வாரம் ஒருமுறை கீரையை உணவில் சேர்த்து வந்தால், உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்க்கலாம். அதிலும் எளிதில் கிடைக்கும் முருங்கைக்கீரையை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் அழிவதோடு, உடலின் இரும்புச்சத்தும் அதிகரிக்கும்.
சிலருக்கு முருங்கைக்கீரையை பொரியல் செய்து சாப்பிட பிடிக்காது. அத்தகையவர்கள் முருங்கைக்கீரையை சாம்பார் செய்து சாப்பிடலாம். இங்கு அந்த முருங்கைக்கீரை சாம்பாரை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்து மகிழுங்கள்.
Drumstick Leaves Sambar
தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை – 1/2 கப்
துவரம் பருப்பு – 1/4 கப்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 2
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்
புளி – 1 பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
தாளிப்பதற்கு…
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
முதலில் துவரம் பருப்பை நீரில் 1/4 மணிநேரம் ஊற வைத்து நன்கு கழுவி, குக்கரில் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள், பூண்டு, பெருங்காயத் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து 2-3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்து முருங்கைக்கீரை மற்றும் தக்காளியை சேர்த்து, பின் புளிச்சாறு, உப்பு மற்றும் சாம்பார் பொடி சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
பின் அதில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், முருங்கைக்கீரை சாம்பார் ரெடி!!!