சமைக்கும் போது காய்கறிகளை வெட்ட காய்கறி பலகையைப் பயன்படுத்துவோம். ஆனால் அப்படி பயன்படுத்தும் பலகையை காய்கறிகளை வெட்டிய பின் சரியாக பராமரிக்கமாட்டோம். இதனால் பலகையானது கருமையாக இருக்கும். மேலும் அவ்விடத்தில் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் தங்கி, அதன் மூலம் உடலில் பிரச்சனைகளை சந்திப்போம்.
ஆகவே இந்த பிரச்சனைகளை எல்லாம் தவிர்க்க காய்கறிகளை நறுக்கியப் பின் அந்த பலகையை அவ்வப்போது நீரில் நன்கு கழுவிவிடுவதோடு, இரவில் படுக்கும் முன், அதனை ஒருசில இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி தேய்த்து கழுவிவிட்டால், அதனை சுத்தமாகவும், புதிது போன்றும் வைத்துக் கொள்ளலாம்.
சரி, இப்போது காய்கறி வெட்டும் பலகையை சுத்தப்படுத்த எந்த பொருட்களையெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
எலுமிச்சை சாறு
வாழைத்தண்டு, பீட்ரூட் போன்றவற்றை காய்கறி பலகையின் மீது வைத்து நறுக்கிய பின், கறைகளானது படியும். அத்தகைய கறைகளைப் போக்க சிறிது எலுமிச்சை சாற்றினை கறைகளின் மீது தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் எலுமிச்சை துண்டு கொண்டு பலகையை நன்கு தேய்த்தால், பலகையில் உள்ள கறைகள் நீங்கிவிடும்.
வினிகர்
காய்கறிகளை நறுக்கி பலகையானது மஞ்சள் நிறத்தில் காணப்படும். அத்தகைய கறைகளைப் போக்க 2 டேபிள் ஸ்பூன் வினிகரை ஒரு கப் நீரில் கலந்து, பின் அந்த பலகையை அதனுள் 10 நிமிடம் ஊற வைத்து, சோப்பு பயன்படுத்தி தேய்த்து கழுவினால், கறைகள் அகலும்.
உப்பு
காய்கறி வெட்டும் பலகையில் உள்ள கருமையான கறைகளைப் போக்க எலுமிச்சையை உப்பில் தொட்டு தேய்த்தால், கறைகள் எளிதில் போய்விடும்.
புளிச்சாறு
புளிச்சாற்றில் உப்பு சேர்த்து கலந்து, அதனைப் பயன்படுத்தி, கறைகள் படிந்த காய்கறி பலகையை நன்கு தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து, பின் மீண்டும் தேய்த்தால், கறைகள் சீக்கிரம் நீங்கும்.