உயரத்துக்கு ஏற்ற உடல்வாகு அனைவருக்கும் அமையாது. சில பெண்களுக்கு அழகான உடல் அமைப்பு இருந்தும், கைகள் மட்டும் மிகவும் தடிமனாக இருக்கும். இதற்குக் காரணம், கைப் பகுதியில், கொழுப்பு படிவதுதான். குறிப்பாக, 30 வயதைக் கடக்கும் பெண்களுக்கு இது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும்.
இதனைத் தவிர்க்க, கைகளுக்கு முறையான உடற்பயிற்சி அவசியம். பொதுவான வார்ம்-அப்- பயிற்சிகளைச் செய்துவிட்டு, கைகளுக்கான பயிற்சிகளைத் தொடங்குவது நல்லது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த இரு பயிற்சிகளை தினமும் தொடர்ந்து முறையாக செய்து வந்தால் கைகளில் உள்ள அதிகப்படியான சதை குறைவதை காணலாம். மேலும் உணவு கட்டுப்பாட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த பயிற்சிகளை செய்ய ஆரம்பித்த 1 மாதத்திலேயே நல்ல முன்னேற்றம் தெரிவதை காணலாம்.
பைசெப் பிரேச்சி கர்ல் (Bicep brachii curl) : விரிப்பில் முழங்கால்களைச் சற்று முன்னோக்கி மடக்கியபடி நேராக நிற்க வேண்டும். கைகளை நீட்டி, இரண்டு கைகளிலும் டம்பிள்ஸைப் பிடித்துக்கொள்ள வேண்டும். இப்போது, கைகளை மெதுவாகக் கீழே இறக்கி, உயர்த்த வேண்டும். இதுபோல 20 முறை செய்ய வேண்டும்.
ஹிப் ஹிஞ்ச் ட்ரைசெப்ஸ் (Hip hinge triceps ) : விரிப்பில் கால்களைச் சற்று அகட்டி, உடலைச் சற்று வளைத்தபடி நிற்க வேண்டும். கைகளைச் சற்று மடித்து, மார்புக்கு முன்நேராக இருக்கும்படி வைத்து, டம்பிள்ஸைப் பிடித்துக்கொள்ள வேண்டும். இப்போது, கைகளைப் பின்னோக்கிக் கொண்டுசென்று, பழைய நிலைக்கு வர வேண்டும். இடைவெளி இன்றி தொடர்ந்து 20 முறை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இந்த இருபயிற்சிகளையும் 20 முறை செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.