அன்னையர் தின ஸ்பெஷல்: தாய்மையைப் போற்றுவோம்!
மே 2வது ஞாயிறு அன்னையர் தினம்
அன்னையர் தினம்… அன்பாலும், கருணையாலும், கனிவாலும் குடும்பத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் அம்மாவைப் போற்றக் கிடைத்த நாள்..! உலகெங்கும் மே இரண்டாவது ஞாயிறு அன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் உருவான வரலாறு அன்னையைப் போலவே நெகிழ்வானது.
தாய் தெய்வ வழிபாடும், திருவிழாவும் மனித சமூகம் உதித்த காலத்தில் இருந்தே நிகழ்ந்து வருகின்றன. பழங்காலத்தில் கிரேக்கர்கள் வசந்த காலத்தின் துவக்கத்தை தாய் தெய்வத்தை வணங்கியே கொண்டாடினார்கள். ரோமர்களும் ‘சைபெலி’ என்ற பெண் தெய்வத்தை தாயாகக் கருதி வழிபட்டனர். இப்போது நாம் கொண்டாடி மகிழும் அன்னையர் தினத்துக்கு விதையிட்டது அன்னா ஜார்விஸ் எனும் அமெரிக்கப் பெண்மணி.
அன்னா ஜார்விஸ் அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியா மாகாணத்தில், கிராப்டான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். அங்கிருந்த செயின்ட் ஆண்ட்ரூ மெதடிஸ்ட் தேவாலயத்தில் தன் தாய்க்காக நினைவகம் ஒன்றை அமைத்தார். இதுதான் அன்னையர் தினம் கொண்டாடப்படுவதற்கான அடித்தளம். இன்று இந்நினைவகம் அன்னையர் தினத்திற்கான கோவிலாக விளங்குகிறது. ஆனால் அவ்வளவு எளிதில் இது நடந்துவிடவில்லை.
அமைதி செயற்பாட்டாளரான அன்னா ஜார்விஸ், தன் பணி மூலமாக தன் அம்மாவுக்கு புகழும் பெருமையும் கிடைக்கவேண்டும் என்று விரும்பி, அமெரிக்க சிவில் போரின்போது காயம்பட்ட ராணுவ வீரர்களை குணப்படுத்தும் பணியில் தீவிரமாக செயல்பட்டார். அதற்காக அன்னையர் தின விடுதிகளைத் தொடங்கினார். ஒரு கட்டத்தில், தன் தாய்க்குக் கிடைத்த பெருமை உலகின் அனைத்துத் தாய்மார்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தாயைப் போற்றுவதற்கென்று ஒரு தினத்தை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கினார்.
1908ல் அன்னாவின் கோரிக்கையை அமெரிக்க காங்கிரஸ் சபை பரிசீலித்தது. ஆனாலும் இதனை அதிகாரபூர்வ விடுமுறை நாளாக ஏற்றுக் கொள்ளவில்லை. அன்னா ஜார்விஸ் செய்த பிரச்சாரத்தின் விளைவாக அமெரிக்காவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் அதனை உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்தன. 1910ல் அன்னா வாழும் மேற்கு வெர்ஜினியாவில் அன்னையர் தினம் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
1914ல் அமெரிக்க அதிபர் வுட்ரோ வில்சன் அன்னையர் தினத்தை சட்டபூர்வமாக அங்கீகரித்து கையெழுத்திட்டார். அன்றிலிருந்து மே மாதம் இரண்டாவது ஞாயிறு அன்னையர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. “அன்னையர் தினத்தில் சந்தைப்படுத்துவது போன்ற வாழ்த்து அட்டைகள் விற்பது, பரிசுப்பொருட்கள் வழங்குவதன் மூலம் அந்நாளின் அர்த்தமே கெடுகிறது.
எனவே அந்நாளினை காலண்டரில் இருந்தே நீக்கவேண்டும்” என்று தன் வாழ்நாளின் பின்னாட்களில் அன்னா ஜார்விஸ் போராடியது தனிக்கதை. எது எப்படியாயினும், எந்த எதிர்பார்ப்பும் அற்று, அன்பையும், பாசத்தையும், நேசத்தையும் வாரி வாரி வழங்கும் அன்னையைக் கொண்டாடும் இந்த நாள், நிச்சயம் புனித நாள் தான்..!