சிலருக்கு கருணைக்கிழங்கு மிகவும் பிடிக்கும். அதிலும் அதனை புளிக்குழம்பு வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். சிலருக்கு கருணைக்கிழங்கை எப்படி சமைப்பதென்று தெரியாது. அத்தகையவர்களுக்காக தமிழ் போல்ட் ஸ்கை கருணைக்கிழங்கு புளிக்குழம்பை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது.
குறிப்பாக இந்த புளிக்குழம்பானது பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறு மிகவும் ஈஸியாக இருக்கும். சரி, இப்போது அந்த புளிக்குழம்பின் செய்முறையைப் பார்ப்போமா!!!
Karunai Kilangu Pulikulambu
தேவையான பொருட்கள்:
கருணைக்கிழங்கு – 10 (வேக வைத்தது)
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 1 (நறுக்கியது)
பூண்டு – 10 பற்கள்
பச்சை மிளகாய் – 2
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – 1 டீஸ்பூன்
புளிச்சாறு – 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு…
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் கருணைக்கிழங்கை சேர்த்து மூடி வைத்து 15-20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பின்னர் அதனை இறக்கி, நீரை வடிகட்டி விட்டு தோலுரித்து, கருணைக்கிழங்கை மீண்டும் அதே பாத்திரத்தில் போட்டு, சுத்தமான நீரை ஊற்றி, அதில் சிறிது புளிச்சாறு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து 3 நிமிடம் நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும்.
பின் அதில் மசாலா பொருட்களான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து 30 நொடிகள் கிளறி, பின் அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
பின்பு அதில் சர்க்கரை, உப்பு சேர்த்து கிளறி, புளிச்சாறு சேர்த்து பின் வேக வைத்துள்ள கருணைக்கிழங்கையும் சேர்த்து பிரட்டி 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அதில் அரிசி மாவை 1/4 கப் நீரில் கலந்து ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், கருணைக்கிழங்கு புளிக்குழம்பு ரெடி!!!