இஞ்சி டீ என்பது மசாலா கலந்த மரபு சார்ந்த பானமாகும். இதனை ஆசியா முழுவதும் பரவலாக பருகி மகிழ்ந்து வருகின்றனர். மேலும் உலகம் முழுவதும் புகழ் பெற்ற பானமாக இது விளங்குகிறது. இஞ்சியை ஆயுர்வேதம் மற்றும் சீன மருந்துகளில் கடந்த 3000 ஆண்டு காலமாக பயன்படுத்தி வருவது நம் அனைவருக்கும் தெரியும். அஜீரணம், அலர்ஜி, ஒற்றைத் தலைவலி, குமட்டல், வயிற்றுப் போக்கு மற்றும் இதர நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணத்தை இஞ்சி பெற்றுள்ளதால், இஞ்சி டீ ஒரு சிறந்த இயற்கை மருந்தாக விளங்குகிறது.
டீ இலைகள் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ இஞ்சி டீயை தயார் செய்யலாம். இதனுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து பருகுவார்கள் சீன மக்கள். அதே போல் இஞ்சி இனிப்பு மற்றும் தேனுடன் கலந்து இதனை பதப்படுத்தி பருகுவார்கள் கொரிய மக்கள். தேன், எலுமிச்சை ஜூஸ் அல்லது புதினாவுடன் சேர்த்து பருகும் போது இதன் சுவை அலாதியாக இருக்கும். இஞ்சி டீயில் பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி வளமையாக உள்ளது. சொல்லப்போனால் இஞ்சி டீ பருகுவதால் எண்ணிலடங்கா உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது.
ஆனால் புகழ் பெற்ற பழமொழியான “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பது இதற்கும் பொருந்தும். மற்ற அனைத்து மூலிகை பொருட்களை போல இஞ்சி டீயும் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அளவுக்கு அதிகமாக இஞ்சி டீயை பருகும் போது, வயிற்றுப் போக்கு, நெஞ்செரிச்சல், வாய் எரிச்சல் போன்ற பக்க விளைவுகளை சிலர் அனுபவிக்கக்கூடும். இஞ்சியை மாத்திரை வடிவில் எடுத்துக் கொண்டால், இந்த பக்க விளைவுகளில் சிலவற்றை போக்க அது உதவிடும். இப்போது இஞ்சி டீயை அளவுக்கு அதிகமாக பருகினால் ஏற்படும் பக்க விளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
அதிகமாக பருகுதல்
எதையுமே அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், அது உடல்நலத்திற்கு தீங்கை தான் விளைவிக்கும். அது இஞ்சி டீக்கும் பொருந்தும். நம் உடலின் தேவைப்பாட்டைப் பொறுத்து இஞ்சி டீயை குறைந்தே அளவிலேயே பருக வேண்டும். அது அளவுக்கு அதிகமாக செல்கையில், உங்கள் செரிமான அமைப்பு பாதிக்கப்படும். இதனால் வாயில் எரிச்சல், வயிற்றுப் போக்கு, குமட்டல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் நம் உடலில் அமில உற்பத்தியை அதிகரிக்க செய்து அசிடிட்டியை உண்டாக்கும். அதே போல் சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களும் கூட இஞ்சி டீயை அதிகமாக பருகுவதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து ஹைபோகிளைசீமியா உண்டாகும்.
இரத்த கோளாறு நோய்கள்
இஞ்சி டீயில் ஆஸ்பிரின் அல்லது ஐபூப்ரோஃபெனில் உள்ளது போலவே வலி நீக்கி உள்ளது. மேலும் உயர் இரத்த அழுத்தத்திற்காக மருந்து எடுத்துக் கொள்பவர்கள் கண்டிப்பாக இஞ்சி டீயை பருக கூடாது. அது இரத்த அழுத்தத்தை குறைத்து, இதய படபடப்பை உண்டாக்கிவிடும். ஹீமோகுளோபினை உரையச் செய்யும் இரத்தத்தின் பகுதிகளான இரத்தத்தட்டுக்களின் செயல்பாட்டில் இஞ்சி தலையிடும். அதனால் இரத்த ஒழுக்கு நோயான ஹீமோஃபிலியா எனப்படும் இரத்த கோளாறு நோய்கள் ஏற்படும். அதனால் இஞ்சி டீ பருகுவதற்கு முன்பாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.
