உடல்நலம் குன்றி மருத்துவமனைக்கு செல்லும் போது மருத்துவர் நமது எடையை சோதிப்பர். உடல் எடை கூடினாலோ குறைந்தாலோ அதற்கு தக்க வகையில் மருந்து மாத்திரைகளை எழுதி தருவார். குறிப்பாக உணவில் கீரைகளை அதிகம் சேர்க்க வேண்டும் என அனைத்து மருத்துவர்களும் அறிவுரை கூறுவதில் தவறுவதில்லை. அன்றாடம் உணவில் கீரையை சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்கும்.
அதில் உள்ள வைட்டமின்களும், தாதுஉப்புகளும் உடல் வலுவை கூட்டக்கூடியவை. குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு உணவில் அதிகமாக கீரைகளை சேர்க்க வேண்டும். சத்தான ஆகாரம் கிடைக்காமல் உள்ள குழந்தைகளுக்கு கீரைகள் வரப்பிரசாதம். ஏனெனில் ரத்தசோகை பிரச்சனையைத் தீர்க்ககூடிய மகத்துவம் வாய்ந்தவை கீரைகள். ஒவ்வொரு வகையான கீரைக்கம் ஒரு சத்து உள்ளது.
கீரைகள் குறுகிய காலத்தில் வளரக்கூடியவை என்பதால் இப்போது ஆர்கானிக் முறையில் கீரைகள் வளர்க்கப்படுகிறது. இந்த கீரைகளை பிரஷ்ஷாக வாங்கி சமையல் செய்தால் சுவை கூடுதலாக இருக்கும். கீரைகளை சமைப்பதற்கு முன்பு 20 நிமிடங்கள் நீரில் அலசவேண்டும். அப்படி செய்வதன்மூலம் அதில் உள்ள மண் சுத்தப்படுத்தபடும். அத்துடன் அதில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளின் வீரியமும் குறையும். குறிப்பாக கீரைகளைப் பொரிக்கவோ நீண்ட நேரம் வேகவைக்கவோ கூடாது. அதேநேரம் போதுமான அளவு வெந்திருக்கவேண்டும். அதற்கு சிறிது தண்ணீர் ஊற்றினாலே போதுமானது.
இரவில் கீரையை சாப்பிடக்கூடாது. ஏனெனில் சீரணிக்க நேரமாகும் என்பதால் கீரையை இரவில் தவிர்த்துவிட வேண்டும். மழை வெயில் உள்ளிட்ட அனைத்து காலங்களிலும் கீரைகளைச் சாப்பிடலாம். நேரத்திற்கு தகுந்தவாறு கீரையை அப்போது தேர்ந்தெடுக்க வேண்டும்.
இன்று குழந்தைகள் கீரையை விரும்பி உண்ண வேண்டும் என்பதற்காக முட்டையை சேர்த்து பொரிக்கிறார்கள். அப்படி செய்யக்கூடாது. ஏனெனில் இப்படி கீரையோடு முட்டையை சேர்ப்பதால் மலச்சிக்கலை உருவாக்கும். அதே போல் கீரையுடன் பால், தயிர் அசைவம் போன்றவற்றை சேர்த்து உண்பது வயிற்று பிரச்சனைகளை உருவாக்கும். சுவைக்காக கீரையோடு பருப்பு சேர்க்கலாம். ஆனால் அதன் அளவு குறைவாக இருப்பது நல்லது.
அன்றாடம் கிடைக்கும் சிறுநகீரை, முளைக்கீரை, சாணக்கீரை, சிறுபசலைக்கீரை, அரைக்கீரை, புளியக்கீரை, மிளகு தக்காளி கீரை, இலட்சக்கெட்டை கீரை, பொன்னாங்கன்னி கீரை, சிறுகீரை. தவசி கீரை, தண்டு கீரை, ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலம் உடல் ஆரோக்கியம் பெறும். என்ன கீரை வாங்க புறப்பட்டுட்டீங்களா!