உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான்.
அதிலும் தற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன.
இத்தகைய உணவுகளை உட்கொண்டு, அதனால் உடலில் தங்கும் கொழுப்புக்களை கரைப்பதற்கு, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு கூட நேரம் கிடைக்கவில்லை. இதனால் 40 வயதில் வரக்கூடிய இதய நோயானது, 30 வயதிலேயே வந்து விடுகிறது.
இதனை எளிய முறையில் தடுக்க ஒரு சில இயற்கை பொருட்கள் உள்ளன. அதில் கறிவேப்பிலையும் ஒன்றாகும். இப்போது கறிவேப்பிலை வைத்து செய்யக்கூடிய தொக்கு ஒன்றை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை – 1 கப்
புளி – சிறிய எலுமிச்சை பழம்அளவு
துருவிய வெல்லம் – ஒரு கைப்பிடி அளவு
காய்ந்த மிளகாய் – 4
கடுகு – சிறிதளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
உப்பு, நல்லெண்ணெய் – தேவைக்கு கடுகு பொடி – சிறிதளவு
செய்முறை
புளியையும், மிளகாயையும் சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.
பிறகு கறிவேப்பிலை விழுதைக் கொட்டி கிளறவும். கெட்டி பதத்துக்கு வந்ததும் வெல்லம், உப்பு தூவி கிளறி இறக்கவும்.
அதனுடன் கடுகு பொடி தூவி பரிமாறலாம்.