தூக்க பிரச்சனைகள்
இஞ்சி டீ குடிப்பதால் அமைதியற்ற மற்றும் தூக்கமற்ற நிலை உருவாகும். சிலருக்கு அது தூக்கத்தை கெடுப்பதால், படுக்க போகும் முன்பு இஞ்சி டீயை பெரும்பாலும் தவிர்க்கவும். ஏனெனில் பல மணிநேரத்திற்கு தூக்கம் வராமல் போகலாம். அதனால் உங்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்பட்டு உயிருக்கே கூட அது ஆபத்தாய் முடியும்.
மயக்க மருந்து
அறுவை சிகிச்சைக்கு முன்பாக அல்லது நெடுங்காலமாக இஞ்சி டீயை பருகி வருபவர்களுக்கு அது ஆபத்தை விளைவிக்கும். அதற்கு காரணம் மயக்கத்திற்காக கொடுக்கப்படும் மருந்து இஞ்சி டீயுடன் எதிர் செயலாற்றும். அதன் தொடர்ச்சியாக உறைவெதிர்ப்பியுடன் ஏற்படும் தொடர்பால் ஒளியுணர்ச்சி எதிர் செயலாற்றல், புண் மற்றும் இரத்த கசிவு போன்றவைகள் குணமாவதில் சிரமம் ஏற்படும். அதனால் அறுவை சிகிச்சைக்கு குறைந்தது 1 வாரத்திற்கு முன்பாகவே இஞ்சி டீ பருகுவதை நிறுத்திட மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.
பித்தப்பைக் கற்கள்
பித்தப்பைக் கற்களால் அவதிப்பட்டு வருபவர்கள் ஊட்டச்சத்து சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்பு தான் இஞ்சியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு காரணம் அதனாலான பக்க விளைவுகள் நிகழக்கூடியவையாக இருக்கும். பித்தப்பை கற்களை கொண்டவர்களுக்கு பித்தநீர் சுரக்கும் போது மிகுந்த வலி ஏற்படும். இஞ்சி என்பது பித்தநீரை மேம்படுத்துவதால், அது நிலைமையை இன்னமும் மோசமடைய தான் செய்யும்.
வயிற்றுப் போக்கு
குமட்டலுக்கான சிகிச்சைக்கு இஞ்சி டீயை பயன்படுத்தி வந்தாலும் கூட, அதனை வெறும் வயிற்றில் அளவுக்கு அதிகமாக பருகினால் இரைப்பை பிரச்சனை ஏற்பட்டு விடும் என மேரிலேன்ட் மெடிக்கல் மைய பல்கலைகழகம் கூறியுள்ளது. இஞ்சி டீ குடிக்கும் அளவு ஒருவருக்கொருவர் மாறுபடும். அதனால் எந்தளவு பருகினால் ஒருவருக்கு இரைப்பை பிரச்சனை ஏற்படும் என்பதை கூறுவது கஷ்டமாகிவிடும்.
கர்ப்பம்
இஞ்சி பயன்படுத்துதலும் கர்ப்பமும் சர்ச்சைக்குரிய விஷயமாகும். கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் குமட்டலுக்கு இஞ்சி டீ சிறந்த மருந்தாக விளங்கும் என சில மருத்துவர்கள் பரிந்துரைத்தாலும் கூட, வயிற்றில் உள்ள சிசுவிற்கு அது நச்சுத்தன்மையாய் மாறும் எனவும் கூறப்படுவதால், கர்ப்பிணி பெண்கள் இஞ்சி டீயை தவிக்க வேண்டும். தாய் மற்றும் சேயின் உடல்நலத்திற்கு அது நல்லதல்ல என பாரம்பரிய சீன மூலிகை வைத்தியர்களும் கூறுகின்றனர். மேலும் அது கருச்சிதைவை கூட ஏற்படுத்தலாம். அதனால் கர்ப்ப காலத்தின் போது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே இஞ்சி டீயை பருக வேண்டும்.