உணவில் கைக்குத்தல் அரிசியை சேர்த்து வருவது நல்லது. அதிலும் டயட்டில் இருப்போர் இதனை உட்கொண்டு வந்தால், உடலுக்கு வேண்டிய நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் கிடைப்பதுடன், கால்சியம், மக்னீசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இவற்றை அன்றாடம் உட்கொண்டு வந்தால், எலும்புகள் மற்றும் பற்கள் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
இங்கு கைக்குத்தல் அரிசி தோசையை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சித்து சாப்பிட்டு மகிழுங்கள்.
Easy And Healthy Brown Rice Dosa Breakfast
தேவையான பொருட்கள்:
கைக்குத்தல் அரிசி – 3 கப்
உளுத்தம் பருப்பு – 1 கப்
கடலைப் பருப்பு – 1/2 கப்
பாசிப்பருப்பு – 1/2 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
அவல் – 1 கப்
வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் கைக்குத்தல் அரிசி, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு மற்றம் பாசிப் பருப்பை நீரில் நன்கு கழுவி, பின் இரவு முழுவதும் நீரில் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் காலையில் எழுந்ததும் வெந்தயம் மற்றும் அவலை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அவை அனைத்தையும் நீரில் மீண்டும் கழுவிவிட்டு, கிரைண்டரில் அனைத்தையும் போட்டு தோசை மாவு பதத்திற்கு அரைத்து, 8-9 மணிநேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
மாவானது நன்கு புளித்ததும், தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், எண்ணெய் தடவி மாவைக் கொண்டு தோசைகளாக சுட்டு எடுத்தால், கைக்குத்தல் அரிசி தோசை ரெடி!!! இந்த தோசையானது தேங்காய் அல்லது தக்காளி சட்னியுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.