காலையில் வெறும் வயிற்றில் நாம் உண்ணும் உணவு எப்போதும் சத்தானதாக இருக்க வேண்டும். ஏனெனில் கிட்டத்தட்ட 8 மணி நேரமாக நாம் எந்த உணவையும் எடுத்துக்கொள்ளாமல் இருந்திருப்போம்.
இதனால் நமது வயிறு காலியாக இருக்கும். இந்த சமயத்தில் நாம் ஆரோக்கியம் இல்லாத உணவுகளை எடுத்துக்கொள்வது உடலுக்குத் தீங்கு விளைவிக்கலாம்.
மேலும் நமது நாளின் துவக்கமாக காலை வேளை இருப்பதால் அப்போது நாம் எடுத்துக்கொள்ளும் ஆரோக்கியமற்ற உணவுகள் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம், இதனால் அன்றைய நாள் உங்களுக்கு மோசமானதாக அமைந்துவிடலாம்.
வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுவது
எப்போதும் வெறும் வயிறாக இருக்கும்போது ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. சில ஆரோக்கியமான எளிய பழங்கள் இதற்கு உதவலாம்.
இதற்குப் பருவக்கால பழமான பப்பாளி ஒரு சிறந்த பழமாகும். இதன் வாசனை காரணமாக சிலருக்கு இது பிடிப்பதில்லை என்றாலும் பப்பாளி பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது, மேலும் அதை வெறும் வயிற்றில் உண்பது மூலம் நாம் பல நன்மைகளைப் பெற முடியும்.
இது குறைந்த அளவில் கலோரிகளை கொண்டிருந்தாலும் அதிக அளவில் நார்ச்சத்துக்களை கொண்டுள்ளது, இதனால் உடல் எடையைக் குறைக்கவும் கொழுப்பைக் கட்டுப்படுத்தவும் பப்பாளி உதவுகிறது.
மேலும் வெறும் வயிற்றில் ஒரு கப் பப்பாளி சாப்பிடுவது வயிற்றுக்கு பல நன்மைகளை செய்கிறது. இது செரிமான பாதையில் உள்ள நச்சுக்களை அழித்து குடல் இயக்கத்தைச் சீராக்குகிறது.
மேலும் வயிறு உப்புசம், வயிறு கோளாறு மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை சரி செய்யவும் பப்பாளி உதவுகிறது.
பப்பாளி எப்படி உதவுகிறது?
வைட்டமின் ஏ மற்றும் சி யை பப்பாளி அதிகமாக கொண்டுள்ளது, மேலும் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது உதவுகிறது.
இந்த கொரோனா காலத்தில் நாம் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முக்கியமாகும். நாம் பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது இது தொற்றுநோய்களைத் தடுக்க உதவுகிறது.