குழந்தைகள் வளர்ந்து பள்ளி செல்ல ஆரம்பிக்கும் போது, அனைத்து பெற்றோர்களுக்குமே நிறைய சந்தேகங்களும், கேள்விகளும் எழ ஆரம்பிக்கும். அதில் முதன்மையானது குழந்தை பிடிப்பில் சிறந்தவராக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது தான். ஏனெனில் அனைத்து பெற்றோர்களுக்குமே தன் குழந்தை நன்கு படித்து, எதிர்காலத்தில் நல்ல வேலையில் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும்.
அதற்காக அவர்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதில் இருந்தே அவர்களுக்கு அனைத்தையும் பார்த்து பார்த்து செய்வார்கள். அதுமட்டுமின்றி, குழந்தையை எப்போதும் படி படி என்று சொல்வார்கள். மேலும் குழந்தைகள் அனைவருமே ஒரே மாதிரி இருக்கமாட்டார்கள். ஆனால் சிறு வயதில் இருந்தே அவர்களுக்கு படிக்கும் பழக்கத்தில் ஈடுபடுத்தினால், அவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
எனவே இங்கு சிறு வயதிலேயே உங்கள் குழந்தை படிப்பில் சிறந்தவராக இருக்க பெற்றோர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று ஒருசில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நடந்தால், குழந்தைகளின் ஆர்வத்தை படிப்பில் செலுத்தி சிறந்தவராக மாற்ற முடியும்.
டைம்டேபிள் தயாரியுங்கள்
உங்கள் குழந்தை பள்ளி செல்ல ஆரம்பிக்கும் போதே, டைம்டேபிள் தயாரித்து, அதன்படி நடக்க வைக்க வேண்டும். இப்படி செய்வதால், அவர்கள் சரியான நேரத்தில் சாப்பிட, படிக்க, விளையாட வைத்து, சரியான நேரத்தில் தூங்க வைக்கவும் முடியும். மேலும் இதனால் குழந்தைகள் வளர வளர அவர்களுக்கு இந்த பழக்கமானது பழகி, அவர்களுக்கு தானாகவே படிப்பில் ஆர்வம் வரும்.
கவனிப்பு அவசியம்
வெறும் டைம்டேபிளை தயார் செய்து, அவர்களுக்கு பழக்கப்படுத்திவிட்டால் மட்டும் போதாது. அவர்களின் ஒவ்வொரு செயலையும் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். ஏனெனில் சிறு வயதில் குழந்தைகளுக்கு விளையாட்டு புத்தி சற்று அதிகம் இருப்பதால், அவர்கள் படிக்க உட்காரும் போது, 10 நிமிடத்திற்கு ஒருமுறை என்ன படித்தார்களோ அதை அவர்களிடம் கேட்க வேண்டும். இதனால் அவர்கள் மனதை ஒருமுனைப்படுத்தி படிப்பார்கள்.
ஆதரவாக இருக்கவும்
குழந்தையை படிக்க சொல்லிவிட்டு, நீங்கள் நாடகம் அல்லது மற்ற நிகழ்ச்சிகளை டிவியில் பார்த்தால், குழந்தைகளுக்கு உங்கள் மீது கோபம் தான் வரும். எனவே உங்கள் குழந்தை படிக்க ஆரம்பிக்கும் போது, அவர்களின் அருகில் இருந்து, அவர்களுக்கு ஆதரவாக, அவ்வப்போது சிறுசிறு டிப்ஸ் கொடுத்து படிக்க வைக்க வேண்டும்.
ஆசிரியர்களை சந்திக்கவும்
முக்கியமாக அவ்வப்போது உங்கள் குழந்தைகளின் ஆசிரியர்களை சந்தித்து, அவர்கள் எப்படி படிக்கிறார்கள் என்று கேட்டு, ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதையும் கேட்டு தெரிந்து கொண்டு, அதனை சரிசெய்ய முயல வேண்டும்.
பரீட்சை நேரத்தின் போது…
குழந்தைகளுக்கு பரீட்சை ஆரம்பிக்கும் போது, அவர்களை எந்நேரமும் படி படி என்று நச்சரிக்காமல், அவர்களை ரிலாக்ஸ் அடையச் செய்து, பொறுமையாக அவர்களுடன் அமர்ந்து, அவர்களை டென்சன் இல்லாமல் படிக்க வைக்க வேண்டும். முக்கியமாக அந்நேரத்தில் அவர்களை அடித்து படிக்க வைக்க வேண்டாம். சொல்லி புரிய வைக்க வேண்டும்.