உடல் எடை அதிகரிப்பு, ஒபிசிட்டி என்று அழைக்கப்படும் உடல் பருமனுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. உணவு கட்டுப்பாடு இன்மை, உரிய நேரம் தவறி சாப்பிடுவது, எப்போதும் நொறுக்கு தீனிகளை தின்று கொண்டே இருப்பது போன்றவை உடல் பருமன் என்கிற நிலையை உருவாக்கி விடுகிறது. அதே நேரத்தில் தைராய்டு சுரப்பி பாதிப்பு காரணமாகவும், சர்க்கரை நோய் பாதிப்பு காரணமாகவும், மன அழுத்தம் போன்றவையும் உடல் எடையில் மாறுபாடு தோன்ற வாய்ப்பு உள்ளது.
நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் தக்காளியை பயன்படுத்தி உடல் எடையை குறைக்க பயன்படுத்தும் மருந்தை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் தக்காளி பழம், மிளகு பொடி, நல்லெண்ணை, உப்பு. இரண்டு தக்காளி பழத்தை விழுது போல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பாத்திரத்தில் சிறிது அளவு நல்லெண்ணை எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் விழுதை இதனுடன் சேர்க்க வேண்டும்.
இதை தேவையான அளவு வதக்க வேண்டும். இதனுடன் சிறிதளவு மிளகு பொடி, மற்றும் உப்பு சேர்த்து தேவையான அளவு நீர் சேர்க்க வேண்டும். இதை நன்றாக கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை வடிகட்டாமல் அப்படியே எடுத்துக் கொள்ளலாம். இதை தினமும் ஒரு வேளை பருகி வருவதன் மூலம் உடல் எடை குறையும். அதே போல் தக்காளியைப் போலவே மங்குஸ்தான் பழத்தை பயன்படுத்தியும் உடல் எடையை குறைக்கும் மருந்தை நாம் தயார் செய்யலாம்.
மங்குஸ்தான் பழம் பழங்களின் அரசி என்று சொல்லப்படுவதுண்டு. மங்குஸ்தான் பழத்தை பொறுத்த அளவில் உள்ளிருக்கும் வெள்ளை நிற சதைப்பகுதியையே உண்பது வழக்கம். ஆனால் மங்குஸ்தான் பழத்தின் தோல் உடல் எடையை குறைப்பதில் மிக சிறந்த முறையில் செயலாற்றுகிறது. மேலும் டயாரியாவையும் தோல் கட்டுப்படுத்துகிறது. மங்குஸ்தான் பழத்தின் தோலை எடுத்து கொள்ள வேண்டும்.
இதனுடன் சிறிதளவு மிளகு பொடி சேர்க்க வேண்டும். ஒரு டம்ளர் அளவுக்கு தேவையான நீர் சேர்க்க வேண்டும். இதை நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ளலாம். இதை தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் பருகி வருவதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.