இயற்கையான நறுமணப் பொருட்களைக் கொண்டு ஷாம்பூவைத் தயாரிக்க முடியாதா என்று சித்த மருத்துவர் ரங்கசுந்தரியிடம் கேட்டோம்…‘ஏன் முடியாது’ என்ற எதிர்கேள்வியோடு ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கும் முறையைப் பற்றி விளக்குகிறார்.
கூந்தல் என்பது தோலின் அடிப்பகுதியில்(Dermis) காணப்படும் மயிர்க் கால்களிலிருந்து வளரும் இழை வடிவமுடைய ஓர் உயிரியல் பொருளாகும். இந்த முடி என்பது இரண்டு தனிப்பட்ட வடிவங்களைக் குறிப்பிடுகிறது.
முதலாவதாக, தோலுக்கடியிலுள்ள மயிர்க்கால்களையும், தோலிலிருந்து நீக்கப்பட்ட மயிர்க்குமிழ்களையும் குறிக்கிறது. இது முடி விழுந்தவுடனோ அல்லது நீக்கப்பட்டவுடனோ மீண்டும் வளரும் குருத்தணுக்களை (Stem cells) பராமரிக்கிறது. இரண்டாவதாக, தோலின் மேற்புறமுள்ள கடினமான இழைவடிவ மயிர்த்தண்டுகளைக் குறிக்கிறது.
மயிர்த்தண்டின் குறுக்குவெட்டுப் பகுதிகளைத் தோராயமாக மூன்றாகப் பிரிக்கலாம். கூரை ஓடுகளைப் போல ஒன்றின் மேலோன்றாக தட்டையாகவும், ஒல்லியாகவும் உள்ள செல்களின் பல அடுக்குகளைக் கொண்ட புறத்தோல்(Cuticle), பிரம்பு போன்ற கெரட்டின் கற்றைகளை உடைய புறணி(Cortex), மயிரிழையின் நடுவிலுள்ள ஒழுங்கற்ற, திறந்த பகுதிகளை உள்ளடக்கிய அகணி(Medulla).
இன்றைய வாழ்க்கைமுறை, பணிச்சுமை ஆகியவை நமது உடல் மற்றும் உள்ளம் ஆகியவற்றுக்கு பல பிரச்னைகளைத் தருகிறது. அவற்றில் தலைமுடிப் பிரச்னை முக்கியமானது. ரசாயன ஷாம்பூக்களை அளவு தெரியாமல் பயன்படுத்துவதால் பல மோசமான விளைவுகள் ஏற்படுகிறது. அதில் உள்ள சோடியம் லாரில் சல்ஃபேட் (Sodium lauryl sulfate), சோடியம் லாரத் சல்ஃபேட் (Sodium laureth sulfate) போன்ற வேதியியல் பொருட்கள் முடி உதிர்தல், தோல்வீக்கம், நோயெதிர்ப்புக்கேடு, ஒவ்வாமை, கண்புரைக்கேடு போன்றவற்றை ஏற்படுத்தும் என பல ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு மாற்றாக இயற்கையான முறையில் வீட்டிலேயே ஷாம்பூ தயாரித்து பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும்’’ என்பவர், இயற்கையான வழியில் ஷாம்பூ தயாரிக்கும் முறை பற்றி விளக்குகிறார்.
சீயக்காய் ஷாம்பூ
தேவையான பொருட்கள்
சீயக்காய்- 1 கிலோ
செம்பருத்திப்பூ- 50
பூலாங்கிழங்கு – 100 கிராம்
எலுமிச்சை தோல் காய வைத்தது – 25
பாசிப்பருப்பு – கால் கிலோ
மரிக்கொழுந்து – 20 குச்சிகள்
மல்லிகை பூ காய வைத்தது – 200 கிராம்
கரிசலாங்கண்ணி இலை – 3 கப் அளவு.
செய்முறை
மேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் ஷாம்பூவுக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். வெறும் தண்ணீர் மட்டும் விட்டு பேஸ்ட் போல கலந்து தலைக்கு தடவி குளிக்கலாம். இந்த சீயக்காய் ஷாம்பூ அழகாக நுரை வரும். பொடுகை நீக்கும். முடி கருமையாகும். முடி ஈரப்பதத்தோடு இருக்கும். வறண்டு போகாது.இந்த இயற்கை ஷாம்பூ தயாரிக்கப் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்துமே மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்டவை.
சீயக்காய் பலநூறு ஆண்டுகளாக இயற்கை ஷாம்பூவாக பாரம்பரிய மருத்துவ நூல்கள் கூறுகின்றன. இதனுடைய குறைந்த காரத்தன்மை முடியின் இயல்பான எண்ணெய் தன்மையை தக்கவைக்க உதவுகிறது. இதனுடைய கிருமிநாசினித் தன்மையானது பொடுகு போன்ற பரவுநோய்களிலிருந்து முடியைப் பாதுகாக்கிறது. இதில் காணப்படும் சாப்போனின், லேக்டோன், அராபினோஸ், ராம்னோஸ் எனும் மூலக்கூறுகள் முடிக்கு போஷாக்களித்து முடி உதிர்வதிலிருந்து காக்கிறது.
செம்பருத்திப்பூவில் காணப்படும் ஃப்ளேவனாய்ட்கள் மேலும் தயமின், ரிபோஃப்ளேவின், நியாசின், அஸ்கார்பிக் ஆசிட் போன்ற வைட்டமின்கள் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் முடி உதிர்தல், இளநரை, பொடுகு போன்றவற்றை குணமாக்குகிறது.பூலாங்கிழங்கில் உள்ள ஆர்கானிக் அமிலம், ரெசின், க்ளுக்கோசைட், அல்புமின், சைட்டோஸ்டிரொலென்ட், ஃபுரோனாய்ட், 7- ஹைட்ராக்சிகேட்சைனொன் போன்ற பொருட்கள் முடிக்கு வலு சேர்க்கிறது.
எலுமிச்சைத்தோலில் அதன் சாற்றினை விட 5 முதல் 10 சதவிகிதம் அதிகமான கால்சியம் மற்றும் வைட்டமின் சி உள்ளது. இவை முடிக்கு நன்மையையும் உறுதியையும் வழங்குகிறது.பாசிப்பயறில் உள்ள செழுமையான வைட்டமின் A, C மற்றும் தாதுப்பொருட்கள் ஆகியவை முடி பிளத்தல், முடி உதிர்தல் ஆகியவற்றை தடுக்க உதவும்.
மரிக்கொழுந்தில் உள்ள ஏராளமான நறுமண எண்ணெய் முடிக்கு வளமை தருகிறது. மல்லிகைப்பூவில் உள்ள இண்டோல், E-E- ஃபெர்மிசென், Z-3-ஹ்க்செனைல் பென்சோவேட், லினலால் போன்ற வேதிப்பொருட்கள் முடி உதிர்தலைத் தடுத்து பேனை ஒழிக்கிறது.
கரிசாலை, பிருங்கராஜ் என அழைக்கப்படும் இதில் உள்ள ஆல்கலாய்டு, ஃப்ளேவனாய்டு, கிளக்கோசைட், பாலி அசிட்டலீன், ட்ரைடெர்பினாய்ட் போன்றவை முடி, முடியின் வேர்ப்பகுதி இவற்றை நன்கு வளர்க்கிறது’’ என்கிறார்.