எந்த ஒரு நல்ல விஷயத்தையும் கூறும் போது “அந்த காலத்தில்..” என்று நமது முன்னோர்களை நினைவு கூர்ந்து தான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. ஆம், அவர்கள் நமக்கு கற்பித்தது, செய்வித்தது அனைத்துமே நல்லவை மட்டுமே. உறவுகளில் இருந்து உணர்வுகள் வரை மட்டும் அல்ல, உணவுகளிலும் கூட அவர்கள் நமக்கு நல்லதை கற்பித்துள்ளனார். நாம் தான் அதை மறந்துவிட்டோம்.
இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் வறுத்த உணவுகளை தான் விரும்புகின்றனர். இட்லியை கூட காலை உணவாக ஏற்றுக் கொள்ள அவர்களது மனம் மறுக்கிறது, உண்மையை சொல்ல போனால் வெறுக்கிறது. இதற்கு யார் மேலும் பழி கூற முடியாது அனைத்திலும் மேற்கத்தியம் கற்பித்துவிட்டு உணவில் மட்டும் நம் பாணியை பின்பற்ற சொன்னால் அது எப்படி சரியான முறையாகும்.
ஆனால், இன்றைய வாழ்வியலில் மாதந்தோறும் மருத்துவமனை வாசலை மிதிக்க வேண்டியிருக்கும் காலக்கட்டத்தில் இருக்கிறோம். அது இனி வேண்டாம், அவித்த உணவுகளை உங்கள் அன்றாட உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொண்டாலே, புற்றுநோய், இதய கோளாறு, உடல் எடை, செரிமானம், இரத்த கொழுப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் வராது…
சிறந்த காலை உணவு
காலை உணவாக அவித்து சமைக்கப்படும் இட்லி, இடியாப்பம், புட்டு ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது என கூறப்படுகிறது. அதிலும் இட்லி உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் சிறந்த காலை உணவாக பரிந்துரைக்கப்பட்டிருகிறது.
புற்றுநோயை தடுக்கும்
ஆவியில் வேக வைக்கும் போது, அதிலிருக்கும் குளுக்கோசினோலேட்ஸ், சல்பரோபேனாக மாறுகிறது. இதுதான் கேன்சர் வராமல் தடுக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பச்சையாக இருக்கும் பிராக்கோலியை விட, அவிக்கபடும் போது குளுக்கோசினோலேட்ஸ் 30 சதவிகிதம் அதிகரிக்கிறது.
கொழுப்புச்சத்து குறைவு
எண்ணெய் உபயோகம் இல்லை என்பதால் அவித்து சமைக்கும் உணவுகளில் கொழுப்புச்சத்து குறைவாக இருக்கும். இது பல வகைகளில் உங்கள் உடல்நலத்தை பாதுகாக்கும்.
உடல் எடை குறைவு
அவித்து சமைக்கும் உணவுகளை சாப்பிடும் போது கொழுப்புச்சத்து குறைவாக இருப்பதால் உடல் எடை குறையும். எடையை குறைக்க விரும்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டில் அவித்த உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது.
இதயம் பாதுகாக்கப்படும்
எண்ணெய் இன்றி சமைக்கப்படுவதால் அவித்த உணவுகள் இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கிறது. கொழுப்புச்சத்து இல்லாததே இதற்கு காரணம் ஆகும். எனவே, இதய பாதிப்புகள் அல்லது கோளாறுகள் உள்ளவர்கள் அவித்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.
செரிமானத்திற்கு நல்லது
அவித்து சமைக்கும் உணவுகள் மென்மையாக இருக்கும். அதனால் எளிதாக ஜீரணம் ஆகிவிடும். இதனால், வயிற்று உபாதைகளோ அல்லது செரிமான கோளாறுகளோ ஏற்படாது.
வைட்டமின் பி
பசலைக்கீரை மற்றும் பிராக்கோலியை அவிக்கும் போது வைட்டமின் பி பாதுகாக்கப்படுகிறது.
வைட்டமின் சி
அவிக்கப்பட்ட பிராக்கோலியில் வைட்டமின் சி மற்றும் குளோரபைல் போன்ற சத்துகள் பாதுகாக்கப்படுவதாக தெரிவிக்கின்றன. மீனைக் கூட அவித்து சாப்பிடும் முறை நல்லது என்கிறார்கள். இந்த முறையில் நத்தை, இறால் போன்றவற்றையும் சமைக்கலாம் என்கிறார்கள்.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்
கேரட், பசலை, காளான், முட்டைகோஸ் போன்ற பல காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதைவிட அவித்து சாப்பிடும் போது அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ், ஃபோலிக் அமிலம் போன்றவை பாதுகாக்கப்படுகின்றன.
சிறு தானியங்கள்
ஆவியில் வேக வைத்த மக்காச்சோளம், கம்பு, வரகு போன்ற சிறு தானிய உணவுகளை எண்ணெயில் சமைத்து சாப்பிடுவதை விட அவித்து சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. எனவே, வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்த்து, அவித்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும் பழக்கத்தை கையாளுங்கள்!!!