உடலில் இரத்தம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. உடலில் உள்ள இரத்தம் ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் இருந்தால் தான், உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜன் கிடைப்பதோடு, ஊட்டச்சத்துக்களும் கிடைத்து, உடல் உறுப்புக்களின் செயல்பாடு சிறப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
என்ன தான் இரத்தம் உடலில் இயற்கையாக சுத்திகரிக்கப் பட்டாலும், நாம் உண்ணும் சில உணவுகளால் அசுத்தமாகத் தான் செய்கிறது. இதனைத் தவிர்க்க இரத்தத்தை சுத்தம் செய்யும் செயல்களை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். உடலில் இருக்கும் இரத்தத்தை ஒருசில உணவுப் பொருட்கள் சுத்தம் செய்யும். இப்படி இரத்தத்தை சுத்தம் செய்யும் செயல்முறையின் போது நோயெதிர்ப்பு மண்டலமும் மேம்பட்டு, சரும ஆரோக்கியமும் ஊக்குவிக்கப்படும்.
இங்கு இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றை தொடர்ந்து ஒரு வாரம் அன்றாட உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தை விரைவில் சுத்தம் செய்ய முடியும். சரி, இப்போது அந்த உணவுகள் எவையென்று பார்ப்போமா!
அவகேடோ
அவகேடோ பழம் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுவதோடு, இரத்த நாளங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளும். இதற்கு அவகேடோ பழத்தில் உள்ள க்ளுடாதியோன் தான் காரணம். இது புற்றுநோயை உண்டாக்கும் பொருட்களையும் வெளியேற்றும். மேலும் அவகேடோவில் உள்ள வைட்டமின் ஈ, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
ஆப்பிள்
மிகவும் ஆரோக்கியமான பழமாக கருதப்படும் ஆப்பிள் சளியில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு, அசிடிட்டியைக் குறைக்கும் மற்றும் இரத்தத்தையும் சுத்தம் செய்யும். இப்பழத்தினுள் அடங்கியுள்ள சத்துக்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அதிலும் ஆப்பிளை தோலுடன் தான் சாப்பிட வேண்டும். அதில் தான் பெக்டின் என்னும் நார்ச்சத்து உள்ளது. இது தான் உடலில் இருந்து கனமான மெட்டல் பொருட்களை அகற்றும்.
பூண்டு
பூண்டில் இவ்வளவு தான் நன்மை அடங்கியுள்ளது என்றில்லை. இதன் மருத்துவ குணத்தால், இதனைக் கொண்டு பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம். அப்படிப்பட்ட பூண்டு இரத்தத்தை சுத்தம் செய்யாதா என்ன? இதற்கெல்லாம் முக்கிய காரணம் பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் உட்பொருள் தான். ஆகவே இரத்தத்தை சுத்தம் செய்ய பூண்டுகளை உணவில் சேர்ப்பதோடு, தினமும் ஒன்றை பச்சையாக சாப்பிடுங்கள்.
பச்சை இலைக் காய்கறிகள்
பச்சை இலைக் காய்கறிகளல் குளோரோபில் ஏராளமான அளவில் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை உறிஞ்சி வெளியேற்ற உதவும். அதோடு இது கல்லீரலையும் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். அதற்கு பச்சை இலைக் காய்கறிகளை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடலாம்.
பீட்ரூட்
பீட்ரூட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாகவும், வைட்டமின்களான ஏ, சி, மக்னீசியம், இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து போன்றவைகளும் அடங்கியுள்ளது. இப்படிப்பட்ட பீட்ரூட் பீட்டாசையனின் நிறமியால் தான், அடர் சிவப்பு நிறத்தில் உள்ளது. இந்த நிறமி, கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்க உதவுவதோடு, இரத்தத்தை சுத்தம் செய்து, உடல் முழுவதும் சிறப்பாக ஓடவும் உதவி புரியும். மேலும் இதில் இரும்புச்சத்து உள்ளதால், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியும் அதிகரிக்கும்.
ப்ராக்கோலி
காலிஃப்ளவர் போன்றே பச்சை நிறத்தில் இருக்கும் ப்ராக்கோலியில், பொட்டாசியம், வைட்டமின் சி, இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம் போன்றவைகள் அதிகம் உள்ளது. அதோடு இதில் சல்போராபேன் என்னும் பைட்டோகெமிக்கலும் உள்ளது. இது கல்லீரல் நொதிகளைத் தூண்டி, இரத்தத்தை சுத்தம் செய்து, கார்சினோஜென்களை வெளியேற்றும்.
ப்ளூபெர்ரி
ப்ளூபெர்ரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளது. ஆகவே இஇதனை சாப்பிட இரத்தம் சுத்தமாவதோடு, இரத்த அழுத்தம் குறையும், சரும ஆரோக்கியம் மேம்படும், சரும புற்றுநோய் வரும் அபாயமும் குறையும். எனவே ப்ளூபெர்ரி கிடைத்தால், அதைத் தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள்.
கிரேப்ஃபுரூட்
இந்த அற்புதமான பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருட்கள் உள்ளது. இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம் கல்லீரல் சுத்தமாவதோடு, இரத்தமும் சுத்தமாகும். மேலும் இதில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள், ஒட்டுமொத்த உடல் மற்றும் சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இத்தகைய பழத்தை அடிக்கடி ஜூஸ் செய்து குடித்து வந்தால், அது கல்லீரல் நொதிகளை ஊக்குவித்து, டாக்ஸின்கள் மற்றும் கார்சினோஜென்களை வெளியேற்றும்.
மஞ்சள் தூள்
மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. இதற்கு அதில் உள்ள குர்குமின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தான் காரணம். மேலும் இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இதனை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம், இரத்தம் உறைவது தடுக்கப்படுவதோடு, உடலில் இரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்படும். மேலும் மஞ்சள் இரத்தத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடலையும் சுத்தமாக்கும்.
கேரட்
இரத்தத்தை சுத்தம் செய்ய உதவும் சக்தி வாய்ந்த உணவுப் பொருட்களுள் கேரட்டும் ஒன்று. இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் நல்லது. அதற்கு இதனை பச்சையாகவோ, வேக வைத்தோ அல்லது ஜூஸ் வடிவிலோ உட்கொள்ளலாம். ஆனால் கேரட்டை ஜூஸ் வடிவில் எடுப்பது மிகவும் சிறந்தது. இதனால் உடலுறுப்புக்கள் சுத்தமாகும் செயல்முறை ஊக்குவிக்கப்படும்.