பொதுவாக யாருக்குமே நீண்ட நேரம் சமையலறையில் இருந்து சமைக்க பிடிக்காது. அதனால் கஷ்டமான ரெசிபிக்களை பலர் முயற்சிக்கவே மாட்டார்கள். மாறாக எளிமையான ரெசிபிக்களை தேடி கண்டுபிடித்து சமைப்பார்கள். அப்படி உங்களுக்கு ஈஸியான ரெசிபிக்கள் வேண்டுமானால், உருளைக்கிழங்கு காலிஃப்ளவர் கிரேவி செய்யுங்கள்.
இது மிகவும் ஈஸியான ரெசிபி. 10 நிமிடங்களில் சமைத்துவிடலாம். சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு காலிஃப்ளவர் கிரேவியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
Aloo Gobi Gravy Recipe
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 3 (வேக வைத்து நறுக்கியது)
காலிஃப்ளவர் – 1 (நறுக்கி வேக வைத்தது)
தக்காளி – 3 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
சர்க்கரை – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
சீரகம் – 1 டீஸ்பூன்
பிரியாணி இலை – 1
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 1 கப்
கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து அதில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் காலிஃப்ளவர் சேர்த்து 2-3 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சர்க்கரை, சீரகப் பொடி சேர்த்து 3-4 நிமிடம் கிளறி, பின் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து 3-4 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
பிறகு அதில் தண்ணீரை ஊற்றி, மூடி வைத்து 5 நிமிடம் மிதமான தீயில் நன்கு கொதிக்க வைத்து இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், உருளைக்கிழங்கு காலிஃப்ளவர் கிரேவி ரெடி!!!