பெண்களுக்கு முதுகு, இடுப்பு மற்றும் கழுத்து வலிக்கான முக்கியமான காரணம். சமையல் அறைகளில் நாம் செய்யும் சின்னச் சின்னத் தவறுகள்தான். அவை என்னவென்று பார்க்கலாம்.
பெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறை
பெண்களில் 30 வயதைக் கடந்த பலரும் முதுகு, இடுப்பு மற்றும் கழுத்து வலியால் அடிக்கடி சிரமப்படுவார்கள். வீட்டு வேலைகளை முடித்ததும் சில பெண்களுக்கு விரல்கள் மரத்துவிடும். கழுத்தைத் திருப்பவே முடியாத அளவுக்கு வலி இருக்கும். அந்த வலி மற்ற பாகங்களுக்கும் பரவும்.
இந்த வலிக்கான முக்கியமான காரணம். சமையல் அறைகளில் நாம் செய்யும் சின்னச் சின்னத் தவறுகள்தான். இதுபோன்ற தவறுகளைத் தவிர்க்கவும், ” ‘கிச்சன் எர்கனாமிக்ஸ்’ எனப்படும் சமையல் அறைப் பணிச் சூழல் சரியான முறையில் இருந்தாலே போதும் பிரச்சனைகள் ஓடோடிவிடும்.
சமைக்கும் முறை சமையல் மேடை அருகே நின்று நாம் சமைக்கும்போது, சமையல் மேடையின் உயரம் நமது உயரத்துக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். மேடை உயரமாக இருந்தால் கைகளை ஊன்றிக்கொண்டோ அல்லது சமையல் பாத்திரத்தை எக்கிப்பார்த்தோ சமைப்பதுபோல இருக்கக் கூடாது. இப்படிச் சமைத்தால், அடுப்பில் இருக்கும் பாத்திரங்களில் உள்ள உணவுப் பொருட்களைக் கிண்டும்போது, கை மூட்டுப்பகுதியைச் சிரமப்பட்டுத் தூக்க வேண்டி இருக்கும்.
அதனால், அந்தப் பகுதியில் உள்ள தசைகளில் பிடிப்பு ஏற்படும். பிறகு, இது வலியாக மாறும். இதைத் தவிர்க்க கை மூட்டுப்பகுதி உயர்த்தப்படாமல், சாதாரண நிலையில் நின்று சமைக்கும் வகையில் சமையல் மேடையின் உயரம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
உயரம் குறைவாக இருப்பவர்கள் சரியான உயரத்தில் மேடை இருக்கும் வகையில் மரப்பலகைகளைப் பயன்படுத்தி அதன் மீது நின்று சமைக்கலாம். பாத்திரம் கழுவும் முறை பாத்திரம் கழுவப் பயன்படும் ‘சிங்க்’ உயரம் உங்களது உயரத்துக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். அதாவது, குனிந்தோ அல்லது எட்டிப் பார்த்தோ பாத்திரங்களைக் கழுவ வேண்டாத நிலையில் இருக்க வேண்டும். இதனால், முதுகு, கை மற்றும் கழுத்து வலி வராமல் தடுக்கலாம்.
கிரைண்டர் பயன்படுத்தும் முறை கிரைண்டரில் மாவு அரைக்கும்போது நின்ற நிலையில்தான் கிரைண்டரைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு ஏற்றவாறு கிரைண்டரைச் சற்று உயரத்தில் வைத்துகொள்ள வேண்டும். அதை விடுத்து கிரைண்டரைத் தரையில் வைத்துவிட்டு அடிக்கடி குனிந்து, நிமிர்ந்து வேலை செய்யும்போது முதுகுப் பகுதிகளில் இருக்கும் தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு, முதுகு வலி உண்டாகும். பொருட்களை எடுக்கும் முறை சமைக்கும்போதே திடீரென பின்னால் இருக்கும் ஒரு பொருளை எடுக்க வேண்டி இருந்தால், கைகளை மட்டும் பின்னே நீட்டி அந்தப் பொருளை எடுப்பது முற்றிலும் தவறு.
அப்போது இடுப்புப் பகுதித் தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு இடுப்பு வலி வரும். அதாவது, கண்ணுக்குத் தென்படும் தூரத்தில் இருக்கும் பொருட்களை மட்டுமே உடலைத் திருப்பாமல் கைகளை மாத்திரம் நீட்டி எடுக்கலாம். பார்வை தூரத்துக்கு அப்பால் இருக்கும் பொருட்களை எடுக்க, நாம் முழுவதுமாக அந்தப் பொருளை நோக்கித் திரும்பியே ஆக வேண்டும். அதுதான் நல்லது. இதேபோல் பொருட்கள் இருக்கும் அலமாரியும் நமது உயரத்துக்கு ஏற்றவாறு இருத்தல் வேண்டும். உயரமான அலமாரியில் இருந்து பொருட்களை அண்ணாந்து பார்த்து எடுக்கும்போது கழுத்து வலியும் கை வலியும் ஏற்படும்.
இதைத் தவிர்க்க அலமாரியைச் சரியான உயரத்தில் அமைக்க வேண்டும். இல்லை எனில், ஒரு அகலமான மரப்பலகை வைத்துக்கொண்டு அதன் மீது ஏறி நின்று, பொருட்களை முன்கூட்டியே கீழே எடுத்துவைத்துக்கொண்டு பயன்படுத்த வேண்டும். காய்கறிகளை வெட்டும் முறை காய்கறிகளை வெட்டும்போது, நின்றுகொண்டு வெட்டுவதுதான் உத்தமம். அப்போதுதான் நம் உடலில் இருக்கும் மொத்த சக்தியும் முறையாகப் பயன்படுத்திக் காய்கறிகளை வெட்ட முடியும். உடலில் தேவை இல்லாமல் வலி ஏற்படாது. டைனிங் டேபிளில் அமர்ந்துகொண்டு வெட்டினால், கைகளில் இருக்கும் சக்தியை மட்டுமே பயன்படுத்தி வெட்ட முடியும். இதனால் கைகளில் வலி ஏற்படும்.
உடல் வலியைக் குறைக்க.
* வாஷிங் மெஷின் பயன்படுத்தும்போது, மேல்புறமாகத் துணிகளைப் போடும் வகையில் இருக்கும் மெஷின்களைப் பயன்படுத்துவது நல்லது.
* சிலிண்டர்களை உருட்டியவாறே இடம்மாற்றக் கூடாது. இதற்கென இருக்கும் பிரத்யேக நகர்த்திகளைப்(cylinder rollers) பயன்படுத்தித்தான் இடம் மாற்ற வேண்டும்.
* கேஸ் ரெகுலேட்டரைத் திருப்ப, குனிந்தவாறே முயற்சிக்க வேண்டாம். சற்றே கால்களை மடக்கிய நிலையில் ரெகுலேட்டரைத் திருப்புவது நல்லது.
* காய்கறிகளை வெட்டப் பயன்படுத்தும் கத்தியின் நீளம் அதிகமாகவும் கைப்பிடி மெல்லியதாகவும் இருத்தல் வேண்டும்.
* சமைக்கப் பயன்படுத்தும் கரண்டிகள் நீளமாக இருத்தல் வேண்டும். அடுப்பில் வைக்கும் பாத்திரங்களும் சற்று அகலமானதாக இருக்க வேண்டும். இதனால் கை வலி இல்லாமல் கிண்டுவது, வறுப்பது போன்ற சமையல் வேலைகளை எளிதாகச் செய்ய முடியும். கேஸ் விரயத்தையும் தடுக்கலாம்.