ளது. பிறந்தவுடன் தொப்புள் கொடி வெட்டப்பட்ட குழந்தைகளையும், 3 நிமிடங்களுக்குப் பிறகு தொப்புள் கொடி வெட்டப்பட்ட குழந்தைகளையும் ஆய்வுக்காக எடுத்துக் கொண்டார்கள். தாமதமாக தொப்புள்கொடி வெட்டப்பட்ட குழந்தைகளுக்குத் தாயிடமிருந்து கூடுதலாக ரத்தப் பரிமாற்றம் நடந்திருப்பது தெரிய வந்தது.
குழந்தைகளுக்கு 4 வயதானபோது ஆய்வாளர்கள் அவர்களைக் கவனித்தார்கள். தாமதமாக தொப்புள்கொடி வெட்டப்பட்ட குழந்தைகள் போதுமான இரும்புச்சத்துடனும் நல்ல மூளை வளர்ச்சியுடனும் ஆரோக்கியமாக இருந்தார்கள். இவர்களுக்கு, நரம்பு மண்டலங்கள் சிறப்பாக செயல்படுவதையும், சமூகத்தில் பழகும் திறன் மேம்பட்டு இருப்பதையும் JAMA Pediatrics என்ற மருத்துவ இதழில் ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இந்த ஆய்வை ஏற்றுக் கொண்ட உலக சுகாதார நிறுவனம், குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது காத்திருந்து தொப்புள் கொடியை
வெட்டுமாறு பரிந்துரைத்துள்ளது.