பிறந்தது முதல் நாம் ஒன்றை சுவைக்க தொடங்குகிறோம் என்றால் அது பாலை தவிர வேறெந்த பொருள் அல்லது உணவாகவும் இருக்க முடியாது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் 6 மாதத்தில் இருந்து பசும்பாலை குடிக்க தாய்மார்கள் பழக்குவர் . தாய் பால் இல்லாத குழந்தைகளுக்கு பிறந்தது முதல் பசும் பாலை கொடுக்க தொடங்குவர். அந்த அளவுக்கு தாய்ப்பாலுக்கு அடுத்தது ஒவ்வொருவரும் பருகத் தொடங்கியது பசும் பாலை தான்.
பால் என்பது கால்சியம் மற்றும் வைட்டமின் டி யின் ஆதாரமாகும். உடலுக்கு தேவையான ஒரு முழு உணவாக பார்க்கப்படுவது பால். உடல் எடையை பாதுகாக்கவும், கலோரிகளை எரிக்கவும் பால் உதவுகிறது.
அதிக பட்சம் நமக்கு தெரிந்ததெல்லாம் ஆவின் பால் , பசும்பால் மற்றும் எருமை பால். ஆவின் பாலின் வருகைக்கு முன்பு, எல்லோர் வீடுகளிலும் பசும் பால் மற்றும் எருமை பால் தான் இருக்கும். இப்போது தான் வீட்டுக்கு வீடு பைகளை கட்டி தொங்கவிட்டு, பால்காரர் காலையில் அந்த பையில் பாக்கெட் பாலை கொண்டு வந்து போட்டு விட்டு செல்கிறார்.
பசும்பால் மற்றும் எருமை பாலுக்கான வித்தியாசத்தை பற்றி தெரியுமா உங்களுக்கு? அதனை பற்றி தெரிந்து கொள்வதற்கு தான் இந்த தொகுப்பு.
இரண்டு பாலுமே குடிப்பதற்கு பாதுகாப்பானதுதான். நமது உடலுக்கு எந்த பால் ஏற்று கொள்கிறதோ அதனை தொடர்ந்து குடித்து வரலாம். இதில் வேறு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. இப்போது அதன் வேறுபாடுகளை நாம் இங்கே பார்க்கலாம்
சத்துக்கள் : எருமை பாலில் புரதத்தின் அளவு அதிகமாக உள்ளது. கொழுப்பு சத்தும் எருமை பாலில் அதிகமாக உள்ளதால், கலோரி அளவும் அதிகரித்தே காணப்படுகிறது. பசுவின் பாலில் நீர் அதிகம் இருக்கும். பசும்பால் 90% நீர்தன்மையுடன் இருக்கும். எருமை பாலில் கால்சியம், பாஸ்போரோஸ் , மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் காணப்படுகிறது
பசும் பால் : புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டின் கலவை இரண்டு பளக்கும் வெவ்வேறு அளவில் உள்ளது. எருமை பாலை விட குறைந்த கொழுப்பு கொண்டது பசுவின் பால். பசுவின் பால் எளிதில் ஜீரணமாக கூடியது. இதனால் தான் பச்சிளங் குழந்தைகளுக்கும் இதனை உணவாக கொடுக்க முடிகிறது.
எருமைப் பால் : எருமை பால் அடர்த்தி அதிகம் நிறைந்ததாக உள்ளது. ஆகவே திட பொருட்களான பன்னீர் , கீர் , குல்ஃபீ, தயிர், நெய் போன்றவற்றை தயாரிப்பதற்கு எருமை பால் பயன்படுகிறது. ரசகுல்லா, ரசமலாய் போன்றவை செய்ய பசுவின் பால் பயன்படுத்தப்படுகிறது.
எந்த பால் விரைவில் கெடாது ? பசுவின் பாலை 1 அல்லது 2 நாட்கள் வரை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் எருமை பாலை நீண்ட நாட்கள் கெடாமல் பயன்படுத்த முடியும்.
எதனை குடிக்கலாம்? எருமை பாலோ, பசுவின் பாலோ, எதுவாக இருந்தாலும் அதனை நமது விருப்பத்திற்கு ஏற்ப அருந்தலாம். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படும். பாக்கெட் பாலுக்கு பதில் கறந்த மாட்டு பாலை வாங்கி பயன்படுத்துவதால், அதன் முழு சுவை மற்றும் நற்பலன்களை நாம் அனுபவிக்க முடியும். இதனால் பால் விற்பனையாளர்களும் பயனடைவர்.