பெற்றோர் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசுவது, மற்றவர்கள் முன் குறை கூறுவது குழந்தைகள் மனதை புண்படுத்தும் விஷயமாகும். இதனால் மோசமான பின் விளைவுகள் ஏற்படும்.
குழந்தைகளின் நல்ல செயல்களை மற்றவர்கள் முன்னிலையில் பாராட்டுவது அவர்களை உற்சாகப் படுத்துவதோடு மேன்மைப்படுத்தவும் உதவும். சில பெற்றோர் தங்கள் குழந்தைகளை கண்டிப்பதாக நினைத்துக் கொண்டு பலர் முன்னிலையில் அடிப்பது உண்டு. இது முற்றிலும் தவறான செயல். குழந்தை மனநல மருத்துவர்கள் கூற்றுப்படி பெரும்பாலான குழந்தைகள் பெற்றோர்களின் மேல் உள்ள கோபத்தை அவர்கள் மற்ற குழந்தைகள் தம்பி, தங்கைகள் மீது காட்ட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.
பொது இடங்களில் பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்துவது மிகவும் கடினமான செயல். பொறுமையாக அவர்களை கட்டுப்படுத்த முயலுங்கள். முடியாவிட்டால் அந்த இடத்திலிருந்து அவர்களை அழைத்துக் கொண்டு வெளியேறி விடுங்கள்.
குழந்தைகள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டி அவர்களுக்கு புரியும் படி பொறுமையாக எடுத்து சொல்லி, ஊக்குவித்து வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. அதைவிட்டு விட்டு குழந்தைகளை மற்றவர்களின் முன்னிலையில் திட்டுவதோ, அடிப்பதோ முக்கியமாக மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசுவதோ அவர்களின் மனதில் ஒரு தாழ்வான எண்ணத்தை உருவாக்கி அவர்களின் எதிர்காலமே வீணாக வாய்ப்பு உள்ளது.
எனவே, பெற்றோர்கள் இது போன்று செய்யாமல் குழந்தைகள் செய்யும் சிறு சிறு விஷயங்களையும் பாராட்டினால், அதுவே அவர்களின் வெற்றிக்கு பாதையாய் அமையும்