ஒருவர் நீண்ட காலம் உயிருடன் வாழ்வதற்கு உணவுப் பழக்கங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. அதனால் தான் நம் முன்னோர்கள் 100 வயது வரை ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். ஆனால் இந்த காலத்தில் 50 வயது வரை உயிருடன் இருப்பதே ஆச்சரியமாக உள்ளது. அந்த அளவில் நம் உணவுப் பழக்கவழக்கங்கள் மிகவும் மோசமாக உள்ளது.
இப்படிப்பட்ட மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால் பல்வேறு நோய்கள் நம்மை விரைவில் தாக்கி, நம் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பழக்கங்களை பின்பற்றி வந்தால், நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக நோயின்றி வாழலாம்.
சரி, இப்போது நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு பின்பற்ற வேண்டிய சில முக்கிய உணவுப் பழக்கங்கள் என்னவென்று பார்ப்போமா!!!
டிப்ஸ் #1 பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதிலும் கீரைகளை அதிகமாக உணவில் சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
டிப்ஸ் #2 கோதுமையை உணவில் சேர்க்க நினைத்தால், முழு கோதுமையை தேர்ந்தெடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அதில் தான் சத்துக்கள் அதிகம் உள்ளது.
டிப்ஸ் #3 வாரத்திற்கு 2-3 முறையாவது மீனை உணவில் சேர்த்து வாருங்கள். ஆய்வு ஒன்றில் 10,000 மக்களை பரிசோதித்ததில், அவர்களுள் மீன் மற்றும் பச்சை இலைக் காய்றிகளை அதிகம் உட்கொண்டவர்களின் வாழ்நாள் நீடிப்பதாக தெரிய வந்துள்ளது.
டிப்ஸ் #4 இறைச்சிகளை வாரத்திற்கு ஒருமுறை எடுத்துக் கொள்வது மட்டுமே சிறந்தது. ஏனெனில் அவற்றில் கொழுப்புக்கள் அதிகமாக இருப்பதால், இக்கால மக்களுக்கு இறைச்சிகள் நல்ல உணவாக அமைவதில்லை.
டிப்ஸ் #5 தினமும் போதிய அளவில் தண்ணீர் குடித்து வந்தால் தான், உடலுறுப்புகள் சீராக இயங்கும். இல்லாவிட்டால், உடல் வறட்சி ஏற்பட்டு பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
டிப்ஸ் #6 தினமும் பால் டீ குடிப்பதற்கு பதிலாக ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்து வந்தால், பல உடல்நல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
டிப்ஸ் #7 முக்கியமாக சர்க்கரை கலந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வேண்டுமானால் இனிப்பிற்கு வெல்லம் அல்லது தேனைப் பயன்படுத்தினால், இனிப்பு சுவை கிடைப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
டிப்ஸ் #8 காபி குடிக்கலாம். ஆனால் அது அளவுக்கு அதிகமானால், அதுவே உடல் ஆரோக்கியத்திற்கு உலை வைத்துவிடும். எனவே தினமும் ஒரு டம்ளருக்கு மேல் காபி குடிக்க வேண்டாம்.
டிப்ஸ் #9 உங்களுக்கு முட்டை பிடிக்குமானால், தினமும் 3-4 முட்டையை சாப்பிடுங்கள். ஆனால் மஞ்சள் கருவுடன் அதிகம் சாப்பிட வேண்டாம். ஏனெனில் மஞ்சள் கருவில் கொழுப்புக்கள் இருப்பதால், அதனைத் தவிர்ப்பது நல்லது. வேண்டுமானால் ஒரு முட்டையை மஞ்சள் கருவுடன் சாப்பிட்டு, எஞ்சிய முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடலாம்.
டிப்ஸ் #10 தினமும் சிறிது நட்ஸ் சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும். ஏனெனில் நட்ஸில் அன்றாடம் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் வாழ்நாளின் அளவை நீட்டிக்கவும் நட்ஸ் உதவுகிறது.
டிப்ஸ் #11 தினமும் சிறிது பயறுகளை வேக வைத்து சாப்பிடுவது நல்லது. ஏனெனில் அவற்றில் கார்போஹைட்ரேட், புரோட்டீன், கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள், கொழுப்புக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
டிப்ஸ் #12 முக்கியமாக பால் பொருட்கள் எடுத்துக் கொள்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை கால்சியம் சத்தைப் பெற வேண்டுமானால், கீரைகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் கீரைகளிலும் கால்சியம் சத்து உள்ளது. ஏன் பால் பொருட்களை அதிகம் எடுக்க கூடாதெனில், அவற்றை அதிக அளவில் எடுத்தால், செரிமான மண்டலத்தின் செயல்பாட்டிற்கு இடையூறு விளைவிக்கும்.