இன்றைய பெண்கள் மிக திறமைசாலிகள். இளமைக் காலத்தில் நாம் வளர்த்துக் கொள்ளும் திறமைகள் நமது வாழ்நாள் முழுவதும் நமக்கு பலன் தரக்கூடியது.
இளைய சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டியவை
இன்றைய பெண்கள் மிக திறமைசாலிகள். இலகுவாக புரிந்து கொள்ளும் திறமை படைத்தவர்கள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள்.
புரியாததை புரியவில்லை என்று தயங்காமல் சொல்லக்கூடியவர்கள். கல்வியில் நிரம்ப முன்னேறியுள்ளார்கள். கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்து விட்டதால் உலகில் பல்வேறு நாடுகளில் பணி செய்கிறார்கள்.
மாறுபட்ட சூழலில் வாழ்வதை சிரமமாக நினைப்பதில்லை. பழகி கொள்கிறார்கள். ஆண்களும் பெண்களும் இவற்றில் சரிசமமாக உள்ளனர்.
இவையெல்லாம் நமது இளைய சமுதாயத்தை பற்றிய நல்ல செய்தி. ஆனால் கெட்ட செய்திகளும் உண்டு. புகை பழக்கம், போதை பழக்கம் உள்ளவர்கள் அதிகரிக்கும் அபாயம் தெரிகிறது.
செல்போன் மோகம் அதிகரித்ததால் தடம்புரண்டு போகும் அவல நிலை. உடல் ஆரோக்கியம் பற்றி அக்கறை இல்லை. விளையாட்டில் ஆர்வம் இல்லை.
ஆரோக்கியம் தான் ஒரு மனிதனுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகளிலேயே உன்னதமானது.
மிகப்பெரிய சொத்து. ஆனால் அதன் அருமை அது இல்லாத போதுதான் தெரிகிறது. விளையாட்டாக செய்ய ஆரம்பிக்கும் தவறுகள் பிற்காலத்தில் விடமுடியாத கெட்ட பழக்கமாகி விடுகிறது.
புகைபிடிக்கும் பெரும்பாலோர் அப்படித்தான் சொல்கிறார்கள். உங்கள் மீது பாசமும் நேசமும் கொண்டவர்கள் உங்களையே நம்பியுள்ள நெஞ்சங்களையும் ஒரு கணம் மனதில் கொண்டு வாருங்கள்.
தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். இளமைக் காலத்தில் நாம் வளர்த்துக் கொள்ளும் திறமைகள் நமது வாழ்நாள் முழுவதும் நமக்கு பலன் தரக்கூடியது.
நல்ல நண்பர்கள் ஒருவருக்கு அமைந்துவிட்டால் அதைக் கொண்டு ஏராளமாய் சாதிக்க முடியும். அதேசமயம் கெட்ட நண்பர்களால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடும்.
எனவே நண்பர்கள் வேண்டும், அவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு காரியமும் குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.
காலந்தாழ்ந்து செய்யும் வேலைகள் உரிய பலன் தராது. எனவே நேரந்தவறாமை மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய திறமை.
நம்முடைய இருப்பிடத்தையும், உடைகளையும் பொருட்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
இது சுகாதாரம் மட்டுமன்றி, நம் மீது பிறருக்கு நன்மதிப்பை ஏற்படுத்தும். பிள்ளைகள் மீது பெற்றோர்களின் கண்காணிப்பு மிக அவசியம்.
நம்மை சுற்றி நடக்கும் பல சம்பவங்களில், ஒரு தவறுக்கான சூழல் ஏன் உருவானது என பார்க்கும்போது கண்காணிப்பு இல்லை என்பதே பதிலாக வருகிறது.
எனவே பெற்றோர்கள் தம் பிள்ளைகள் மீது எந்த அளவு பாசம் வைத்துள்ளர்களோ அந்த அளவு கண்காணிப்பும் அவசியம்.
உங்கள் பிள்ளைகள் திறமையானவர்களாக நல்லவர்களாக வருவார்கள் என்று நீங்கள் உறுதியாக நம்புங்கள்.
உன்னால் முடியும் நிச்சயமாக நீ வெல்வாய் என்று நம்பிக்கையை உள்ளங்களில் விதையுங்கள். இது நேர்மறை அணுகுமுறை.
நல்ல பண்பாடு, பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுங்கள். இதன் மூலம் இளைய சமுதாயம் எழுச்சி பெறும் என்பதில் மாற்று கருத்து இல்லை.