பொதுவாகவே எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டி முக்கியமானது என்பது அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த ஒன்று தான். எலும்புகளுக்கு வலு சேர்ப்பதோடு மட்டும், வைட்டமின் டி-யின் நன்மைகள் நின்றுவிடாது. கோவிட்-19 தொற்றுநோய் பரவத் தொடங்கிய பின்பு, வைட்டமின் டி குறித்த பரபரப்பான விவாதங்கள் அதிகரித்து விட்டன என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில், இதுபோன்ற காலங்களில் சூரியனின் வெளிப்பாடு வெகுவாக குறைந்துவிட்டது. தொற்றுநோயில் இருந்து தப்பிக்க வீட்டிலேயே இருந்ததன் விளைவு தான் இது. வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் எலும்புகள் பாதிக்கக்கூடும். அது ஒட்டுமொத்த உடலுக்குமே தீங்கு விளைவிக்கும்.
தி ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, கர்ப்ப காலத்தில் தாய்மார்களின் வைட்டமின் டி அளவானது, அவர்களின் குழந்தைகளின் ஐ.க்யூ உடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது. கர்ப்பத்தில் அதிக வைட்டமின் டி அளவு இருந்தால், குழந்தைகளின் ஐ.க்யூ மதிப்பும் அதிகரிக்க வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு தாயின் வைட்டமின் டி சத்து தனது குழந்தைக்கு கருப்பையின் மூலமாக அனுப்பப்படுகிறது. அதனால், மூளை வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகளை சீராக்க உதவுகிறது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
வைட்டமின்-டி குறைபாடு
சியாட்டில் குழந்தைகள் ஆராய்ச்சி நிறுவனத்தின் குழந்தை சுகாதாரம், நடத்தை மற்றும் மேம்பாட்டுத் துறையின் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி விஞ்ஞானியின் முதன்மை எழுத்தாளரான மெலிசா மெலோஃப் கூறுகையில், வைட்டமின் டி குறைபாடானது, பொது மக்களிடமும் கர்ப்பிணிப் பெண்களிடமும் பொதுவாக காணப்படக்கூடிய ஒரு பிரச்சனை. ஆனால், இந்த பிரச்சனையானது கறுப்பின பெண்களுக்கு அதிகமாக ஏற்படக்கூடும். ஏனென்றால், சருமத்தில் உள்ள மெலனின் என்ற நிறமி சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. ஆனால், அந்த நிறமி புற ஊதா கதிர்களையும் சேர்த்து தடுப்பதன் மூலம், சருமத்தில் வைட்டமின் டி உற்பத்தியையும் குறைக்கிறது. ஆய்வின் படி, அமெரிக்காவில் கறுப்பின கர்ப்பிணிப் பெண்களின் சுமார் 80 சதவிகிதம் பேருக்கு வைட்டமின் டி குறைபாடு இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
கர்ப்பிணிப் பெண்களில் வைட்டமின்-டி குறைபாடு
* ஆய்வில் பங்கேற்ற பெண்களில், சுமார் 46 சதவிகித தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் வைட்டமின் டி குறைபாடுடையவர்களாகவும், வெள்ளை பெண்களுடன் ஒப்பிடும் போது கறுப்பின பெண்களிடையே வைட்டமின் டி அளவு குறைவாக இருந்ததும் கண்டறியப்பட்டது.
* ஆராய்ச்சியாளர்கள் 2006 ஆம் ஆண்டு முதல் கர்ப்பிணிப் பெண்களை இது தொடர்பான ஆய்வில் பங்கேற்க செய்தனர். மேலும், அவர்களின் குழந்தைகளின் உடல்நலம் மற்றும் வளர்ச்சி குறித்த தகவல்களை காலப்போக்கில் சேகரித்து வந்தனர். ஐ.க்யூ தொடர்பான பல காரணிகளைக் கட்டுப்படுத்திய பின்னர், கர்ப்பத்தில் அதிக வைட்டமின் டி அளவு கொண்ட தாய்மார்களின் 4 முதல் 6 வயதான குழந்தைகளுக்கு அதிக IQ உடன் தொடர்புடையது தெரியவந்தது.
* இதுப்போன்ற ஆய்வுகளால் சரியான காரணத்தை நிரூபிக்க முடியாது என்றாலும் கூட, அவற்றால் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்கள் மிகவும் முக்கியமான தாக்கங்களைக் கொண்டுள்ளன என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இத்தகைய ஆராய்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்க முடியும் என்றும் ஆராய்ச்சி குழு நம்புகிறது.
வைட்டமின் டி நிறைந்த உணவுகள்
அதிக அளவு வைட்டமின் டி நிறைந்த உணவுகளில் மீன், முட்டை மற்றும் பசுவின் பால் மற்றும் சீரியல்ஸ் போன்றவை அடங்கும். அது தவிர பின்வரும் உணவுகளிலும் வைட்டமின் டி சத்து அதிகம் நிறைந்துள்ளது.
சால்மன்
சால்மன் சிறந்த கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒன்றாக அறியப்படுகிறது. இது உங்களுக்கு தேவையான அளவு வைட்டமின் டி-யை தருகிறது. உங்கள் உடலில் வைட்டமின் டி குறைபாடு இருந்தால், சால்மன் மீனை வறுத்தோ அல்லது வெறுமனே சுட்டோ கூட சாப்பிடலாம். நிச்சயம் நல்ல பயனளிக்கும்.
முட்டை மஞ்சள் கரு
மீன் பிடிக்காதவர்களுக்கு, மிகச் சிறந்த மாற்று உணவுகளில் ஒன்று தான் முட்டையின் மஞ்சள் கரு. முட்டையின் வெள்ளைக்கருவில் பெரும்பாலான புரதங்கள் காணப்பட்டாலும், கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை அனைத்தும் மஞ்சள் கருவில் தான் அதிகம் காணப்படுகின்றன.
காட் லிவர் எண்ணெய்
காட் லிவர் எண்ணெய் மீன் பிடிக்காதவர்களுக்கான மற்றொரு சிறந்த மாற்று உணவாகும். வைட்டமின் டி குறைபாடு வரும் போது மீன் எண்ணெய் மிகவும் முக்கியமானது தான். இருந்தாலும் காட் லிவர் எண்ணெயை உட்கொள்வதும் நல்லது. இது வைட்டமின் ஏ-யின் அருமையான மூலமாகும்.
கர்ப்ப காலத்தில் வைட்டமின் டி-யின் பங்கு
நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது, உங்கள் குழந்தைக்கான வைட்டமின் டி பிரத்யேகமாக தாயின் மூலமாக தான் பெறப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு காணப்படும் வைட்டமின் டி குறைபாடு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். ஏனென்றால், கர்ப்ப காலத்தில் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தையின் எலும்புகள் வேகமாக வளரச்கூடும். கால்சியம் மற்றும் பாஸ்பேட் அளவைக் கட்டுப்படுத்துவதில் வைட்டமின் டி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, எதிர்காலத்தில் உங்கள் குழந்தைக்கு உதவக்கூடிய போதுமான அளவு வைட்டமின் டி-யை உட்கொள்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம்.
முடிவுரை
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான உகந்த அளவு வைட்டமின் டி குறித்து தீர்மானிக்க கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது. இருப்பினும், கர்ப்பிணிப் பெண்களுக்கான ஊட்டச்சத்து பரிந்துரைகளை உருவாக்க இந்த ஆய்வு பெரிதும் உதவும் என்று முதன்மை எழுத்தாளர் மெலோ நம்புகிறார்.