குழந்தைகளுக்கு சளி, இருமல் உண்டாகும் போது தாய்மார்கள் கவனிக்க வேண்டியதும், சளி, இருமலை தவிர்க்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் கடலூர் முதுநகர் எஸ்.டி.மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் முகுந்தன் கூறியதாவது:-
6 மாதம் முதல் 6 வயது வரை குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை ஏற்படுவது இயற்கையே. சளி, இருமல் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏதும் இல்லையென்றால் மருந்து ஏதும் இல்லாமலேயே ஒரு வாரத்தில் சரியாகிவிடும்.
மூச்சு விடுவதில் சிரமம், அதிக இருமல் இருப்பின் அல்லது ஒரு வாரத்திற்கு மேல் இருப்பின் டாக்டரிடம் காண்பிக்க வேண்டும். டாக்டரின் ஆலோசனையில்லாமல் மருந்துக்கடைகளில் மருந்து வாங்கி சாப்பிடுவது குழந்தைகளுக்கு நல்லதல்ல.
சில சமயங்களில் கேடு விளைவிக்கக்கூடும். பாட்டிலில் பால் குடிக்கும் குழந்தைக்கு சளி, காய்ச்சல் வர 3 முதல் 4 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும். பின் 2 வயது வரை தாய்ப்பாலுடன் வீட்டில் சமைக்கும் உணவை தர வேண்டும்.
எந்த வயதிலும் பிற பாலோ, டின் உணவோ தரக்கூடாது. சுத்தமான காற்று, நீர், சுற்றுப்புறத்தினால் நல்ல பழக்க வழக்கங்களினால் அடிக்களி சளி பிடிப்பது குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.